குளத்தை தூர்வார அழைப்பு விடுத்தும் வராத தன்னார்வலர்கள் : வேஷ்டியை கட்டி குளத்தில் இறங்கிய கோட்டாச்சியர்… திகைத்த அதிகாரிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 July 2022, 4:18 pm
thasildhar - Updatenews360
Quick Share

பழனி இடும்பன் குளத்தை சுத்தம் செய்ய பலநாட்களாக அழைப்பு விடுத்தும், யாருமே வராத நிலையில் பழனி கோட்டாட்சியர் தனியாளாக குளத்தை சுத்தம் செய்ய இறங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. கோட்டாட்டசியரின் அதிரடி நடவடிக்கையால் அதிகாரிகள் திகைத்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியருகே சிவகிரிப்பட்டி ஊராட்சியில் உள்ளது இடும்பன் குளம். புனித தீர்த்தமாக விளங்கும் இடும்பன் குளத்தில் பக்தர்கள் புனிதநீராடி பழனி கோவிலுக்கு சென்று முருகனை வழிபடுவது வழக்கம்.

மேலும் இடும்பன் குளத்தின் நீர் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் பக்தர்கள் வீசும் பொருட்கள் மற்றும் துணிகளாலும், சமூகவிரோதிகள் மதுஅறுந்திவிட்டு வீசும் பாட்டில்களாலும் இடும்பன் குளமானது மாசடைந்து உள்ளது.

எனவே இடும்பன் குளத்தை சுத்தம் செய்ய முடிவெடுக்கப்பட்டு, பழனி கோட்டாட்சியர் சிவக்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டார். அதில் மாசடைந்துள்ள இடும்பன் குளத்தை சுத்தம் செய்து கழிவுகளையும் குப்பைகளையும் வெளியேற்ற பழனி வாழ் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்தார். ஆர்வமுள்ளவர்கள் முன்கூட்டியே தெரிவிக்குமாறும் அறிவித்தார்.

இதன்படி இன்று காலை இடும்பன் குளத்தை சுத்தம் செய்யும் பணிக்காக பழனி கோட்டாட்சியர் சிவக்குமார் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் இடும்பன் குளத்திற்கு வருகைதந்தனர். இடும்பன் குளத்தை சுத்தம் செய்வதற்காக பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தபோதும் யாருமே வரவில்லை.

இதனால் அப்பகுதி வெறிச்சோடி இருந்தது. இதனை சற்றும் பொருட்படுத்தாத கோட்டாட்சியர் சிவக்குமார் தனிஒருவராக குளத்தை சுத்தம் செய்யும் பணியில் இறங்கினார். இதனை சற்றும் எதிர்பாராத வருவாய்த்துறை அதிகாரிகள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

மேலும் கேட்டாட்சியர் சிவக்குமார் புதிய வேஷ்டி ஒன்றை வாங்கி வரச்சொல்லி வேஷ்டியை அணிந்து கொண்டு அருகிலிருந்த கம்பை எடுத்துக்கொண்டு அசுத்தமான குளத்தில் இறங்கி குப்பைகளை கரைசேர்க்கும் பணியில் இறங்கினார்.

அழுக்குபடிந்த நீரில் இறங்கிய கோட்டாட்சியரின் செயல் சமூகவலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து ஏராளமானோர் குளத்தை சுத்தம் செய்ய முன்வந்தனர். சிவகிரிப்பட்டி ஊராட்சி தூய்மைபணியாளர்கள், தீயணைப்புவீர்ரகள், பழனி நகர்மன்ற தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் உட்பட ஏராளமானோர் குவிந்தனர்.
தொடர்ந்து சிலமணி நேரத்தில் குளம் சுத்தமாக்கப்பட்டு பணி நிறைவடைந்தது.

பிறரை எதிர்பார்க்காமல் குளத்தை தூய்மைப்படுத்தும் பணியில் அதிரடியாக களத்தில் இறங்கிய பழனி கோட்டாட்சியர் சிவக்குமாரின் நடவடிக்கை பொதுமக்களிடம் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.

Views: - 469

0

0