இதுவே கடைசி… பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு : கையாலாகாத திமுக… அண்ணாமலை கடும் எச்சரிக்கை!!!

Author: Udayachandran RadhaKrishnan
11 June 2023, 7:03 pm
Army - Updatenews360
Quick Share

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே படவேடு கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் பிரபாரகன். இவரது மனைவி கீர்த்தி படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் ஆலயம் எதிரில் குன்னத்துர் கிராமத்தை சேர்ந்த ராமு என்பவரின் கடையை மேல் வாடகைக்கு எடுத்து பேன்ஸி ஸ்டோர் நடத்தி வந்துள்ளார்.

இதனிடையே கடையை காலி செய்ய ராமு வற்புறுத்தியதாகவும், கடைக்கு கொடுத்த 16 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி கொடுக்க ராணுவ வீரர் பிரபாகரனின் மனைவி ராமுவை கேட்டதாக தெரிகிறது. இதில், நேற்று முன்தினம் ராமு என்பவர் சிலருடன் வந்து பேன்ஸி ஸ்டோரில் இருந்த பொருட்களை வீசி எரிந்து கடையை காலி செய்துள்ளதாக தெரிகின்றன.

கடையை காலி செய்ய பல நாட்கள் தவணை கொடுத்தும் காலி செய்ய மறுத்ததால் கடையில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்தியதாகவும் அப்போது கீர்த்தியின் சகோதரர் ஜீவா என்பவர் ராமுவை கத்தியால் தாக்கியதாகவும், இந்த சம்பவத்தில் ராணுவ வீரர் மனைவி கீர்த்தியும் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருதரப்பினரும் சந்தவாசல் காவல் நிலையத்தில் பரஸ்பர புகார் அளித்துள்ள நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே தன் மனைவி கீர்த்தி மீது எதிர்தரப்பினர் தாக்குதல் நடத்தியதாகக் கூறி ராணுவ வீரர் பிரபாகரன் ஜம்முவில் இருந்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு வீடியோ மூலம் புகார் தெரிவித்தார்.

அந்த வீடியோவில், “திருவண்ணாமலை மாவட்டம் படவேடு கிராமத்தில் எனது மனைவி கடை வைத்துள்ளார். அந்த இடம் அறநிலையத் துறைக்கு சொந்தமானது. அந்த இடத்தை காலி செய்யக் கோரி என் மனைவியை ரத்தம் வரும்படி அடித்துள்ளனர். 120 பேர் சூழ்ந்துகொண்டு தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக எஸ்.பிக்கு புகார் அனுப்பியுள்ளேன். நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறியுள்ளனர்.

என் மனைவியை அரை நிர்வானமாக்கி மிகவும் மோசமாக அடித்து இருக்கிறார்கள் இது எந்த உலகத்தில் நியாயம் என்று கேட்டு காப்பாற்ற கூறி காஷ்மீரில் பணியில் இருக்கும் இராணுவ வீரர் மண்டியிடும் பரிதாப நிலை.@tnpoliceoffl உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உள்ளூர் காவல் நிலையத்தில் கூறியதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். போகிற இடத்தில் எல்லாம் அடிக்கிறார்களாம். என் மனைவியை அரை நிர்வாணமாக்கி அடித்திருக்கிறார்கள். எப்படியாவது என் மனைவியை காப்பாற்றுங்கள்.. ராணுவ வீரனாக இருந்துகொண்டு கீழே விழுந்து கேட்கக் கூடாது. ஆனாலும் கேட்கிறேன். என் குடும்பத்தினரை காப்பாற்றுங்கள்” என்று மண்டியிட்டு கூறுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் அண்ணாமலை. தனது ட்விட்டர் பக்கத்தில், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா படவேடு கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஹவில்தார் திரு பிரபாகரன் அவர்கள், தனது மனைவி மற்றும் குடும்பத்தினர் மீது, 120க்கும் மேற்பட்ட கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளியிட்டுள்ள காணொளி கண்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையில் புகார் கொடுத்தும், தீர விசாரிக்காமல், பூசி மெழுகப் பார்க்கிறது காவல்துறையின் விளக்கம்.

இந்தத் திறனற்ற திமுக அரசு, பிரிவினைவாதிகளுக்கும் சமூக விரோதிகளுக்கும் மட்டுமேயான அரசாக இருக்கிறது, சாதாரணப் பொதுமக்களுக்கான அரசாக இல்லை. இவர்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ராணுவ வீரரை அடித்துக் கொல்வதும், அவர்கள் குடும்பத்தினருக்குக் கொலை மிரட்டல் விடுப்பதும், கடுமையான நடவடிக்கை இன்றி, மிகச் சாதாரண நிகழ்வாகக் கடந்து செல்கிறது.

தங்கள் சுக துக்கங்களைத் தொலைத்து, தேசத்தைப் பாதுகாக்கும் உன்னதப் பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கு, நன்றி கொன்ற அரசாக இருக்கிறது திமுக அரசு.

காஷ்மீர் எல்லையில் பணியில் உள்ள ராணுவ வீரர் ஹவில்தார் திரு பிரபாகரன் அவர்களது மனைவி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தமிழகத்தில், ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தப்படுவது இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும். பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை, இந்தக் கையாலாகாத திமுக அரசு உணர வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

Views: - 392

0

0