இளம்பெண்களை காமவலையில் வீழ்த்தி உல்லாசம்… கட்டழகு போலீஸ்காரரின் சொகுசு வாழ்க்கை ; கொலையில் அம்பலமான பகீர் சம்பவம்!!

Author: Babu Lakshmanan
4 February 2023, 1:27 pm
Quick Share

கட்டழகை காண்பித்து கன்னியர்களை வீழ்த்தும் காமுக போலீஸ் இளைஞர் பணத்துக்காக உறவினரையே கொலை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரம் அடுத்த மேலேரி கிராமத்தை சேர்ந்தவர் யசோதா அம்மாள் பலராமன். வயது 70. இவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். மூன்று மகள்களுக்கும், மகனுக்கும் திருமணம் செய்து வைத்து, அனைவரும் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் நல்ல நிலையில் வசித்து வருகின்றனர்.

ஓரளவு நல்ல வசதியுடன் சொந்த கிராமத்திலேயே வாழ்ந்து வரும் யசோதாம்மாள், தனக்கு தெரிந்த நபர்களுக்கு குறைவான வட்டிக்கு பணம் கொடுத்து உதவி செய்து வருகிறார்.

இதே கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் – கலா தம்பதிகள். விவசாயம் மற்றும் விவசாயி கூலி செய்து வருகின்றனர். இவர்களுக்கு 28 வயதில் பசுபதி என்ற மகனும், 25 வயதில் சதிஷ் என்ற சக்திவேல் என இரு மகன்கள் உள்ளனர். இரண்டு மகன்களும் காவல்துறையில் பணிபுரிகின்றார்கள்.

பசுபதி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட மணிமங்கலம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகின்றார். சதீஷ் என்ற சக்திவேல் திருவாரூர் மாவட்டத்தில் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருகிறார். யசோதாம்மாள் குடும்பத்தினருக்கு இவர்கள் பங்காளி முறை ஆவார்கள்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று எப்போதும் போல் தன்னுடைய வீட்டில் உறங்க சென்ற யசோதம்மாள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரை வெளியே தென்படவில்லை. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் யசோதாம்மாள் வெளியே தென்படாததால் அருகே தேடிப் பார்த்தனர். வீட்டின் பின்புறம் சென்று தேடிப் பார்த்ததில் புதர்போல மண்டி கிடந்த இடத்தில் யசோதம்மாள் தலை நசுங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

தகவல் அறிந்து வந்த சுங்குவார்சத்திரம் காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்தனர்.

சர்வதேச இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைய உள்ள இந்தப் பகுதியில் ஒரு மூதாட்டி கொலை செய்யப்பட்டது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய காரணத்தினால் சம்பவ இடத்திற்கு காவல்துறை உயர் அதிகாரிகள் நேரில் வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து ஸ்ரீ பெரும்பத்தூர் கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுனில் தலைமையிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் தலைமையிலும் , சுங்குவார்சத்திரம் காவல் ஆய்வாளர் பரந்தாமன் தலைமையில் ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

யசோதா அம்மாள் யார் யாரிடம் தனது ஃபோனில் தொடர்பு கொண்டு உள்ளார், கொலையாளி யார்? கொலைக்கான காரணம் என்ன? என பல்வேறு கோணத்தில் விசாரித்து வந்த நிலையில் இந்த வழக்கில் ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டது.’

யசோதா அம்மாளின் பங்காளியான வெங்கடேசன் அவர்களின் மகன் ஆயுதப்படை காவலர் சதீஷ் அவர்கள்தான் யசோதா அம்மாள் தலையின் மீது அம்மிக்கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்தது நிரூபணம் ஆனது.

உடனே சுங்குவார்சத்திரம் போலீசார் சதீஷ் காவல் நிலையம் அழைத்து வந்து முறையாக விசாரித்த போது, சதீஷ் குடும்பத்தார் யசோதாம்மாளிடம் கடன் வாங்கி இருப்பதாகவும், அதற்கான வட்டியை கேட்டு தொடர்ந்து டார்ச்சர் செய்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் யசோதம்மாளை கழுத்து நெரித்து கொலை செய்துவிட்டு பின்னர் அம்மி கல்லை எடுத்து தலையில் போட்டு முகத்தை சிதைத்ததாகவும் கூறினார்.

சதீஷின் செல்போனை காவல்துறையினர் ஆராய்ந்து பார்த்தபோது, பல இளம் பெண்களுடன் இவர் ஆபாசமாக இருந்ததும், பல பெண்களை தன்னுடைய வலையில் விழவைத்து மிக சொகுசான வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. மேலும் யசோதா அம்மாளை கொலை செய்துவிட்டு அவர்கள் வீட்டில் இருந்த 30 ஆயிரம் பணத்தையும், சுமார் 17 சவரன் தங்க நகைகளையும் கொள்ளை அடித்ததும் விசாரணையில் ஒப்புக்கொண்டார்.

தன்னுடைய சபல புத்தியினால் மனக்கட்டுப்பாடு இல்லாத சதீஷ், 25 வயதிலேயே சல்லாபத்திற்கு ஆசைப்பட்டு பணத்தையும், நகையும் கொள்ளையடித்துவிட்டு, வாங்கிய பணத்தை முறையாக கட்டாமல், பணம் கொடுத்த உறவினரையே கொலை செய்த கொடூரம் காவல்துறைக்கு மிகுந்த அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலேரி என்ற ஒரு குக்கிராமத்தில் பிறந்து காவல்துறை என்ற பெரிய சேவை அமைப்பில் இரண்டு இளைஞர்கள் காவலர்களாக வேலை செய்து தன்னுடைய ஊருக்கும் நாட்டுக்கும் சேவை செய்து பெருமை படுத்துவதை விட்டுவிட்டு, காக்கி சட்டைக்கே சதீஷ் கலங்கத்தை ஏற்படுத்தி விட்டார்.

பாட்டியை கொடூரமாக கொலை செய்துவிட்டு, சதீஷ் அதே ஊரில் இருந்து கொண்டு எதுவுமே நடக்காதது போல, வழக்கமாக நடமாடி வந்தது நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பையே மிஞ்சுவது போல் அமைந்துள்ளது என அந்த கிராமத்து மக்கள் புலம்புகின்றனர்.

Views: - 527

0

0