Wireless சார்ஜிங் வசதியுடன் Genesis GV60 EV | புதிய சகாப்தத்தில் அடியெடுத்து வைக்கும் ஹூண்டாய்!
Author: Hemalatha Ramkumar25 August 2021, 1:36 pm
மின்சார வாகனங்கள் தான் எதிர்காலம் என்றாகிவிட்டது. இந்த சமயத்தில் மின்சார மயமாக்கலுக்கு பெரும்பாலான நிறுவனங்கள் மாறி வருகின்றன. அப்படி முழுமையான மின்சார மயமாக்கலுக்கு காலக்கெடு அமைத்து தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிறுவனங்கள் மின்சார துறையில் என்னென்ன அம்சங்களைப் புதிதாக சேர்க்கலாம் என்று தீவிரமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. அப்படியொரு எதிர்கால நோக்குடன் தயாராகி வரும் மின்சார கார் தான் ஜெனிசிஸ் GV 60.
ஹூண்டாயின் ஆடம்பர கார் வரிசையில் தயாராகி வரும் முதல் மின்சார கார் தான் ஜெனிசிஸ் GV60. இந்த ஜெனிசிஸ் மின்சார கார் பற்றிய சூப்பரான தகவல் கிடைத்துள்ளது. அதன் படி, இந்த மின்சார கார் வயர்லெஸ் சார்ஜிங் திறன் கொண்டிருக்கும் என்று கொரிய நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த கச்சிதமான எஸ்யூவி WiTricity எனும் அமெரிக்க நிறுவனத்தின் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை பயன்படுத்துகிறது. ஹூண்டாயின் வரவிருக்கும் மற்ற மின்சார வாகனங்களில் இருக்கும் அதே பேட்டரி தளம் தான் இந்த மின்சார வாகனத்திலும் பயன்படுத்தப்படும். ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 270 மைல் தூர வரையிலான பயண வரம்பை ஜெனிசிஸ் வழங்கும் என்று ஹூண்டாய் மதிப்பிடுகிறது.
ஜெனிசிஸ் கார் 2022 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு கொரியாவில் வெளியிடப்படும். அது அமெரிக்காவில் வெளியாகும் ஹூண்டாய் வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடனான முதல் மின்சார வாகனமாக இருக்கும்.
பொது நிலையங்கள் அல்லது வீட்டு சுவர் சார்ஜர்களில் பிளக் செருகி 10 மணிநேரம் அல்லது அதற்கு மேல் சார்ஜ் செய்ய வேண்டிய தேவையின்றி, சார்ஜிங் மேட் மீது ஆறு மணிநேரம் இந்த காரை பார்க் செய்தாலே சார்ஜ் ஆகிவிடும்.
BMW நிறுவனம் தான் முதன்முதலில் அமெரிக்காவில் வயர்லெஸ் சார்ஜிங்கை பிளக்-இன் ஹைபிரிட் உடன் அறிமுகப்படுத்தியது. ஆனால் ஜெனிசிஸ் GV60 மின்சார கார் தான் முழுமையாக இண்டக்டிவ் வயர்லெஸ் சார்ஜிங்கைப் பயன்படுத்தும் முதல் 100 சதவீத மின்சார காராக இருக்கும்.
ஹூண்டாய் நிறுவனம், ஜெனிசிஸ் குறித்த மற்ற விவரங்கள் எதையும் வெளியிடவில்லை, ஆனால் வயர்லெஸ் சார்ஜிங் ஒரு விருப்ப அம்சமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. ஆனால், இந்த வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் அனைத்து ஜெனிசிஸ் GV60 மாடலிலும் இருக்காது என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.
கொரியாவில், ஜெனிசிஸ் GV 60 இன் 600 யூனிட்டுகள் மட்டுமே வயர்லெஸ் சார்ஜிங் திறன்களுடன் தயாரிக்கப்படும்.டெஸ்லா சூப்பர்சார்ஜர் போல வேகமானதாக இல்லை என்றாலும், வயர்லெஸ் வசதியை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
0
0