PUBG இடத்தைப் பிடிக்க நேரம் பார்த்து களமிறங்கும் FAU-G | இந்திய கேமர்களைக் கவருமா?

5 September 2020, 2:36 pm
FAU-G Game Is India's Answer To PUBG; Launch Slated For October
Quick Share

டிக்டாக் செயலியைத் தடை செய்தபோது சிங்காரி, மோஜ், ரோபோசோ, ஜோஷ், சில்5, MX டகாடக், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போன்று எண்ணற்ற இந்திய செயலிகள் டிக்டாக்கின் இடத்தைப் பிடிக்க முட்டிமோதிக்கொண்டு கிளம்பின. அதே சமயத்தில் சுயரசார்பு பாரதம் என்ற கொள்கைக்காக பல நிறுவனங்கள் Made In India செயலிகளை உருவாக்கவும் உறுதிபூண்டன. அதன் விளைவாக, இன்று டிக்டாக் போன்ற பல செயலிகளை இந்திய மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இப்போது, இதே போன்ற நிலை தான் இந்திய கேமிங் பிரிவிலும் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 17.5 கோடி பயனர்கள் பதிவிறக்கம் செய்து விளையாடிக்கொண்டிருந்த PUBG மொபைல் கேமையும் அதன் லைட் பதிப்புகளையும் இந்திய அரசாங்கம் தடைச் செய்தது. இதற்கான காரணம் என்னவென்று நமக்கெல்லாம் நன்றாகவே தெரியும். இந்திய சீன எல்லையில் நிகழ்ந்து வரும் போர் பதற்றமும், பாதுகாப்பு சிக்கல்களும் தான். 

PUBG மொபைல், PUBG மொபைல் லைட் மற்றும் பல சீன பயன்பாடுகள் தடை செய்யப்பட்ட உடனேயே, இந்திய கேமர்களுக்கு ஆறுதல் தரும் விதமாக ஒரு புதிய கேம் வெளிவந்துள்ளது. அது தான் FAU-G.  

இந்த புதிய கேமை பாலிவுட் திரைப்பட நடிகர் அக்‌ஷய் குமார் தனது வலைத்தள பக்கங்களின் வாயிலாக அறிமுகம் செய்துள்ளார். பெங்களூருவை தளமாகக் கொண்ட nCore கேம்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த மொபைல் கேம் ஃபியர்லெஸ் அண்ட் யுனைடெட்-கார்ட்ஸ் (Fearless and United-Guards) என்பதன் சுருக்கமாகவே FAU-G என்று அழைக்கப்படுகிறது.

FAU-G எப்போது வெளியாகும்?

இந்த FAU-G கேம் அக்டோபரில் தான் வெளியாகும். இந்தியாவின் கேமிங் அதிபர்களில் ஒருவரான விஷால் கோண்டல், என்கோர் கேம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த கேமின் உருவாக்கப்பணியில் இறங்கியுள்ளார். 

ராணுவ வீரர்களுக்கு 20 % நிதி

2019 புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட துணை ராணுவப் படைகளுக்கான அரசாங்க நிதியமான பாரத் கே வீர் எனும் நிதியமைப்பிற்கு FAU-G கேமின் வருவாயிரலிருந்து 20 சதவீத வருவாயை நன்கொடையாக வழங்கப்போவதாகவும் கோண்டல் உறுதியளித்துள்ளார்.

இந்த புதிய விளையாட்டு கால்வான் பள்ளத்தாக்கில் நிகழ்ந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. 

நேரம் பார்த்து களமிறங்கும் FAU-G 

உலகளவில் பல கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்ட பிரபலமான விளையாட்டான PUBG மொபைலை இந்திய அரசாங்க அதிகாரிகள் தடைசெய்து இரண்டு நாட்களே ஆகின்ற நிலையில் FAU-G கேம் களமிறங்குவது சரியான நேரம் பார்த்து தடம் பதிப்பதாக தெரிகிறது. இருப்பினும் ஏற்கனவே இருக்கும், Call of Duty, FreeFire, Battle Royale போன்று நன்கு அறியப்பட்ட கேம்கள் இருக்கும்போது இந்த FAU-G எப்படி இந்திய கேமர்களின் மொபைலில் இடம்பிடிக்கப்போகிறது, மேலும், புதிதாக வரவிருக்கும் கேம்களுடன் எப்படி போட்டியிடப்போகிறது என்பதை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Views: - 4

0

0