‘எம்எல்ஏ-வை வரச் சொல்லு’… டிக்கெட் கவுண்டரில் கையை வெட்டிக்கொண்ட நபர் : 2 மணிநேரம் படாத பாடுபட்ட போலீஸ் ; திருப்பூர் ரயில்நிலையத்தில் பரபரப்பு

Author: Babu Lakshmanan
17 February 2023, 12:37 pm
Quick Share

திருப்பூர் ரயில்நிலைய டிக்கெட் கவுண்டரில் கத்தியுடன் நின்று கொண்டு மிரட்டல் விடுத்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை 4 மணியளவில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென்று உள்ளே நுழைந்தார். முதல் பிளாட்பாரம் டிக்கெட் கவுண்டரில் பயணிகள் டிக்கெட் வாங்கும் இடத்திற்கு கத்திக் கொண்டே ஓடி வந்த அந்த நபர் கையில் ஒரு கத்தியை எடுத்துக்கொண்டு பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்தார்.

ஒரு கையால் கத்தியை வைத்து தனது கையை கீறி கொண்டு கூச்சலிட ஆரம்பித்தார். எம்எல்ஏ இங்கு வரவேண்டும், தனது பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும் என்பது போல, அவர் சத்தம் போட்டார். இதை பார்த்து டிக்கெட் எடுக்க வந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் டிக்கெட் கவுண்டரில் இருந்து வெளியே ஓட்டம் பிடித்தனர்.

உடனடியாக அங்கு இருந்த ரயில்வே போலீஸ் இன்ஸ்பெகடர் ராஜா தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் அன்னம், போலீஸ்காரர் கோபி உள்ளிட்ட போலீசார் அங்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வேடிக்கை பார்க்க திரண்ட பொதுமக்களை அவர்கள் அப்புறப்படுத்தினார்கள்.

அந்த வாலிபர் என்ன செய்வது என்று தெரியாத அளவிற்கு தகாத வார்த்தைகளை பேசி போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் மிரட்டல் விடுத்தார். அதிகாலை 4 மணி முதல் அதிகாலை 6 மணி வரை 2 மணி நேரம் ரயில்வே டிக்கெட் கவுண்டரின் முன்புறமாக நின்று அந்த வாலிபர், கெட்ட வார்த்தைகள் பேசிக்கொண்டு மிரட்டல் விடுத்துக் கொண்டு இருந்தார்.

அவர் கையில் பெரிய கத்தி இருந்ததால், அவருக்கும் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதனால், போலீசார் சமார்த்தியமாக அவரிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருந்தனர். அந்த வாலிபர் தொடர்ச்சியாக ஆவேசமாக மிரட்டல் விடுத்துக் கொண்டே இருந்ததால், தீயணைப்புத் துறையினர் மற்றும் திருப்பூர் வடக்கு போலீஸ் உள்பட சுமார் 30க்கும் மேற்பட்டோர் அங்கு வந்து அந்த வாலிபரை பிடிக்க காத்திருந்தனர்.

தீயணைப்பு வாகனம், 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு இருந்தது. தீயணைப்பு துறையினர் கவச உடைகள், வலைகள் சகிதம் அந்த வாலிபரை பிடிக்க முயற்சி மேற்கொண்டனர். கோபி என்ற போலீஸ்காரர் தொடர்ச்சியாக பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருந்தார். சுமார் 2 மணி நேரத்துக்கு பின் காலை 6 மணியளவில் அவரிடம் இருந்த கத்தியை தட்டிவிட்டு, அதிரடியாக அந்த வாலிபரை பிடித்து குண்டு கட்டாக தூக்கி சென்றனர்.

அந்த வாலிபர் மயக்கம் அடைந்தது போல நடித்ததால் அவரை 108 ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் அந்த வாலிபர் திருப்பூர் மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த 36 வயதான கண்ணன் என்பதும், அவரது வீட்டில் மனைவி ரானியுடன் ஏற்பட்ட குடும்ப சண்டை காரணமாக வீட்டில் 16 வயதான கண்ணனின் மகன் தமிழ் செல்வனுடன் ஏற்பட்ட தகராறில் ஓடி வந்து ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர் பகுதியில் புகுந்தது தெரிய வந்தது.

இந்த வாலிபரின் மிரட்டலால் சுமார் 2 மணி நேரம் முதல் பிளாட்பாரம் பகுதியில் டிக்கெட் வழங்கும் சேவை பாதிக்கப்பட்டது. இரண்டாவது பிளாட்பார டிக்கெட் கவுண்டரில் மட்டும் டிக்கெட் வழங்கப்பட்டது. காலை 6 மணிக்கு அந்த வாலிபரை பிடித்த பிறகு முதல் பிளாட் பாரத்திலும் டிக்கெட் வழங்கப்பட்டது. அதிகாலையில் போலீசாரையும், பொதுமக்களையும் வாலிபர் ஒருவர் படாத பாடு படுத்திய சம்பவம் ரயில் நிலைய பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 512

0

0