சூர்யா என் தம்பி மாதிரி.. பரஸ்பரம் பேசிவிட்டோம்.. பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம் : சூர்யா சிவா, டெய்சி பேட்டி!

Author: Udayachandran RadhaKrishnan
24 November 2022, 7:43 pm
Surya Siva Daisy - Updatenews360
Quick Share

சமூக வலைதளங்களில் பரவிய ஆடியோ விவகாரம் தொடர்பாக பாஜகவின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் பரஸ்பரம் சுமூகமாக முடித்துக் கொள்ளப்பட்டதாகவும் , எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டு இருப்பதாக பாஜகவின் ஓபிசி பிரிவு மாநில துணைத்தலைவர் திருச்சி சூர்யா சிவா மற்றும் பாஜக சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் டெய்சி ஆகியோர் திருப்பூரில் கூட்டாக பேட்டி அளித்தனர்.

பாஜகவின் ஓபிசி பிரிவு மாநில துணைத்தலைவரான திருச்சி சூர்யா சிவா மற்றும் பாஜக சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் டெய்சி ஆகியோர் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது .
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை சூர்யா சிவா குறிப்பிட்ட நாட்கள் கட்சி நிகழ்வில் பங்கேற்க தடை விதிக்கப்படுவதாகவும் , மேலும் மாநில துணைத்தலைவரான கனகசபாபதி தலைமையிலான ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் திருப்பூரில் இரு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பார்கள் என தெரிவித்திருந்தார் .

அதன் அடிப்படையில் இன்று காலை திருப்பூர் வித்தியாலயம் பகுதியில் உள்ள வடக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கனகசபாவதி தலைமையில் இரு தரப்பினரிடமும் விசாரிக்கப்பட்டது . இதில் டெய்சி மற்றும் சூர்யா சிவா இருவரும் ஆஜராகி தங்கள் விளக்கங்களை அளித்திருந்தனர்.

பின்பு செய்தியாளர்களை சந்தித்த இருவரும் பாஜகவின் சித்தார்த்தங்களால் ஈர்க்கப்பட்டு பாஜக கட்சியில் சேர்ந்ததாகவும் கண் பட்ட நிகழ்வு போல ஒரு அசம்பாவித சம்பவம் நிகழ்ந்து விட்டதாகவும் , சூர்யா சிவா தனக்கு தம்பி போல தான் எனவும் , உணர்ச்சிவசப்பட்டு பேசிய வார்த்தைகள் அரசியல் காரணங்களுக்காக சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து விட்டதாகவும் ஆனால் மாநில தலைவர் அண்ணாமலை வழிகாட்டுதலின்படி கட்சியின் மூத்த தலைவர்கள் கனகசபாபதி மற்றும் மலர்க்கொடி முன்னிலையில் இரு தரப்பும் பரஸ்பரம் சுமூகமாக பிரச்சனையை முடித்துக் கொள்வது என முடிவெடுத்துள்ளதாகவும் , எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டு இருப்பதாக மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய ஓபிசி பிரிவு மாநில துணை தலைவர் சூர்யா சிவா தான் பேசியது தவறு தான் எனவும் இதற்காக மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சியிடம் மன்னிப்பு கேட்டுள்ளதாகவும், மேலும் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் முன்பு எழுத்துப்பூர்வமாக தனது விளக்கத்தை அளித்திருப்பதாகவும் தன் மீது நடவடிக்கை எடுத்தாலும் அதனை ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தார் .

மேலும் செல்போனில் பேசிய தங்கள் இருவரிடமிருந்தும் இந்த ஆடியோ வெளியே செல்லவில்லை எனவும் , அரசியல் காரணங்களுக்காகவே இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டதாகவும் , பாஜக மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு களங்கம் விளைவிக்கவே இது தொடர்ந்து பரப்பப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார் .

திமுகவில் சைதை சாதிக் மீது காவல்துறையில் புகார் அளித்தும் கூட கட்சி சார்ந்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில் பாஜக உடனடியாக நடவடிக்கை எடுத்ததோடு ஒழுங்கு நடவடிக்கை குழு அமைத்து விசாரிக்கவும் உத்தரவிட்டது எனவும் இப்பிரச்சனையை இதோடு இருவரும் பரஸ்பரம் முடித்துக் கொண்டிருப்பதாகவும் எங்கள் இருவருக்கும் குடும்ப ரீதியான நட்பு தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

Views: - 580

0

0