விசாரணைக்கு சென்றவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி ; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!!

Author: Babu Lakshmanan
22 November 2022, 8:47 pm
Quick Share

திண்டுக்கல் ; காவல்துறையின் விசாரணைக்கு வந்தவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கெங்குவார்பட்டி கல்லுப்பட்டி சேர்ந்தவர் செந்தில் (35). இவர் இப்பகுதியில் கொத்தனாராக கட்டிட வேலைக்கு சென்று வருகிறார். இவருக்கு மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், கெங்குவார்பட்டி, வத்தலகுண்டு, கல்லுப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் வீடுகள் கட்டி தருவதாக தொண்டு நிறுவனம் பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்துள்ளது.

இந்நிலையில் தொண்டு நிறுவனத்தில் கட்டிடம் கட்டுவதற்காக கொத்தனார் தேவை என்று கூறியுள்ளனர். இதையடுத்து, செந்தில் அந்த நிறுவனத்திற்கு சென்றுள்ளார். தொண்டு நிறுவன உரிமையாளர்கள், “உங்களுக்கு கட்டடம் கட்டுவதற்கு நாங்கள் பணி தருகிறோம். உங்களது பகுதியில் உள்ள நபர்களையும் சேர்த்து விடுங்கள்,” என்று கூறியுள்ளனர்.

இதற்கு முன்பணமாக சில ஆயிரம் பொதுமக்களிடம் வசூல் செய்ய சொல்லியுள்ளனர். இதை நம்பிய செந்தில் தனக்கு தெரிந்தவர்களிடம் தொண்டு நிறுவனம் வீடு கட்டித் தருகிறார்கள் என்று கூறி, பணத்தை வாங்கி தொண்டு நிறுவனத்தில் கட்டியுள்ளார். பொது மக்களிடம் வசூல் செய்த தொகையுடன் தொண்டு நிறுவனம் அதன் உரிமையாளர்கள் தலைமறை ஆகிவிட்டனர்.

வீடுகள் கட்டி தராதால் பணம் கொடுத்தவர்கள் செந்திலிடம் பலமுறை கேட்டுள்ளனர். இதையடுத்து செந்தில் மீது நிலக்கோட்டை காவல் நிலையத்தில் ஏமாந்த பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

இன்று நிலக்கோட்டை காவல் துறை துணை கண்காணிப்பாளர் செந்திலை விசாரணைக்காக வரச் சொல்லியுள்ளார். தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் விசாரணைக்கு சென்ற செந்தில் காவல் நிலையத்தில் மயங்கி விழுந்தார். காவல் துறையினர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் விஷம் அருந்தி இருப்பதாக தெரிவித்தனர். மேலும், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து நிலக்கோட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர் விசாரணை நடத்தி வருகின்றது.

Views: - 375

0

0