பெற்ற தாயிடம் ‘பட்டா‘வை திருடிய மகன் : ரூ.2 லட்சம் பேரம் பேசுவதாக தாய் கண்ணீர் மல்க புகார்!!

By: Udayachandran
5 October 2020, 11:35 am
Old Mother - updatenews360
Quick Share

கோவை : தன்னிடமிருந்த பட்டாவை பறித்து விட்டதாகக் கூறி மூதாட்டி ஒருவர் மகன் மற்றும் மருமகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

கோவை அரசூர் பகுதியை சேர்ந்தவர் சின்னக் கண்ணாள் இவர் இன்று காலை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

நான் அரசூர் கிராமத்தில் 70 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். கணவனால் கைவிடப்பட்ட நிலையில் அரசு கொடுக்கும் உதவித்தொகை மூலமாக 40 ஆண்டுகளாக தனிமையில் இருக்கிறேன். எனது மகன் ராமசாமி. எனது பெயரில் அரசு பட்டா இடம் வழங்கி உள்ளது.

இந்த நிலையில் நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது எனது மகன் ராமசாமி மற்றும் மருமகள் மகேஸ்வரி ஆகிய இருவரும் எனது வீட்டிற்கு வந்து என்னை பார்ப்பது போல் பார்த்து விட்டு பட்டாவை எடுத்துச் சென்றுவிட்டனர்.

சிறிது நாட்களுக்குப் பிறகு எனது வீட்டில் பட்டாவை தேடியபோது அது கிடைக்கவில்லை. தொடர்ந்து நான் அதை எனது மகனிடம் கேட்ட பொழுது ரூ.2 லட்சம் கொடுத்தால்தான் பட்டாவை கொடுப்பேன் என்று தகராறு செய்கின்றனர்.

இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளேன். எனது உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே இந்த மனுவை பரிசீலித்து பட்டாவை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு மூதாட்டி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 51

0

0