மொபைல் டவர் நிறுவல் மோசடி | உங்கள் இடத்தில் மொபைல் டவர் வைக்க வேண்டும் என்று யாரேனும் கேட்டால் என்ன செய்ய வேண்டும்?

6 July 2021, 3:26 pm
Mobile tower installation scam to extort money
Quick Share

மோசடி செய்பவர்கள் எப்படியேனும் நம்மிடம் இருந்து பணம் பெற வேண்டும் என்று பல முயற்சிகளில் இறங்கியுள்ளனர். அப்படி அவர்கள் தற்போது கையிலெடுத்துள்ள மோசடி ஆயுதம் தான் மொபைல் டவர் மோசடி. உங்கள் இடத்தில் மொபைல் கோபுரங்களை நிறுவ பணம் தருவதாக சொல்லி பணம் பறிக்க முயல்கின்றனர். 

ஏமாறுகிறவர்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்று பார்த்தால் முன்பணமாக 40 லட்சம், 35000 ரூபாய் வாடகை என நன்கு படித்து விஷயம் தெரிந்தவர்கள் கூட இந்த ஒரு ஆஃபரைக் கேட்டதும் சற்று சறுக்கி விடுகின்றனர். 

பணம் தருவதாக சொல்லி பணத்தை தருவதற்கு முன்னதாக மோசடி செய்பவரின் தனிப்பட்ட/நிறுவன கணக்கில் பாதுகாப்பு வைப்புத்தொகையாகவோ அல்லது விண்ணப்ப கட்டணமாக அல்லது பதிவு கட்டணமாக அல்லது டெலிகாம் சட்டத்தின் கீழ் அரசு முத்திரை வரியாக பணம் டெபாசிட் செய்யுமாறு கேட்கின்றனர். பணத்தைப் பெறும் வரை தங்களை ஒரு பெரிய நிறுவனமான காட்டிக்கொள்வார்கள். ஆனால் தப்பித்தவறி ஏமாந்துப்போய் நீங்கள் பணம் கொடுத்துவிட்டால் அப்படி ஒரு நிறுவனமோ / தனிநபரோ / ஏஜென்சியோ இல்லை என்பது உங்களுக்குத் தெரிய வரும்.

இதனால் இது போன்ற மோசடிகளில் பணத்தை பறிகொடுக்காமல் இருக்க என்ன மாதிரியெல்லாம் மோசடி செய்வார்கள் என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும்.

மோசடி செய்பவர் மொபைல் டவர் நிறுவ இடம் தேடுவதாக bulk SMS மூலம் எஸ்எம்எஸ் / விளம்பரங்களை பொதுமக்களுக்கு அனுப்புகின்றனர்.

புகழ்பெற்ற மொபைல் டவர் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி அப்பாவி மக்களைத் தொடர்புகொண்டு மொபைல் கோபுரங்களை நிறுவுவதற்கு உங்கள் சொத்து தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அவர்களுக்குத் தெரிவித்து பணம் பறிக்க முயல்கின்றனர்.

உரிமம் பெற்ற தொலைத் தொடர்பு சேவை வழங்குநர் மற்றும் புகழ்பெற்ற உள்கட்டமைப்பு வழங்கும் நிறுவனத்தைப் போன்ற போலி நிறுவனத்தின் பெயரை அவர்கள் பயன்படுத்துகின்றனர். 

அது மட்டுமில்லாமல் மக்களை நம்ப வைக்க மோசடி செய்பவர்கள் தங்கள் உண்மை தன்மையை நிரூபிக்க தங்கள் சொந்த வலைத்தளம் ஒன்றையும் உருவாக்கி வைத்திருப்பார்கள். 

உங்கள் இடத்தில் மொபைல் கோபுரம் நிறுவப்பட்டவுடன் ஒவ்வொரு மாதமும் மிகப்பெரிய தொகை வாடகையாக கிடைக்கும் என்று போலியான தகவலை நம்ப வைக்க முயற்சி செய்வார்கள்.

கோபுரத்தை நிறுவும் பொருட்டு; தொலைதொடர்பு உள்கட்டமைப்பைப் பயன்படுத்துவதற்காக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் (TRAI) தடையில்லா சான்றிதழ் (NOC) பெற நில உரிமையாளர் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்ய வேண்டுமென்று சொல்வார்கள்.

பணம் செலுத்தியதும் சந்தேகம் வராமல் இருக்க மோசடி செய்பவர்கள் நில உரிமையாளர்களுக்கு தடையில்லா சான்றிதழ்கள்/அனுமதியையும் போலியாக  தயார் செய்தும் கூட வழங்குகிறார்கள்.

இது போன்று ஏமாற்றுபவர்களிடம் இருந்து முன்னெச்சரிக்கை உடன் இருப்பது எப்படி?

1) உங்கள் போன், மின்னஞ்சலுக்கு ஏதேனும் ஃபிஷிங் மெசேஜ்கள் வந்தால் ஒருபோதும் அதற்குப் பதிலளிக்க வேண்டாம். மோசடி செய்பவர்கள் வழக்கமாக பணத்தை பறிக்க ஃபிஷிங் செய்திகளை Bulk SMS ஆக அனுப்புவார்கள்.

2) எந்தவொரு நிறுவனமோ / ஏஜென்சியோ / தனிநபரோ முன்கூட்டியே கட்டணம் செலுத்த கேட்கிறார்களானால், கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். அப்படி ஒரு நிறுவனம் உண்மையிலேயே இருக்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டும்.

3) இது போன்று மொபைல் கோபுரங்களை நிறுவுவதற்கு பணம் கேட்டால் சட்ட அமலாக்க முகவர்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

4) மொபைல் கோபுரங்களை நிறுவுவதற்கு TRAI/ பிற அரசு நிறுவனங்கள் தடையில்லா சான்றிதழ் (NOC) என எதுவும் வழங்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

5) உங்களைத் தொடர்பு கொண்ட டெலிகாம் சேவை வழங்குநர்- இன் நம்பகத்தன்மையை DOT வலைத்தளத்தில் சரிபார்க்க வேண்டும்.

6) இது போன்ற மோசடியில் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், உடனே https://cybercrime.gov.in/ என்ற வலைதளத்தில் புகார் அளிக்கலாம்.

இது ஒரு பொதுவான எச்சரிக்கை மட்டுமே. இது குறிப்பிட்ட தனி நபருக்கோ அல்லது தயாரிப்புகளுக்கோ அல்லது சேவைகளுக்கோ எதிரானது அல்ல.

Views: - 143

0

0