இன்னும் ஏன் வாயை மூடிக்கொண்டு இருக்கறீர்கள்… வெந்த புண்ணில் வேலை பாய்ச்சிய திமுக : காங்கிரஸ் குறித்து ஜிகே வாசன் விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 May 2022, 3:28 pm
GK Vasan - Updatenews360
Quick Share

கோவை : பேரறிவாளன் விடுதலையில் இரட்டைவேடம் போடும் காங்கிரஸ்….! 6 பேர் விடுதலை குறித்து முதல்வர் ஆலோசித்து இருப்பது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் உள்ளது என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுவதாக விமர்சித்துள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், ராஜீவ்காந்தியின் நினைவு நாளன்று, 6 பேர் விடுதலை குறித்து சட்ட வல்லுனர்களுடன் முதல்வர் ஆலோசித்து இருப்பது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் இருப்பதாக சாடியுள்ளார்.

கோவை மாவட்டம், சூலூர் சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில காங்கிரசில் மாணவர்கள் இணையும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அக்கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே வாசன் கலந்து கொண்டு தொண்டர்களிடையே உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பஞ்சு விலை உயர்வு காரணமாக ஜவுளி உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் 2 கோடிக்கு மேல் ஜவுளி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும், மத்திய மாநில அரசுகள் உடனடியாக கவனத்தில் கொண்டு பஞ்சு விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மத்திய அரசு கலால் வரியை குறைத்துள்ளது போல மாநில அரசும் வரியை குறைக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், மற்ற மாநிலங்களைப் போல் தமிழக அரசும் பெட்ரோல் டீசல் மீதான வரி விலையைக் குறைக்கும் என கேள்வி எழுப்பினார்.

பேரறிவாளன் விடுதலையில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு இரட்டை வேடத்தின் உச்சகட்டமாக உள்ளது என்றும், உதகை சென்ற முதல்வர், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி நினைவு நாளன்று, அவரது கொலை தொடர்பாக சிறையில் இருக்கும் 6 பேரை விடுவிப்பது குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து இருப்பது தேவையற்றது என்றும், இது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல உள்ளது என்றும் ஜி.கே.வாசன் விமர்சித்தார்.

தமிழகத்தில் நிலுவையில் உள்ள முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் இதுபோன்ற ஆலோசனை நடத்தி இருப்பது என்பது தேவையற்றது என்றும், மக்கள் முகம் சுழிக்கும் அளவிற்கு தமிழக மக்கள் வெறுக்கும் வகையில் இந்த நிகழ்வு அமைந்துள்ளது என்றும், கூட்டணிக் கட்சியான காங்கிரசின் உணர்வுகளுக்கு 100% எதிராக இது அமைந்துள்ளது என்றும் தெரிவித்த அவர், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும் பதவி ஆசைதான் என்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது என்றும், இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் மன வேதனைக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்றும் கூறினார்.

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் ஏன் வாய்மூடி மௌனமாக இருக்கிறார்கள் என்று ஜி.கே வாசன் கேள்வி எழுப்பினார்.

Views: - 394

0

0