இந்த 2020 ஆம் ஆண்டு ஹார்லி-டேவிட்சன் நிறுவனத்தையும் விட்டுவைக்கவில்லை… இப்படி ஒரு நிலைமையா?!
24 September 2020, 5:32 pmஹார்லி-டேவிட்சன் சந்தையில் நுழைந்ததிலிருந்து ஒரு தசாப்த காலத்திற்குள் இந்தியாவில் பல கடினமான சிக்கலான பயணத்தை மேற்கொண்டுள்ளது. இப்போது இந்தியாவில் அதன் விற்பனை மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளை நிறுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மோட்டார் சைக்கிள்கள் பிரிவில் ஒரு அடையாளமான பிராண்டான ஹார்லி-டேவிட்சன் பைக்குகள் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளது. இந்தியாவுக்குள் இந்நிறுவனம் நுழையும்போது பிரீமியம் பைக் பிரிவு பன்மடங்கு விரிவடையும் என்ற நம்பிக்கையை அளித்தது. ஆனால், நிறுவனத்திற்கான பயண பாதை மிகவும் மென்மையாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்தியாவில் பல வெளியீடுகள் இருந்தபோதிலும், நிறுவனம் தனக்கென தனிதத்துவமான இடத்தைப் பெறத் தவறிவிட்டது. ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, நிறுவனம் இப்போது 2020 ஆம் ஆண்டில் 75 மில்லியன் டாலர் கூடுதல் மறுசீரமைப்பு செலவுகளுக்கான தேவையைக் கொண்டுள்ளது. மேலும், இதனால் இந்தியாவில் விற்பனை மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளை நிறுத்த முடிவு செய்துள்ளது.
அறிக்கையின்படி, இந்தியாவில் ஹார்லியின் விற்பனை அதன் உலகளாவிய மொத்தத்தில் 5 சதவீதம் மட்டுமே உள்ளது.
அமெரிக்கா போன்ற சந்தைகளில் அதிக லாபகரமான பைக்குகளை கொண்டுவருவதில் தெளிவான முக்கியத்துவம் இருந்தபோதிலும், ஹார்லி-டேவிட்சனுக்கான உலகளாவிய வாய்ப்பு மிகவும் சிறப்பாக இல்லை. 2020 ஆம் ஆண்டிற்கான முழு மறுசீரமைப்பு செலவு இப்போது $169 மில்லியனாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் இருந்து விலக நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு கொஞ்ச நாள் காத்திருக்க வேண்டும்.