5ஜி வசதியுடன் பல அம்சங்கள் கூடிய பிளாக்பெர்ரி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் விரைவில் | முழு விவரம் அறிக
20 August 2020, 9:15 amபிளாக்பெர்ரி இந்த ஆண்டு தொடக்கத்தில் டி.சி.எல் உடனான தனது கூட்டணியை முடித்துக்கொண்டது. இந்த முடிவு பிளாக்பெர்ரி தொலைபேசிகள் இனிமேல் வராது என்று பெரும்பாலான பிளாக்பெர்ரி ரசிகர்கள் நினைத்தாலும், நிறுவனம் இன்று ஆன்வர்ட்மொபிலிட்டி மற்றும் FIH மொபைல் லிமிடெட் உடன் இணைந்து 5ஜி பிளாக்பெர்ரி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை பிஸிக்கல் QWERTY கீபோர்டு உடன் தயாரிப்பதற்கான திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்த கூட்டாண்மை மூலம் முதல் ஸ்மார்ட்போன் 2021 ஆம் ஆண்டின் முதல் பாதியில் அறிமுகப்படுத்தப்படும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளாக்பெர்ரி இந்த தொலைபேசியை வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அறிமுகம் செய்யும். எனவே, நீங்கள் இந்தியாவில் இருக்கும் ஒரு பிளாக்பெர்ரி ரசிகராக இருந்தால் உங்கள் எதிர்பார்ப்பைச் சற்று குறைவாகவே வைத்துக்கொள்வது நல்லது.
வெளியீட்டில் கீபோர்டு கொண்ட ஒரு 5ஜி தொலைபேசியைப் பற்றி மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தாலும், ஆன்வர்ட்மொபிலிட்டியின் வலைத்தளத்தின் புதிய போஸ்டர் 2021 ஆம் ஆண்டில் புதிய ‘பிளாக்பெர்ரி 5 ஜி ஸ்மார்ட்போன்கள்’ வரப்போகிறது என்று குறிப்பிடுகிறது. இந்த கூட்டாண்மை முன்னோக்கிச் செல்வதன் மூலம் அதிக சாதனங்கள் வெளியாகுமா என்பதைப் பார்க்க கொஞ்ச காலம் காத்திருந்துதான் ஆக வேண்டும்.
பிளாக்பெர்ரி அதன் வரவிருக்கும் 5ஜி தொலைபேசியை நிறுவன நிபுணர்களை குறிவைத்து உருவாக்குகிறது. நிறுவனம் முதன்மையாக ஊழியர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் ஒரு பாதுகாப்பான Android அனுபவத்தை வழங்க முயற்சிக்கிறது, இது உற்பத்தித்திறனை மேம்படுத்துகிறது, அதே நேரத்தில் சைபர் தாக்குதல்கள் போன்ற பாதுகாப்பு அச்சுறுத்தல்களிலிருந்து பயனர்களைப் பாதுகாக்கிறது.
பிளாக்பெர்ரியின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன், மொபைல் சந்தைக்கு ஒரு நல்ல செய்தியாக வந்துள்ளது. ஏனென்றால் மற்ற ஸ்மார்ட்போன்கள் எல்லாம் கிளாஸ் சாண்ட்விச் வடிவமைப்பையே பின்பற்றுகின்றன. இது கீபோர்டு உடன் வருவதால் சற்று வித்தியாசமாக இருக்கும். இருப்பினும், முக்கியமான கேள்வி என்னவென்றால், புதிய உத்திகளைக் கொண்டு வர நினைக்கும் பிளாக்பெர்ரி தனது பழைய தவறுகளை மாற்றிக்கொண்டதா என்பதுதான். அதைக் காண 2021 ஆம் ஆண்டுவரை காத்திருந்து தான் ஆக வேண்டும்.