நாங்குநேரியில் மீண்டும் பதற்றம்.. அரிவாள் வெட்டு சம்பவத்தை தொடர்ந்து அடுத்த பகீர் : விவசாயி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!

Author: Udayachandran RadhaKrishnan
13 August 2023, 11:17 am
PEtrol Bomb - Updatenews360
Quick Share

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள பெருந்தெருவை சேர்ந்தவர் அம்பிகா. இவரது மகன் சின்னத்துரை (வயது 17). மகள் பெயர் சந்திரா செல்வி. சின்னத்துரை வள்ளியூரில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.

பள்ளி சென்ற சின்னத்துரை சில மாணவர்கள் சாதி ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் அவரை மனஉளைச்சலுக்கு ஆளாக்கி படிக்க விடாமல் தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளனர்.

இதனால் மனம் உடைந்த சின்னத்துரை பள்ளி செல்ல மறுத்து வீட்டில் இருந்தார். இதுபற்றி அறிந்த பள்ளி நிர்வாகம் சின்னத்துரையை துன்புறுத்திய மாணவர்களை எச்சரித்தது. இந்த கோபத்தில் இரவில் சில மாணவர்கள் சின்னத்துரையின் வீட்டுக்கு சென்று அவரையும், தடுக்க சென்ற தங்கை சந்திரா செல்வியையும் அரிவாளால் வெட்டியது. இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் மொத்தம் 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது.

இந்த சம்பவத்தால் நாங்குநேரி என்ற ஊர் தமிழ்நாடு முழுவதும் பேசும் பொருளாகி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பட நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் என அனைவரும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்த பரபரப்புக்கு மத்தியிலேயே நாங்குநேரியில் வெடிகுண்டு வீசப்பட்ட பகீர் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.

அதாவது நாங்குநேரி அருகே நம்பிநகர் தம்புபுரத்தை சேர்ந்தவர் வானுமாமலை (60). விவசாயி இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.

வானுமாமலை ஜூலை 30ம் தேதி நாங்குநேரி வட்டாட்சியர் அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை கண்ணன் தாக்கி அரிவாளால் வெட்டினார். இதில் காயமடைந்த அவர் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து நான்குனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், கண்ணன் மகன் நவீன் (29) உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல் விவசாயி வானுமாமலையின் பெட்டிக்கடைக்கு தீ வைத்து சேதப்படுத்தியதுடன், அவரது ஓட்டு வீட்டை அடித்து நொறுக்கி 2 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து நாங்குனேரி போலீசார் வழக்குப்பதிந்து கண்ணன் மகன் நவீன் உள்ளிட்ட 6 பேரை தேடி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் பெட்ரோல் குண்டு வீசிய நவீன் மீது ஏற்கனவே கடந்த ஆண்டு இதே நாளில் நாங்குநேரி உதவி காவல் ஆய்வாளர் கணேசனை திருவிழாவின் போது அரிவாளால் வெட்ட முயன்ற வழக்கும், தனிப்பிரிவு காவலராக பணிபுரிந்த சுந்தர் என்பவருக்கு சமூகவலைதளங்களில் கொலை மிரட்டல் விடுத்த வழக்கும் இருப்பதும், அவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்ததும் தெரியவந்துள்ளது.

தற்போது நவீன் உள்பட 6 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். மேலும் அங்கு பதற்றம் ஏற்பட்டதால் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

Views: - 270

0

0