“நா முன்னாடி போய்க்கிற“ : கையால் சிக்னல் காட்டியவரின் கையை வெட்டிய மர்மநபர்கள்!!
24 September 2020, 2:44 pmதிருப்பூர் : வாகனத்தை முந்திச் செல்வதில் ஏற்பட்ட தகராறு காரணமாக அடையாளம் தெரியாத காரில் வந்த மர்ம நபர்கள் அரிவாளால் தாக்கியதில் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 38). இவர் கேரளாவில் ஜேசிபி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று காரில் கேரளாவிலிருந்து கோவை மாவட்டம் அன்னூரில் வேலை செய்து வரும் தனது நண்பர்கள் முத்துச்சாமி (வயது 49) கார்த்தி (வயது 26) ஆகிய இருவரையும் அழைத்துக்கொண்டு சொந்த ஊரான கொடுமுடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
காரை கார்த்தி என்பவர் ஓட்டி வந்துள்ளார். அவிநாசி அருகே வரும்பொழுது முன்னே சென்ற அடையாளம் தெரியாத காரை முந்திச் சென்றுள்ளார், அப்போது அந்த அடையாளம் தெரியாத கார் ஓட்டுநருக்கு கையை நீட்டி வழிவிடுமாறு முன்பக்க பக்கவாட்டு இருக்கையில் அமர்ந்திருந்த தட்சிணாமூர்த்தி சிக்னல் காட்டியுள்ளார்.
இதையடுத்து அவிநாசி அரசு கலைக்கல்லூரி அருகே செல்லும்பொழுது இவர்களது காரை முந்திக்கொண்டு வந்த அந்த அடையாளம் தெரியாத கார் குறுக்கிட்டு நிறுத்தியது. இதனால் கார்த்தி திடீரென காரை நிறுத்தி பார்த்த போது, அடையாளம் தெரியாத காரில் வந்த மூன்று மர்ம நபர்கள் காரை விட்டு இறங்கி இவர்களை நோக்கி வந்து, “எங்களது காருக்கா கை காட்டினாய்” என்று கூறியவாரு கத்தியால் தட்சிணாமூர்த்தியை வெட்டி உள்ளனர்.
இதில் தட்சிணாமூர்த்தியின் கைகளில் பலத்த காயமும் காதுப் பகுதியில் லேசான காயமும் ஏற்பட்டது. இதையடுத்து மர்ம நபர்கள் தங்களது காரில் ஏறி தப்பிச் சென்றுள்ளனர். ரத்த வெள்ளத்தில் இருந்த தட்சிணாமூர்த்தியை உடன் வந்த நண்பர்கள் அவிநாசி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து கோவை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
காரில் முந்திக் செல்வதில் ஏற்பட்ட தகராறில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.