பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அதிகரிக்கும் மாற்று எரிபொருள் தேவை | முக்கியத்துவம் பெறும் CNG!
23 February 2021, 11:15 amஒரு புதிய கார் வாங்கும்போது நாம் முக்கியமாக கவனிப்பது அதன் மைலேஜ் தான். அதுவும் இப்போது இருக்கும் விலைவாசியில், சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை பெட்ரோல் டீசல் விலையைத் தான் சொல்கிறோம், ஒரு கார் வாங்கும் கட்டாயம் அதன் மைலேஜ் என்பது நாம் கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
ஏற்கனவே, கார் அல்லது பைக்கை வைத்திருப்பவர்களே அதில் பயணிக்க யோசிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. சமீப நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதனால் பயணத்திற்கான எரிபொருள் செலவு முன்னெப்போதையும் விட பன்மடங்காக உயர்ந்துள்ளது. எனவே, ஒப்பீட்டளவில் மிகவும் மலிவு விலையிலான பயணத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு CNG மீண்டும் ஒரு சாத்தியமான எரிபொருள் விருப்பமாக மாறிவருகிறது.
பொதுவாக ஒரு CNG வாகனத்துக்கு அதிக முன்பண செலவு என்பது பெரிதாக இருக்காது. Factory Fitted CNG கருவிகளுக்கு ரூ.50,000 முதல் ரூ.60,000 வரையிலும், அங்கீகரிக்கப்பட்ட மையங்கள் மூலம் பொருத்தப்படும் CNG கருவிகளுக்கு சுமார் ரூ.40,000 வரையும் செலவாகும்.
இதன் வர்த்தக பரிமாற்றத்தைப் பொறுத்தவரையில் இது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று என்று சொல்லலாம். எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டுமென்றால், ஒரு கிலோவுக்கு சுமார் 43 ரூபாய் செலவில், ஒரு CNG வாகனம் சுமார் 20 கிலோமீட்டர் வரை பயணம் செய்ய முடியும். அதன்படி ஒரு கிலோமீட்டருக்கு 2 ரூபாய் செலவாகும். ஒப்பிடுகையில், இன்றைய ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சுமார் 93 ரூபாய் ஆக உள்ளது.
ஒரு கார் ஒரு லிட்டருக்கு 20 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது என்று வைத்துக் கொண்டாலும், ஒரு கிலோமீட்டருக்கு 4 ரூபாய்க்கும் அதிகமாக செலவாகிறது. இரண்டு கார்கள் – ஒன்று CNG யிலும் மற்றும் மற்றொன்று பெட்ரோல் உடனும் ஒரு நாளுக்கு சுமார் 50 கிலோமீட்டர் தூரம் இயங்கினால், இயங்கும் செலவில் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கும். இதை வைத்து பார்க்கையில் சில ஆண்டுகளில், CNG நிறுவலுக்கென ஆகும் செலவை நம்மால் மீட்டுவிட முடியும்.
CNG எரிபொருள் பயன்படுத்த ஒரு முக்கிய பிரச்சினை என்றால் அது இடவசதி தான். இருந்தாலும் ஏறிக்கொண்டே போகும் பெட்ரோல் விலையைப் பார்க்கையில் அதை சமாளித்து தான் ஆக வேண்டும். அதுமட்டுமல்லாது, பெட்ரோலை விட CNG வாகனத்தில் உமிழ்வு அளவு குறைவாக இருப்பதால் இது ஒரு பசுமை எரிபொருளாகவும், சுற்றுச்சூழலுக்கு அதிக கெடுதல் ஏற்படுத்தாததாகவும் உள்ளது.
தொழிற்சாலை பொருத்தப்பட்ட CNG கருவிகளை வழங்குவதில் மாருதி மற்றும் ஹூண்டாய் போன்ற நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. இந்த கருவிகள் வெளி சந்தையில் ஒருவர் வாங்குவதை விட அதிகமாக செலவாகும் என்றாலும், உத்தரவாத நன்மை, அதிகமான பாதுகாப்பு மற்றும் தொந்தரவில்லாத சேவை அனுபவம் போன்றவற்றையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
போகிற போக்கைப் பார்க்கையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கண்டிப்பாக குறையும் வாய்ப்பே இல்லை என்பது தெளிவாக தெரிகிறது, எனவே ஒரு பசுமை எரிபொருளாக CNG கிடைக்கும் போது அதற்கு பலரும் இப்போது மாறி வருகின்றனர். மின்சார கார்களின் விலைகள் அதிகமாக இருப்பதாலும் அதற்கான சார்ஜிங் பாயிண்ட்டுகள் அதிகம் இன்னும் நிறுவப்படாமல் இருப்பதாலும் CNG எரிபொருளே இப்போது ஏற்ற ஒரு தீர்வாகவும் இருக்கிறது.
0
0