Humble Motors: உலகிலேயே முதன்முதலில் சூரிய சக்தியில் இயங்கும் மின்சார கார்!
2 April 2021, 5:45 pmஉலகெங்கிலும் பல மக்களின் கவனம் இப்போது மின்சார வாகனங்களின் பக்கம் திரும்பியுள்ளது என்பது மறுக்க முடியாத ஒன்று. அதை கருத்தில் கொண்டு பெரும்பாலான கார் தயாரிப்பாளர்கள் இப்போது மின்சார வாகனங்களைத் தயாரிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆனால் போதுமான சார்ஜிங் கட்டமைப்பு இல்லாததாலும் கார்பன் உமிழ்வு அதிகரிப்பதாலும் இவை ஒரு மிகப்பெரிய சிக்கலாக பார்க்கப்படுகிறது. ஆனால், இதற்கும் இயற்கையாகவே ஒரு மாற்று உள்ளது. கார் தயாரிப்பாளர் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்ய சூரிய சக்தியைப் பயன்படுத்துவதன் மூலம் இது போன்ற சிக்கல்களை கையாள முடியும். இதே போன்ற சுற்றுசூழலுக்கு ஆரோக்கியமான முடிவைத் தான் இப்போது ஒரு நிறுவனம் எடுத்துள்ளது.
கலிஃபோர்னியாவை தளமாகக் கொண்ட மின்சார வாகன நிறுவனமான ஹம்பிள் மோட்டார்ஸ் (Humble Motors) தான் இப்போது உலகின் முதல் சூரிய சக்தியில் இயங்கும் மின்சார எஸ்யூவியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இது சமீபத்தில் ஒரு கண்காட்சியின்போதும் காட்சிப் படுத்தப்பட்டது.
விருது பெற்ற ஃபார்முலா 1 ரேஸ் கார் டிசைனர் உள்ளிட்ட தொழில்துறை முன்னோடிகளால் 2020 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஹம்பிள் மோட்டார்ஸ், காரின் மேலிருக்கும் சன்ரூஃபை மாற்றியமைத்து, அதற்கு பதிலாக ஒளிமின்னழுத்த செல்களைக் (photovoltaic cells) கொண்ட ஒரு பேனலை மாற்றியமைத்துள்ளது. பயணத்தின்போது கூட வாகனம் தன்னை ரீசார்ஜ் செய்ய, இந்த சூரிய சக்தியை சேமிக்க உதவும் இந்த ஒளிமின்னழுத்த செல்கள் உதவியாக இருக்கும்.
ஹம்பிள் ஒன் கான்செப்ட் எஸ்யூவியின் தொழில்நுட்ப விவரங்களைப் பொறுத்தவரை, இது பலரையும் ஆச்சரியபடுத்தக்கூடிய ஒன்றாக தான் இருக்கும். நான்கு கதவுகள், ஐந்து இருக்கைகள் கொண்ட எஸ்யூவி ஒரு முறை சார்ஜ் செய்யப்பட்டால் 800 கி.மீ.க்கு மேல் இயக்க வரம்பை வழங்கக்கூடியதாக இருக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. தற்போது உலகம் முழுவதும் கிடைக்கக்கூடிய சில முன்னணி மின்சார வாகனங்களை விட இது மிக சிறப்பானதாக தெரிகிறது. எஸ்யூவி அதிகபட்சமாக 1020 bhp சக்தியை வெளியேற்ற முடியும் என்றும் ஹம்பிள் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
ஹம்பிள் ஒன் கான்செப்ட் எஸ்யூவி 5,029 மிமீ நீளம் கொண்டது, இது டொயோட்டா கொரோலாவை விட சற்று நீளமானது. இது டெஸ்லா சைபர்டக்கை விட சிறியது, மேலும் 1814 கிலோ எடைக் கொண்டது, இது அமெரிக்க கார் தயாரிப்பாளரான டெஸ்லாவின் காரை விட 680 கிலோ குறைவான எடைக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
0
0