திமுக பிரமுகருக்கு கொரோனா.! பிறந்தநாளை முன்னிட்டு கறிவிருந்தில் பங்கேற்றவர்கள் அதிர்ச்சி.!!

23 June 2020, 3:48 pm
dmk Birthday Issue - Updatenews360
Quick Share

திருவள்ளூர் : கும்மிடிபூண்டியில் திமுக பொதுக்குழு உறுப்பினருக்கு கெரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் ஊரடங்கின் போது 50வது பிறந்தநாளை கறிவிருந்துடன் கொண்டாடிய காட்சிகள் வாட்ஸ்அப் சமூக வலைதலங்களில் பரவி வருவதால் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் மாதர்பாக்கம் மாநெல்லூர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் இவர் திமுகவின் பொதுக்குழு உறுப்பினராகவும் இவரது மனைவி மாலதி குணசேகரன், தற்போது கும்முடிபூண்டி ஒன்றியக்குழு துணைத் தலைவராகவும் பதவியில் உள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக ஒன்றிணைவோம் வா நிகழ்ச்சி மூலம் கும்மிடிப்பூண்டி பொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் திமுக சார்பில் மாவட்ட செயலாளர் வேணுவுடன் இணைந்து பல்வேறு நலத்திட்ட நிவாரண உதவிகளை ஊராடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குணசேகரன் செய்துவந்த நிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு நோய் தொற்று உறுதியானதால் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .

மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னர், இவர் தனது 50வது பிறந்தநாளை தனக்கு சொந்தமான மாந்தோப்பில் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிப் பிரமுகர்களை அழைத்து நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களுடன் போதிய சமூக இடைவெளி கடைபிடிக்காமல் முகக் கவசங்கள் கூட அணியாமல் கறி விருந்து வைத்து பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார்.

அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் பிறந்த நாள் கொண்டாடிய காட்சிகள் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது . பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளூர் முக்கிய கட்சி பிரமுகர்கள் என பல்வேறு நபர்கள் கலந்து கொண்டதால் அவர்களுக்கும் ஏதேனும் வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்குமா என்பது குறித்தும் சுகாதாரத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஊரடங்கினை மீறி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக ஆரம்பாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வாட்ஸ் அப்பில் பரவிய வீடியோவைக் கொண்டு 50 பேரை போலீசார் அடையாளம் கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

வரும் சட்டசபை தேர்தலை ஒட்டி வேண்டுமென்றே அரசியல் காழ் புணர்ச்சி காரணமாக சிலர் இதை பரப்பிவருவதாகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவர் குணமாகி வீடு திரும்புவார் என்றும் திமுக கட்சியை சேர்ந்தவர்கள் நம்பிக்கை தெரிவித்தாலும் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் தற்போது தங்களுக்கும் கொரானா வைரஸ் தொற்று பரவி இருக்குமோ என்ற அச்சத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.