மண்ணில்லாமல் 95% குறைவான நீரைப் பயன்படுத்தி விவசாயம் | இந்திய மாணவர்கள் சாதனை

6 July 2021, 1:25 pm
Indian Students Create Soil-Less Farming Technique That Uses 95% Less Water
Quick Share

நம் இந்திய நாடு விவசாயிகளின் நாடு என்று சொன்னால் மிகையாகாது. இந்தியாவில் கிட்டத்தட்ட 60 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பியே இருக்கிறார்கள். மீதமுள்ள 40 சதவீத மக்கள் விவசாயிகள் தரும் உணவை நம்பியே இருக்கின்றனர். எனவே இந்தியா முழுக்க முழுக்க விவசாய நாடு என்று சொல்லலாம். இருந்தாலும் விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்குக்கு உணவு வழங்க முடியாமல் கஷ்டப்படுகின்றனர்.

இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்ற நோக்கில், TERI ஸ்கூல் ஆஃப் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மாணவர்களான  சௌரியதீப் பாசக் மற்றும் லவ்கேஷ் பால்சந்தானி ஆகியோர் சமூக அளவிலான சூரியசக்தியால் இயங்கும் ஹைட்ரோபோனிக் தீவன அலகு ஒன்றை உருவாக்கியுள்ளனர். இது வளமான, சத்தான பச்சை தீவனத்தை மிகக் குறைந்த நீர் மற்றும் மண் இல்லாத விவசாய நுட்பத்தின் மூலம் வளர்க்கக்கூடியது. பாரம்பரிய அணுகுமுறைகளுடன் ஒப்பிடும்போது ஆறு மடங்கு பயிர் விளைச்சலை அதிகரிக்கும் நுட்பம் இது என்றும் சொல்லப்படுகிறது.

இந்த கண்டுபிடிப்புக்காக,  Efficiency for Access Design Challenge எனும் போட்டியின் இறுதி சுற்றில் வெண்கல பதக்கம் வென்றுள்ளனர். 

மேலும் காலநிலை மாற்றம் மற்றும் நீடித்த விவசாய நடைமுறைகள் குறித்து மிகுந்த அக்கறையைக் கொண்டு இருந்ததால் சௌரியதீப் PwC இந்தியாவில் தனது வேலையை விட்டுவிட்டார், அதே போல லவ்கேஷ் பால்சந்தானியும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பற்றி படிப்பதற்காக இயந்திர பொறியியல் படிப்பில் இருந்து மாறினார். இதையடுத்து உணவு-நீர்-ஆற்றல் ஆகியவற்றின் இணைப்பு குறித்து தெரிந்துக்கொள்ளும்போது இந்த புதிய முறையை உருவாக்க வேண்டும் என்ற யோசனை அவர்களுக்குத் தோன்றியுள்ளது.

இந்தியாவில் விவசாயிகள் தற்போது எதிர்கொள்ளும் சவால்களை கருத்தில் கொண்டு இந்த புதிய நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த புதிய வடிவமைப்பில் பாரம்பரிய தீவன உற்பத்திக்கு சாதாரணமாக பயன்படுத்தும் நீரை விட 95 சதவீதம் நீர் குறைவாகவே தேவைப்படுகிறது. விதை விளைய 8 நாட்கள் ஆகும், மண்ணற்ற தன்மை காரணமாக வேறு எந்த வேலையும் இல்லை. எரிசக்தி திறன் கொண்ட குளிரூட்டும் உத்திகளைப் பயன்படுத்தி ஒரு மாதத்தில் 0.5 யூனிட் மின்சாரம் மட்டுமே இந்த சாதனத்திற்குப் தேவைப்படுகிறது. 

50 கிலோகிராம்  பசுந்தீவன விளைச்சலைக் கொடுக்கும் மிகவும் மலிவு விலையிலான ஸ்மார்ட் தீவன அலகு ரூ.7,500 விலையில் கட்டமைக்கப்படலாம் என்றும் இது DC சக்தியைப் பயன்படுத்தி முழுக்க முழுக்க சூரிய சக்தியில் இயங்குகிறது என்றும் இதன் கண்டுபிடிப்பாளர்களான சௌரியதீப் பாசக் மற்றும் லவ்கேஷ் பால்சந்தானி தெரிவித்துள்ளனர்.

Views: - 173

0

0