வழக்கில் இருந்து பெயரை நீக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம்… லஞ்ச ஒழிப்புத்துறையிடம் வசமாக சிக்கிய காவலர்..!!

Author: Babu Lakshmanan
27 April 2022, 10:38 am
Quick Share

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே எம்.ரெட்டியபட்டி காவல்நிலையத்தில் ரூ 10,000 லஞ்சம் பெற்ற சார்பு ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.

இராமநாதபுரம் மாவட்டம் இராமசாமிபட்டியைச் சேர்ந்தவர் தங்கமணி (45). இவரது நண்பரான சோலை என்பவருடைய இடத்தில் பெருநாழியை சேர்ந்த தங்கராஜ் பாண்டியன் என்பவர் கல் நட்டதாகவும்,அக்கல்லை உடைத்ததாக கூறி தும்முசின்னம்பட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜ் ,சோலை, இராமசாமிபட்டி தங்கமணி , முஸ்டக்குறிச்சியைச் சேர்ந்த அய்யனார் ஆகியோர் மீது தங்கராஜ் பாண்டியன் விருதுநகர் மாவட்டம் எம்.ரெட்டியபட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தாகவும் கூறப்படுகிறது.

இந்த வழக்கிலிருந்து தங்கமணி பெயரை நீக்க எம்.ரெட்டியபட்டி காவல்நிலைய சார்பு ஆய்வாளர் இராமநாதன் ரூ 30,000 பெற்று கொண்டதாகவும், மேலும் பணம் போதவில்லை என கூறி மீண்டும் தங்கமணியிடம் சார்பு ஆய்வாளர் இராமநாதன் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து வேறு வழியின்றி தங்கமணி விருதுநகர் லஞ்ச ஒழிப்புதுறைக்கு தகவல் அளித்துள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரையின்படி இரசாயனம் தடவிய ரூ 10 ஆயிரம் பணத்தை தங்கமணி சார்பு ஆய்வாளர் இராமநாதனிடம் கொடுக்கும் போது மாறுவேடத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சார்பு ஆய்வாளர் இராமநாதனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சார்பு ஆய்வாளர் இராமநாதனிடம் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட நிலையில், அவரைக் கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சிறையில் அடைத்தனர்.

Views: - 696

0

0