திருச்சியில் வெடித்த திமுக கோஷ்டி பூசல்… திமுக எம்எல்ஏவுக்கு எதிராக கிளம்பிய முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ; அதிர்ச்சியில் அறிவாலயம்!!

Author: Babu Lakshmanan
29 September 2022, 4:09 pm
Quick Share

திருச்சி அருகே ஒன்றிய குழு தலைவரை பதவி நீக்கம் செய்ய காரணமான திமுக எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜனை கண்டித்து திமுகவின் மற்றொரு பிரிவினர் போராட்டம் நடத்தி வருவது அக்கட்சியினுள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவராக பதவி வகித்தவர் திமுகவை சேர்ந்த புனிதராணி. ஒன்றிய கவுன்சிலர்களுக்கும், தலைவர் புனிதராணிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஒன்றிய குழு தலைவர் புனிதராணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

முசிறி கோட்டாட்சியர் மாதவன் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் புனிதராணி பெரும்பான்மையே இழந்தார். இதுகுறித்து கோட்டாட்சியர் மாதவன் தமிழக அரசுக்கு அறிக்கை அளித்திருந்தார். இதையடுத்து, புனித ராணி ஒன்றிய குழு தலைவர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து, கடந்த 23ம்தேதி தொட்டியம் ஒன்றிய குழு அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தலில் புதிய ஒன்றிய குழு தலைவராக கிருஷ்ணவேணி என்பவர் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் முசிறி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் வளரும் தமிழகம் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும், தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சார்ந்த பொதுமக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, ஒன்றிய குழு தலைவராக புனித ராணியை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டும். முசிறி தொகுதி எம்எல்ஏவும், திருச்சி திமுக வடக்கு மாவட்ட செயலாளருமான காடுவெட்டி தியாகராஜன் தான் ஒன்றிய குழு தலைவராக இருந்த புனிதராணியின் பதவி நீக்கத்திற்கு காரணம், அவர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், பதவி நீக்கம் செய்யப்பட்டது குறித்து தமிழக முதல்வரின் நேரடி பார்வையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் எனவும், இது குறித்து நடவடிக்கை எடுக்க விட்டால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை புறக்கணிப்போம், மேலும், அனைவரும் இந்து மதத்தை தவிர்த்து முஸ்லிம் ஆக மாறுவோம் என உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

புதிய பேருந்து நிலைய வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது. முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதனிடையே புனித ராணி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜனுக்கு எதிராக தவறான செய்தி பரப்பி வருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுகவினர் முசிறி சரக காவல்துறை கண்காணிப்பாளாரிடத்தில் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

தற்போது சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜனுக்கு ஒரு பிரிவினரும், ஒன்றிய குழு தலைவராக இருந்து பதிவு நீக்க செய்யப்பட்ட புனித ராணிக்கு ஒரு குழுவினரும், ஆதரவும், எதிர்ப்பு தெரிவித்து வருவதால், முசிறி திமுகவினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Views: - 477

0

0