நீட் ஆய்வுக்குழு தொடர்பான தீர்ப்புக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரவேற்பு

13 July 2021, 11:22 pm
Quick Share

சென்னை: நீட் ஆய்வுக்குழு செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இரட்டை வேட பாஜக, பாதம் தாங்கும் அதிமுகவுக்கு உயர்நீதிமன்றம் அளித்த நெத்தியடி தீர்ப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டியை எதிர்த்து பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் தொடர்ந்த வழக்கை விளம்பரம் தேடும் நோக்கில் தொடரப்பட்டது எனத் தெரிவித்த உயர் நீதிமன்றம், கமிட்டி அமைக்க அரசுக்கு உரிமை உள்ளதாகக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது.இந்தத் தீர்பை வரவேற்றுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “மருத்துவக் கல்வி பயில நினைக்கும் தமிழ்நாட்டிலுள்ள மாணவர்களின் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வினை, அது முன்மொழியப்பட்ட காலம் முதலே அரசியல் ரீதியாக அதனை எதிர்த்து வருகிறோம். திமுக ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வு தொடர்பான பாதிப்புகளை விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

நீட் தேர்வானது தமிழ்நாட்டு மாணவ, மாணவியரிடையே கல்வி, சமூக, பொருளாதார ரீதியாக எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை ஆராய்வதற்காக இக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினரிடம் இதுவரை 86 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் இருந்து கருத்துகள் குவிந்துள்ளன. இவற்றை ஆராய்ந்து அதன் மூலமாக தமிழ்நாடு அரசு எடுக்கவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் நீதியரசர் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது. அந்த அறிக்கை கிடைத்ததும், அடுத்த கட்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு அடுத்தடுத்து மேற்கொள்ளவிருக்கிறது என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிலையில் பா.ஜ.க பொறுப்பாளர் ஒருவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் இக்குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து ஒரு ரிட் மனு தாக்கல் செய்தார். ‘நீட் தேர்வை விலக்குவது சட்டரீதியாக இருக்குமானால் அதனை பா.ஜ.க ஏற்கும்’ என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் பா.ஜ.க சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் சொல்லிய நிலையில், அப்பட்டமான இரட்டை வேடமாக அதே பா.ஜ.க.-வின் பொறுப்பாளரால் இத்தகைய மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தங்களின் அரசியல் லாபங்களுக்காக, யாரையோ திருப்திப்படுத்துவதற்காக, தமிழ்நாட்டிலுள்ள மாணவர்களின் நலனுக்கு எதிராக இத்தகைய மனுவை அந்தப் பொறுப்பாளர் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி, அரசுப் பள்ளி மாணவர்கள், பின்தங்கிய மாணவர்களுக்கு நீட் தேர்வு காரணமாக ஏற்பட்ட தாக்கம் குறித்து ஆய்வுசெய்ய மட்டுமே குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதே தவிர, வேறு ஏதும் கூறப்படவில்லை எனவும், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணாகவோ, மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராகவோ இல்லை எனவும் தெரிவித்துள்ளார். குழு நியமனம் என்பது வீண் செலவு எனக் கூறமுடியாது என தெரிவித்த நீதிபதி, மக்கள் கருத்து கேட்பது தொடர்பான அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் தெரிவித்து, மாணவர் சேர்க்கைக்கான நடைமுறையைத் தடுக்கும் வகையில், மாநில அரசு தனது அதிகார வரம்பை மீறவில்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்கள்.

நீட் தேர்வுக்கு எதிரான நமது போராட்டத்தில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாகும். மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்களின் கல்விக் கனவை நிறைவேற்றுவதற்காக தமிழ்நாடு அரசு எடுத்து வரும் அனைத்து முயற்சிகளுக்கும் இது தொடக்கப் புள்ளியாகும்.மாணவர்களின் உரிமை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமையும் இந்தத் தீர்ப்பின் மூலமாக நிலைநாட்டப்பட்டுள்ளது. முதல் வெற்றியே, முழு வெற்றியாக மாறும் என்ற நம்பிக்கையை தமிழ்நாடு அரசுக்கு இந்தத் தீர்ப்பு அளித்துள்ளது.

நீதியரசர் ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கை, அதன் மூலமாக தமிழ்நாடு அரசு எடுக்கும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் ஆகியவை அடுத்தடுத்த காலங்களில் வரிசையாக நடக்க இருக்கின்றன. இந்த ஆண்டுக்கான தேர்வுத் தேதி அதற்குள் அறிவிக்கப்பட்டுவிட்டதால் இந்த நடவடிக்கைகள் அதற்குள் முடிவடைய இயலாத சூழல் உள்ளது. தமிழ்நாடு அரசு, சட்டபூர்வ நடவடிக்கையில் இருக்கும் இந்த நேரத்தில் நடக்கும் இந்த ஆண்டுக்கான தேர்வை எதிர்கொள்ளும் நெருக்கடிமிகு சூழல் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது உண்மையில் வருந்தத்தக்கதே. ஆனாலும் இறுதியில், நீட் தேர்வினால் நமது மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தோம் என்ற நிலையை நிச்சயம் உருவாக்குவோம்” என்று தெரிவித்துள்ளார்.

Views: - 57

0

0