“முழுமையாக மின்சார வாகனங்களுக்கு மாறுவது சாத்தியமில்லை” திடீரென ஜகா வாங்கும் டொயோட்டா! காரணம் என்ன?

Author: Dhivagar
27 July 2021, 11:55 am
Toyota lobbying policymakers to slow the shift towards electric vehicles
Quick Share

இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் குறிப்பிட்ட கலவரையறைக்குள் முழுமையாக மின்சார வாகன பயன்பாட்டுக்கு மாற உறுதிப்பூண்டுள்ள நிலையில் பல முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் முழுமையாக மின்சார வாகன பயன்பாட்டுக்கு படிப்படியாக மாறி வருகின்றன. ஆனால், இந்த நிலையில் உலகின் மிகப்பெரிய ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா, முழுமையாக மின்சார வாகன மயமாக மாறுவது சாத்தியமில்லை, ஹைட்ரஜன் வாயு மற்றும் பெட்ரோல் உடன் இயக்கப்படுவது போன்ற ஹைபிரிட் வாகனங்கள் தான் பயனுள்ளதாக இருக்கும் என்று முழுமையாக மின்சார வாகன மாறுதலுக்கு எதிராக நிற்கிறது. டொயோட்டா நிறுவனத்தின் இந்த மாற்றத்துக்கு காரணம் என்ன? ஏன் மற்ற நிறுவனங்கள் ஒப்புக்கொள்ளும்போது டொயோட்டா நிறுவனத்தால் மட்டும் மின்சார மயமாக்கல் சாத்தியமில்லை என்பதை இந்த பதிவின் ஊடாக நாம் தெரிந்துக்கொள்ளலாம்.

அதிக அளவிலான மின்சார வாகனங்களை சாலைக்குக் கொண்டு வருவதற்கான செயல்முறையை அமெரிக்கா ஏற்கனேவே மெதுவாகதான் செய்து வருகிறது. இருந்தும் இன்னும் இதை தாமதப்படுத்த வேண்டும் என்று டொயோட்டா எதிர்பார்க்கிறது. இதற்காக இந்த ஜப்பானிய நிறுவனம், வாஷிங்டன் டி.சி.யில் உள்ள கொள்கை வகுப்பாளர்களிடம், முழுமையான மின்சார மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இதற்கான காரணம், மற்ற முன்னணி நிறுவனங்களை விட டொயோட்டா தொழில்நுட்ப ரீதியாக பின்தங்கி இருப்பது தான் என்று கூறப்படுகிறது. உடனடியாக மின்சார மையமாக மாற மற்ற நிறுவனங்களிடம் இருக்கும் அளவுக்கு டொயோட்டா இன்னும் தொழில்நுட்ப ரீதியாக நிலையான இடத்தில் இல்லை என்றும் கூறப்படுகிறது.

நியூயோர்க் டைம்ஸ் இதழில் வெளியான செய்தியின்படி, சமீபத்தில் டொயோட்டா நிர்வாகி ஒருவர் காங்கிரஸ் தலைவர்களை தனியாக சந்தித்து, பைடென் நிர்வாகத்தின் திட்டங்களுக்கு எதிராக வாதிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் மின்சார வாகன மாறுதலை ஊக்குவிக்க பில்லியன் கணக்கான டாலர்களை பைடன் அரசு செலவிடுவதற்கும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். டொயோட்டா ப்ரியஸ் போன்ற ஹைபிரிட் வாகனங்கள், ஹைட்ரஜனில் இயங்கும் எரிபொருள் செல் வாகனங்களும் கலவையில் இருக்க வேண்டும் என்று டொயோட்டா நிர்வாகியை கிறிஸ் ரெனால்ட்ஸ் வாதிட்டுள்ளார்.

