ஜூலை 2021 வரை வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதி..! பேஸ்புக் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
7 August 2020, 10:37 amகொரோனா வைரஸ் பாதிப்புகள் தொடர்ந்து உச்சத்தில் இருப்பதால் பேஸ்புக் நிறுவனம் தனது ஊழியர்களை 2021 ஜூலை வரை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிப்பதாக அறிவித்துள்ளது.
மேலும் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான தேவைகளை நிவர்த்தி செய்ய, ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் 1,000 டாலர் நிதியைக் கொடுக்கும் என்று பேஸ்புக் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
சமீபத்தில் இதே போன்ற நடவடிக்கைகளை பிற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களும் எடுத்துள்ள நிலையில், பேஸ்புக் நிறுவனமும் இந்த வரிசையில் இணைகிறது.
ஜூலை மாத இறுதியில், கூகிள் நிறுவனம், 2021 ஜூன் இறுதி வரை அலுவலகத்தில் இருக்கத் தேவையில்லாத ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கும் என்று கூறியது. அதே நேரத்தில் ட்விட்டர் நிறுவனம் அதன் சில ஊழியர்களுக்கு காலவரையின்றி வீட்டிலிருந்தே வேலை செய்யும் திட்டத்தை முன்மொழிந்தது.
“சுகாதாரம் மற்றும் அரசாங்க நிபுணர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில், இந்த விஷயங்களைப் பற்றிய எங்கள் உள் விவாதங்களிலிருந்து எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், 2021 ஜூலை வரை ஊழியர்களை வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதிக்கிறோம்” என்று பேஸ்புக் செய்தித் தொடர்பாளர் தன்னுடைய மின்னஞ்சல் அறிக்கையில் தெரிவித்தார்.
“கூடுதலாக, நாங்கள் வீட்டு அலுவலக தேவைகளுக்கு கூடுதல் $1,000 ஒவ்வொரு ஊழியர்களுக்கும் வழங்குகிறோம்.” என்று அந்த அறிக்கை மேலும் கூறியது.
அரசாங்க வழிகாட்டுதலைப் பின்பற்றி, கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பகுதிகளில், குறைந்தபட்ச ஊழியர்களுடன் நிறுவனம் மீண்டும் அலுவலகங்களைத் திறக்கும் என்றும் பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.
எனினும், அதிக எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்புகள் காரணமாக, இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் பல இடங்கள் மீண்டும் திறக்கப்பட வாய்ப்பில்லை என்று நிறுவனம் மேலும் கூறியுள்ளது.