பறக்கும் கார் சோதனை வெற்றி! உலகையே திரும்பி பார்க்க வைத்த ஜப்பான் நிறுவனம்!

31 August 2020, 9:07 am
Future of mobility: Japan's flying car conducts first public manned flight
Quick Share

மனிதன் தோன்றிய காலத்திலிருந்துப் பயணம் செய்ய எளிமையான மற்றும் புதுப்புது வழிகளைத் தேடிக்கொண்டு தான் இருக்கிறான். சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து மாட்டுவண்டி, குதிரை வண்டி, சைக்கிள், மோட்டார் சைக்கிள், கார், ரயில் என நவீனத்துக்கு ஏற்றவாறு புதுப்புது வாகனங்கள் தோன்றிக்கொண்டே இருந்தன. பறவை பார்ப்பதை பார்த்த  ரைட் சகோதரர்களுக்கு பறக்கும் எண்ணம் தோன்றியதால் விமானம் கிடைத்தது. இப்போது, தொலைதூரங்களுக்கு செல்ல நினைக்கும் பலர் செலவைப் பொருட்படுத்தாது விமானத்தில் பயணிக்கவே விரும்புகின்றனர். 

உயிர் பெற்ற கனவு

ஆனால், தொழில்நுட்பத்தின் வளர்ச்சி இவ்வளவு வேகமாக இருக்கும்போது, நமக்கென ஒரு  விமானம் இருந்தால் எப்படி இருக்கும் என்று நாம் எண்ணிப்பார்க்காமல் இருந்திருக்க மாட்டோம். அப்படிப்பட்ட ஒரு எண்ணம் தான் இப்போது உயிர் பெற்று பறக்கும் கார் ஆக உருவெடுத்துள்ளது. 

எதிர்காலத்தை மையமாகக் கொண்டு உலகம் இயங்கிக் கொண்டிருக்கையில், பல நிறுவனங்கள் சாலைகளில் ஓடுவதைப் போலவே பார்க்கும் கார்களையும் உருவாக்க வேண்டும் என்று கனவு காண்கின்றன. கனவு கண்டதோடு மட்டுமில்லாமல் அதை நிகழ்த்தியும் காட்டியுள்ளது ஒரு ஜப்பான் நிறுவனம். அதைப் பற்றி தான் இந்தப் பதிவில் பார்க்கப்போகிறோம்.

SkyDrive

இந்த யதார்த்தத்தை நோக்கி ஒரு படி முன்னேறிய, ஜப்பானின் நகர்ப்புற வான்வழி இயக்கத் தீர்வுகளை உருவாக்கும் நிறுவனம் ஆன ஸ்கைட்ரைவ் (SkyDrive), முதல் மனிதர்களைக் கொண்ட ஒரு பறக்கும் கார் உடனான பொதுவெளி சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது.

முழுக் கட்டுப்பாடு

ஸ்கைட்ரைவின் புதிய SD-03 எனும் பறக்கும் கார் மாடல் 10,000 சதுர மீட்டர் டொயோட்டா டெஸ்ட் களத்தில் சுமார் நான்கு நிமிடங்கள் பறந்தது. ஒரு பைலட் கட்டுப்பாட்டிற்கு விமானத்தில் அமர்ந்திருந்தார். ஆனால், அதனுடன் கூடுதலாக கணினி உதவி கட்டுப்பாட்டு அமைப்பும் (computer-assisted control system) விமானத்தின் நிலைத்தன்மையையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த உதவியது, அதே நேரத்தில் களத்தில் தொழில்நுட்ப ஊழியர்கள் விமான நிலைமைகளையும் விமானத்தின் செயல்திறனையும் ஒரு பேக்அப் ஆக கண்காணித்துக் கொண்டிருந்தனர்.

eVTOL

புரோப்பல்லர்களைக் கொண்ட மோட்டார் சைக்கிள் போன்ற வாகனம் உலகின் மிகச்சிறிய மின்சார செங்குத்து டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங் electric Vertical Take-Off and Landing (eVTOL) மாடலாக வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் இது எதிர்காலத்தில் புதிய போக்குவரத்து வழிமுறையாகவும் பார்க்கப்படுகிறது. 

விவரக்குறிப்புகள்

SD-03 பறக்கும் காரின் பவர்டிரெய்னில் நான்கு இடங்களில் ரோட்டர்களை இயக்கும் மின்சார மோட்டார்கள் உள்ளன, ஒவ்வொரு இடத்திலும் இரண்டு ரோட்டர்கள் தனித்தனியாக எதிர் திசைகளில் சுழல்கின்றன, ஒவ்வொன்றும் அதrற்கென உள்ள பிரத்தியேக மோட்டாரால் இயக்கப்படுகின்றன. விமானத்தில் முன்னால் இரண்டு வெள்ளை விளக்குகள் மற்றும் வானத்தில் மிதக்கும் போது வாகனம் செல்லும் திசையை எளிதில் தீர்மானிக்க உடலின் அடிப்பகுதியில் ஒரு சிவப்பு விளக்கும் இயங்குகிறது.

அதிக சோதனைகளை மேற்கொண்டு, தொழில்நுட்பங்களை மேம்படுத்தி, பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் முழு இணக்கத்தை அடைந்தபின், 2023 ஆம் ஆண்டளவில் பறக்கும் காரை நிஜ வாழ்க்கை தயாரிப்பாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் ஸ்கைட்ரைவ் நிறுவனம் கூறுகிறது.

இப்போதைக்கு இந்த பறக்கும் கார் 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே பறக்க முடியும், ஆனால் அது 30 நிமிடங்களாக மாறினால், மேலும் பல செயல்பாடுகளுக்கு உதவியாக இருக்கும் என்றும் மற்றும் அதற்கான முயற்சியில் தொடர்ந்து செயல்படுவதாகவும் ஸ்கைட்ரைவ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Views: - 14

0

0