அதுமட்டுமில்லாமல், வாகனத் துறையின் முக்கிய DC-அடிப்படையிலான பரப்புரை குழு, அலையன்ஸ் ஃபார் ஆட்டோமோட்டிவ் இன்னோவேஷன் ஆகியவற்றின் மூலம் மின்சார வாகன கொள்கையை டொயோட்டா தாமதப்படுத்தி வருகிறது. அதோடு, முக்கிய கார் நிறுவனங்களையும் அவற்றின் சப்ளையர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ரெனால்ட்ஸ் தலைமையிலான குழு, கலிபோர்னியா சமரசம் என்று அழைக்கப்படுவ  அதன் உத்தியோகபூர்வ நிலைப்பாடாக ஏற்றுக்கொள்வதற்காக பைடென் நிர்வாகத்தின் திட்டத்திற்கு எதிராக வாதிட்டு வருவதாக டைம்ஸ் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு, கார் நிறுவனங்களின் ஒரு குழு கலிஃபோர்னியாவுடன் டெயில்பைப் உமிழ்வு குறித்து ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டது, இதன் மூலம் அமெரிக்காவை விட கடுமையான உமிழ்வு விதிகளை அமைக்க முயன்றது. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரசின் கீழ், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் கலிபோர்னியாவிற்கு அதன் சொந்த உமிழ்வு தரங்களை நிர்ணயிக்கும் சக்தியை அகற்ற முயன்றது. ஆனால் எதிர்பாராத விதமாக டொனால்ட் ட்ரம்ப் அரசு கவிழ்ந்து பைடன் அரசு அமைந்ததால், நிலைமை தலைகீழாக மாறியது. பைடன் அரசு கலிபோர்னியாவையும் பிற மாநிலங்களையும் கடுமையான உமிழ்வு விதிமுறைகளை விதிக்க அனுமதி அளித்தது.

கலிஃபோர்னியாவுடனான போரில் டிரம்ப் நிர்வாகத்துக்கு பக்கபலமாக இருந்த டொயோட்டா, மேலும் ஆட்டம் கண்டது. கலிஃபோர்னியா மட்டுமில்லாமல், இந்தியா மற்றும் அதன் சொந்த நாடான ஜப்பானிலும் மின்சார வாகன கொள்கைகளுக்கு எதிராக நிறுவனம் வாதிட்டது.

ஆனால் உண்மையில் சொல்லப்போனால், மின்சார வாகன கொள்கைகளுக்கு எதிரான டொயோட்டாவின் முயற்சிகள் சற்று ஆச்சரியமளிக்கும் ஒன்றுதான். ஏனென்றால் பேட்டரி மூலம் இயங்கும் போக்குவரத்தை ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ளும் நிறுவனமாகவே டொயோட்டா இருந்தது. 1997 ஆம் ஆண்டில் டொயோட்டா ப்ரியஸ் மாடலையும் நிறுவனம் வெளியிட்டு, மாற்று பவர் ட்ரெயின்கள் கொண்ட வாகனங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கக்கூடும் என்பதை நிரூபித்ததன் மூலம் டெஸ்லா மற்றும் பிற முன்னணி நிறுவனங்களுக்கு ஒரு புதிய பாதையை உருவாக்க உதவியது. மேலும் சமீபத்தில் கூட, பேட்டரி உடன் இயங்கும் எலக்ட்ரிக் வாகனங்கள், ஹைட்ரஜன் ஃபியூயல் செல் மற்றும் எரிவாயு-மின்சார ஹைபிரிட் உட்பட 70 புதிய மாடல்களை 2025 க்குள் வெளியிடும் திட்டத்தை வாகன உற்பத்தியாளர் வெளியிட்டுள்ளது.

ஆனால், இதை எல்லாம் செய்தாலும், டொயோட்டா அதன் போட்டியாளர்களை விட தொழில்நுட்ப ரீதியாக மிகவும் பின்தங்கியிருக்கிறது என்ற உண்மையை மறைக்க இயவில்லை. நிசான், ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் வோக்ஸ்வாகன் போன்ற நிறுவனங்கள் பல ஆண்டுகளாக தூய பேட்டரி-மின்சார வாகனங்களை விற்பனை செய்து வருகின்றன, அதே நேரத்தில் எரிவாயு கார்களை முற்றிலுமாக அகற்றுவதற்கான திட்டங்களையும் வெளியிட்டுள்ளன. எனவே இதை கருத்தில் கொண்டு பார்க்கையில் டொயோட்டா மிகவும் பிந்தங்கியிருப்பது வெட்ட வெளிச்சமாகிறது.

மற்ற முன்னணி நிறுவனகங்களான நிசான், வோக்ஸ்வாகன், மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற நிறுவனகளை விட தொழில்நுட்ப ரீதியாக பின்தங்கி இருப்பதன் காரணமாகவும், முன்பெல்லாம் அதிக அரசியல் ஈடுபாடு இல்லாமல் வளர்ச்சியில் கவனம் செலுத்தி வந்த டொயோட்டா இப்போது அதிக அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதன் காரணமாகவும் அதன் தொழில்நுட்பத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது. டொயோட்டா நிறுவனம் தொய்வடைந்துள்ள நிலையில் மற்ற முன்னணி வாகன நிறுவனங்கள் மிக வேகமாக மின்சார மயமாக்கலை நோக்கி வேகமாக நகர்ந்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.  

Views: - 301

0

0