சோனி ஆல்பா கேமரா அமைப்புடன் ஏர்பீக் ட்ரோன் | வெளியானது வீடியோ
12 January 2021, 1:28 pmகடந்த ஆண்டு நவம்பரில், சோனி ஒரு ஏர்பீக் ப்ராஜெக்ட் மூலம் ட்ரோன் பிரிவில் நுழைவதற்கான தனது திட்டங்களை அறிவித்திருந்தது. பல மாதங்களுக்குப் பிறகு, சோனி இறுதியாக ஏர்பீக் ட்ரோன்களிலிருந்து என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் என்பதற்கான ஒரு மாதிரி வீடியோவை நமக்கு வழங்கியுள்ளது.
மெய்நிகர் நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் கண்காட்சி (CES) 2021 நிகழ்வில், சோனி தனது முதல் ஏர்பீக் ட்ரோனைக் காட்சிப்படுத்தியது. இன்-ஹவுஸ் ஆல்பா மிரர்லெஸ் கேமராவைக் கொண்ட ஏர்பீக் ட்ரோன் வீடியோகிராபி மற்றும் புகைப்பட ஆர்வலர்கள் போன்ற உள்ளடக்க படைப்பாளர்களை இலக்காகக் கொண்டுள்ளது. தொழில்நுட்ப மாநாட்டில் ஒரு வழக்கமான குவாட்கோப்டர் வடிவமைப்போடு காட்சிப்படுத்தியது. இது பறக்கும்போது பின் வரச்செய்ய இரண்டு லேண்டிங் கியர் நீட்டிப்புகளையும் கொண்டுள்ளது.
“ஆல்பா சிஸ்டம் பொருத்தக்கூடிய தொழில்துறையின் மிகச்சிறிய ட்ரோன் ஆன ஏர்பீக், சிறப்பான மற்றும் துல்லியமான படப்பிடிப்புக்கு நிலையாக பார்க்கும் வசதியைக் கொண்டுள்ளது, மேலும் பொழுதுபோக்கு உலகிற்கு பங்களிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் புதிய படைப்புகளுக்கான புதிய சாத்தியங்களுக்கான கதவையும் இது திறக்கும்” என்று சோனி ஒரு பதிவில் தெரிவித்துள்ளது.
ட்ரோனின் வீடியோவைத் தவிர, சோனி இந்த திட்டத்தைப் பற்றி அதிக தகவல்கள் எதையும் வெளிப்படுத்தவில்லை. சோனியின் அதிகாரப்பூர்வ ஏர்பீக் வலைத்தளத்தில் உள்ள தகவலின்படி, நிறுவனம் இன்னும் அமெரிக்க மற்றும் ஜப்பானில் உள்ள தொழில்முறை ட்ரோன் பயனர்கள் மற்றும் மக்களிடமிருந்து கருத்துகளைப் பெறும் பணியில் உள்ளது. வணிக ரீதியான வெளியீட்டைப் பொறுத்தவரை, இது இந்த ஆண்டின் பிற்பகுதியில் நிகழக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.