திராவிட இயக்கங்களை அழிக்க நினைக்கிறார்கள்… சனாதன சக்திகளை ஊடுருவாமல் காப்பாற்ற இதுதான் வழி : வைகோ பரபர!!

Author: Udayachandran RadhaKrishnan
15 August 2023, 2:48 pm
vaiko - Updatenews360
Quick Share

மதிமுக சார்பில் மதுரையில் நடத்தப்படவுள்ள அறிஞர் அண்ணா பிறந்தநாள் மாநாடு தொடர்பாக, தனியார் மண்டபத்தில் நடைபெற்ற மண்டல அளவிலான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்றார். மாநாட்டுக்காக வசூலிக்கப்பட்ட நிதியை வைகோவிடம் நிர்வாகிகள் ஒப்படைத்தனர்.

கூட்டத்தில் வைகோ பேசுகையில், “கலிங்கப்பட்டி என்ற சிறிய கிராமத்தில் பிறந்த போது நான் ஒரு அரசியல் கட்சி துவங்குவேன் என்றோ, அதை இத்தனை ஆண்டுகள் இயக்குவேன் என்றோ கனவு கூட கண்டதில்லை. அண்ணா மீது கொண்ட பற்றின் காரணமாக உயிரையும் கொடுக்க துணிந்து தான் திமுகவில் பணியாற்றினேன். கலைஞருக்கு தம்பியாக இருந்தேன்.
திமுகவுக்கு என்னை ஒப்புக்கொடுத்த பின்னர் 23 முறை சிறை சென்றிருக்கிறேன். கலைஞருக்காக நான் செய்த செயல்களை பார்த்து அவர் கண் கலங்கியிருக்கிறார்.

கலைஞர் உடல்நலம் குறைந்த காலத்தில் தான் சனாதன இந்துத்துதுவா சக்திகள் திராவிட இயக்கங்களை அழித்துவிட நினைத்தார்கள். வாஜ்பாய் மறைவிற்கு பிறகு தீவிரமாக அழிக்க நினைக்கிறார்கள். பிரிட்டிஷ் காலத்தை போல ஒரு கவர்னரை இங்கு கொண்டு வந்து வைத்து திராவிட இயக்கங்களை அழித்துவிட முயற்சிக்கிறார்கள்.

அரசியலுக்கு நான் வந்து 50 ஆண்டுகள் ஆகி விட்டன. இன்னும் எத்தனை ஆண்டுகள் இருப்பேன் என தெரியாது. (குரல் உடைந்து கண் கலங்கினார்).
ஸ்டெர்லைட் நிறுவனர் அனில் அகர்வால் அரை மணி நேரம் என்னை தனியாக சந்திக்க வேண்டும் என்றார். நான் 5 நொடி கூட சந்திக்க முடியாது என்று மறுத்தேன். மதிமுக தொண்டனுக்கு துரோகம் செய்யக்கூடாது என்பதற்காக நான் அவரை சந்திக்கவில்லை.
மதிமுக தமிழ்நாட்டுக்கு என்ன செய்தது என்று கேட்கிறார்கள். ஸ்டெர்லைட், நியூட்ரினோ வராமல் தடுத்தோம், முல்லை பெரியாறு அணையை பாதுகாத்தோம், தஞ்சைக்கு மீத்தேன் வராமல் தடுத்தோம். இப்படி எவ்வளவோ செய்துள்ளோம்.

10 ஆண்டுகளுக்கு முன்னால் பாஜக என்றால் யாருக்காவது தெரியுமா?
இன்று அது மோடி, அமித்ஷா ஆதரவுடன் நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்று சொல்கிறார்கள். அந்த தைரியம் எப்படி வந்தது? தமிழ்நாட்டை காக்க வேண்டும் என்றால், சனதான சக்திகள் ஊடுருவ விடாமல் தடுக்க திமுகவுடன் கரம் கோர்த்துக் கொள்வோம். விமர்சனங்கள் எவ்வளவோ வரலாம். அதைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

அன்று நான் பல நடைபயணம் செய்த போது ஊடக ஆதரவு கூட கிடையாது.
நான் லாட்ஜில் ரூம் எடுத்து தங்கியதில்லை. சாலையில் படுத்திருந்தேன். ஆனால், இன்று நடைபயணம் மேற்கொள்ளும் சிலருக்கு பக்கம் பக்கமாக விளம்பரம் வருகிறது.

விடுதலை புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக என் மீது தொடரப்பட்ட வழக்கில் விரைவில் தீர்ப்பு வர உள்ளது. அந்த வழக்கில் எனக்கு தண்டனை கிடைத்தாலும் சிறை செல்லவும் தயாராக உள்ளேன்.

என்னுடைய வீட்டிலிருந்து யாரும் அரசியலுக்கு வர வேண்டும் என நான் நினைக்கவில்லை. என் மனைவியின் அண்ணன் மகன் தீக்குளித்து இறந்து போனான். அது சாதாரண காரியமல்ல. ஒரு குடும்பத்தில் இருந்து ஒருவர் தீக்குளித்து இறந்து போகிறார் என்றால் அந்த குடும்பம் திராவிட இயக்கத்திற்கு அவ்வளவு பாடுபட்டிருக்கிறது என்று பொருள்.

சனாதன சக்திகளை தடுக்க நாம் திமுகவை பாதுகாக்க வேண்டும். திராவிட இயக்கத்தை காப்பாற்ற வேண்டும். அதற்காக போராட வேண்டும்” என தெரிவித்தார்.

Views: - 227

0

0