யாரும் இதிலிருந்து தப்பிக்க முடியாது…இப்படி ஒரு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முதல் நாடு சிங்கப்பூர் தான்!
28 September 2020, 1:29 pmசிங்கப்பூர் தனது தேசிய அடையாளத் திட்டத்தில் முக சரிபார்ப்பைப் பயன்படுத்தும் உலகின் முதல் நாடாக மாறவுள்ளது. பிபிசி அறிக்கையின்படி, சிங்கப்பூர் அரசு, நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு தொழில்நுட்பம் ‘அடிப்படை’ என்றும், அனைத்து குடிமக்களும் பயோமெட்ரிக் அங்கீகாரம் மூலம் தனியார் மற்றும் அரசு சேவைகளுக்கு பாதுகாப்பான அணுகலைப் பெறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த முக சரிபார்ப்பு முறையை நாடு முழுவதும் அமல்படுத்தப்பட போவதற்கு முன்னதாக ஒரு வங்கியில் முயற்சி திட்டமாக அமலில் உள்ளதாக சிங்கப்பூர் அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த உயர் தொழில்நுட்ப அமைப்பு ஒரு நபரை அடையாளம் காண்பதோடு மட்டுமல்லாமல், அவர்கள் உடல் ரீதியாக அந்த இடத்தில் இருக்கிறார்களா என்பதையும் சரிபார்க்கும். இந்த தொழில்நுட்பத்தை இங்கிலாந்தைச் சேர்ந்த ஐப்ரூவ் (iProov) என்ற நிறுவனம் வழங்கி வருகிறது.
சிங்கப்பூரின் டிஜிட்டல் அடையாளத் திட்டமான சிங்பாஸ் (SingPass) உடன் இந்த தொழில்நுட்பம் ஒருங்கிணைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. SingPass என்பது குடிமக்கள் ஆன்லைனில் அரசு சேவைகளை பெறுவதற்காக உருவாக்கப்பட்ட ஒன்றாகும். ஐப்ரூவ் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகி ஆண்ட்ரூ பட் பிபிசியிடம் கூறுகையில், ஏற்கனவே ஒரு தேசிய டிஜிட்டல் அடையாளத் திட்டத்தைப் பயன்படுத்தும் நபர்களின் அடையாளங்களைப் பாதுகாக்க மேகக்கணி சார்ந்த முகம் சரிபார்ப்பு அதாவது cloud-based face verification முறை பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும் என்று தெரிவித்தனர்.
அறிக்கையின்படி, மென்பொருள் முதலில் அடையாளத்தை அடையாளம் காணும் பின்னர் அங்குள்ள தரவுத்தளத்துடன் விவரங்களை சரிபார்க்கும். இவ்வாறு இரண்டு செயல்பாடுகளையும் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முக்கிய அம்சம் என்னவென்றால், இந்த சரிபார்ப்பு செயல்முறை ஒரு நபரின் பிரத்யேக ஒப்புதலுடன் மட்டுமே மேற்கொள்ளப்படும்.
ஒரு ரயில் நிலையத்தில் அனைத்து முகங்களையும் ஸ்கேன் செய்யும் திறன் மற்றும் ஒரு குற்றவாளி கேமராவைத் தாண்டி நடந்தால் அதிகாரிகளை எச்சரிப்பது உள்ளிட்ட பல அம்சங்களை இந்த முக அங்கீகார தொழில்நுட்பம் இந்த சமூகத்திற்கு வழங்கும் என்றும் iProov நிறுவனத்தின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.