மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 20 லட்சம் வரை கடன் வழங்க திட்டம் : அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு

Author: Babu Lakshmanan
1 November 2022, 4:03 pm
Quick Share

காவேரி ஆற்றில் இருந்து வாய்க்கால்கள் மற்றும் குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள குளங்கள், ஏரிகளில் நிரப்பும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் உள்ளாட்சி கிராம சபை மற்றும் மாநகராட்சி பேரூராட்சி பகுதிகளில் உள்ள வார்டுகளில் பகுதி சபை கூட்டம் நடைபெற்றது அந்த வகையில் திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 33 வது வார்டு மேற்கு மிருகநாதபுரம் பகுதியில் மாநகராட்சி வார்டு பகுதி சபை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளைக் கேட்ட தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி பேசியதாவது :- காவிரி ஆற்றில் இருந்து வாய்க்கல்கள் மற்றும் குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள குளங்கள் ஏரிகள் அனைத்தையும் நிறப்ப திட்டமிட வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்து உள்ளோம். அதற்கான ஆயத்த ஆய்வு பணி தற்போது நடைபெற்று வருகிறது. இன்னும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்.

திண்டுக்கல் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் நடைபெறாத வார்டுகளிலும் அடுத்த கட்டமாக நடத்த திட்டமிட்டு உள்ளோம். மத்திய அரசு கொரோனாவை காரணம் காட்டி எம்பிகளுக்கு நிதி வழங்கவில்லை. நிதி வழங்கும் போது அனைத்து பகுதிகளுக்கும் பணிகள் செய்ய நிதியை பிரித்து கொடுக்க கோரியுள்ளோம்.

அமைச்சர், மேயர், உள்ளிட்ட மக்கள் பிரதிதிநிகள் உங்களுக்கான வேலையாட்கள் தான். உங்களுக்கு வேலை செய்யதான் நீங்கள் தேர்வு செய்து உள்ளீர்கள். கூட்டுறவு கடன் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 20 லட்சம் வரை வழங்கபடும், என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து, பொதுமக்களின் குறைகளை கேட்ட அமைச்சர் ஐ. பெரியசாமி, அதற்கு பதில் அளித்து பேசினார். அப்போது, பொதுமக்கள் குறிப்பாக மேற்கு அறியாதபுரம், கிழக்கு மரியனாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வீட்டுமனை பட்டா, சாலை வசதி, தெரு விளக்கு வசதி, சுகாதார வளாகம் வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஐ பெரியசாமி அரசு சார்ந்த அனைத்து நடவடிக்கைகளையும் உட்படுத்தி மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்படும் என பொதுமக்களிடம் உத்தரவாதம் அளித்தார்.

Views: - 490

0

0