‘குப்பையை இங்கயா கொட்டுவாங்க’: தூய்மைப் பணியாளர்களை தாக்கிய திமுக சேர்மனின் கணவர்.. போலீசார் வழக்குப்பதிவு
Author: Babu Lakshmanan18 January 2023, 11:41 am
ஆலங்குளம் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களை தாக்கிய வழக்கில் திமுக சேர்மனின் கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சிறப்பு பேரூராட்சியின் சேர்மனாக திமுகவைச் சேர்ந்த சுதா உள்ளார். இவரது கணவர் மோகன்லால்.
ஆலங்குளம் பேரூராட்சி பகுதியில் அள்ளப்படும் குப்பைகளை தூய்மைப் பணியாளர்கள், புதுப்பட்டி பறம்பு பகுதியில் கொட்டி வருகின்றனர். வழக்கம் போல குப்பையை கொட்டச் சென்ற தூய்மை பணியாளர்களான அஜித் மற்றும் இசக்கி முத்து ஆகியோரை, குப்பைகளை இங்குதான் கொட்டுவீர்களா..? எனக் கேட்டு திமுக சேர்மனின் கணவர் மோகன்லால் தாக்கியுள்ளார். மேலும், அவர்களின் செல்போன்களையும் பறித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, திமுக சேர்மனின் கணவர் தங்களை தாக்கி விட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தூய்மை பணியாளர்கள் சார்பில் போலீசில் நேற்று மனு அளித்தனர். ஆனால், அவர்களின் மனு மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, தங்களின் வழக்கமான பணிகளை புறக்கணித்த தூய்மை பணியாளர்கள் பேரூராட்சி அலுவலகம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை தொடர்ந்து ஆலங்குளம் போலீசார் திமுக பிரமுகர் மோகன்லால் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
0
0