பணிக்கு நடுவே அறைக்கு சென்ற ஆயுதப்படை பெண் காவலர்.. நீண்ட நேரமாகியும் திரும்பாததால் சந்தேகம் ; நாகையில் நடந்த பகீர் சம்பவம்!!

Author: Babu Lakshmanan
21 April 2023, 12:03 pm
Quick Share

நாகையில் ஆயுதப்படை பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் உறையூர் அருகே மேலபாண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த மணிமாறன் என்பவரது மகள் கவிப்பிரியா (27). இவர் நாகப்பட்டினம் ஆயுதப்படை பிரிவில் எழுத்தராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், மதியம் வழக்கம் போல சாப்பிடுவதற்காக தான் தங்கி இருந்த அருகில் உள்ள போலீஸ் குடியிருப்புக்கு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும், மீண்டும் அவர் பணிக்கு வரவில்லை. இதில் சந்தேகம் அடைந்த சக போலீசார் கவிப்பிரியாவின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டனர்.

நீண்ட நேரம் ஆகியும் அவர் செல்போனை எடுக்கவில்லை. இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர் தங்கி இருக்கும் அறைக்கு சென்றனர். அந்த அறையின் கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது. இதையடுத்து, கதவை உடைத்து உள்ளே சென்ற, போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கு போட்டு பிணமாக கவிப்பிரியா தொங்கிக் கொண்டிருந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கவிப்பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகப்பட்டினம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார். இதுகுறித்து வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் வழக்குப்பதிவு செய்து, கவிப்பிரியா பணிச்சுமை காரணமாக மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது வேறு ஏதும் காரணமா ? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட கவிப்பிரியா கடந்த 2020-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நாகையில் ஆயுதப்படை பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 279

0

0