இறந்து பிறந்த குழந்தை… சில நிமிடங்களில் தாயும் பலி… பதறிப்போன உறவினர்கள்… அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முற்றுகை!!

Author: Babu Lakshmanan
3 January 2024, 11:52 am
Quick Share

மானாமதி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இளம் பெண்ணுக்கு நடைபெற்ற பிரசவத்தில் பிறந்த பச்சிளம் குழந்தையும் தாயும் பலியான நிலையில், மருத்துவர்களின் அலட்சியம் என உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் பெருநகர் பழைய காலனியை சேர்ந்தவர் ரகோத்தமன். இவரது மனைவி சத்யா கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், சத்யா கர்ப்பம் அடைந்தார். இந்த நிலையில் சத்யாவை தலைப்பிரசவத்திற்காக மானாமதி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று இரவு அனுமதித்துள்ளனர்.

நேற்று நள்ளிரவு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் மருத்துவர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். அப்போது, குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் சத்யாவின் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். மேலும், சத்யாவிற்கு ரத்தப்போக்கு அதிகரித்துள்ளது. இதனால் செங்கல்பட்டு மருத்துவகல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

ஆனால், அங்கு சத்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் சத்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தாயும், குழந்தையும் இறந்துவிட்டதாக கூறி, சத்யாவின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

காஞ்சிபுரம் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஜூலியட் சீசர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து பெருநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து அரசு மருத்துவமனையில் நிர்வாக சீர்கேடு காரணமாக சரியான மருத்துவ உதவிகள் யாருக்கும் கிடைக்கவில்லை என பலர் புகார் கூறிவருகின்ற நிலையில், அவ்வப்போது இது போன்ற சம்பவங்கள் ஏற்படுவது வேதனையாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையிலும் பிரசவித்த குழந்தையும் தாயும் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

அதுபோலவே, மானாமதி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாயும் சேயும் பிரசவத்தின் போது தற்போது இறந்துள்ளனர். இது போன்ற சம்பவங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார மையங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருவதை தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனே தடுத்து நிறுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் வைக்கின்றனர்.

Views: - 518

0

0