தக்காளி விலை உயர்வு எதிரொலி… ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்த 100 கிலோ தக்காளி ; உழவர் சந்தையில் நடந்த சுவாரஸ்யம்…!!

Author: Babu Lakshmanan
10 July 2023, 11:54 am
Quick Share

விருதுநகர் ; ஸ்ரீவில்லிபுத்தூரில் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால், 100 கிலோ தக்காளி ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்தது.

தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், இன்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் உழவர் சந்தையில் குறைந்த விலையில் தக்காளி விற்கப்பட்டதால் போட்டி போட்டு பொதுமக்கள் வாங்கிச் சென்றனர். மேலும், விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட 100 கிலோ தக்காளி ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்தன.

மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்திருந்தது. இதனை தொடர்ந்து, விலை உயர்ந்தால் பொதுமக்கள் பாதிப்பு அடையக்கூடாது என்ற நோக்கத்துடன், தமிழக அரசு தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் மூலம் தக்காளி குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.

அந்த வகையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் தோட்டக்கலைத் துறை மூலம் உழவர் சந்தையில் குறைந்த விலையில் இன்று காலை தக்காளி விற்பனை துவங்கியது. முதற்கட்டமாக, விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 100 கிலோ தக்காளி ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்தது.

இன்றைய நிலையை பொறுத்தவரை சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ரூபாய் 110க்கு ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் உழவர் சந்தையில் தக்காளி 70 ரூபாய்க்கும், சிறிய தக்காளி 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. தினமும் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Views: - 267

0

0