ஒருவர் இறந்த பிறகு அவரின் ஆதார் அட்டைக்கு என்ன ஆகும்…???

Author: Hemalatha Ramkumar
30 November 2021, 3:29 pm
Quick Share

இன்றைய காலகட்டத்தில் ஆதார் அட்டை என்பது இன்றியமையாத ஆவணமாகிவிட்டது. PAN எண்ணைப் பெறுவது முதல் வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்வது வரை மற்றும் அரசு திட்டங்களின் பலன்களைப் பெறுவதற்கு ஆதார் அவசியம். வீடு வாங்குவது முதல் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் வழங்குவது வரை பெரும்பாலான வங்கிச் செயல்பாடுகளுக்கும் இது தேவைப்படுகிறது. இருப்பினும், இறந்த பிறகு ஒருவரின் ஆதார் எண்ணுக்கு என்ன நடக்கும்? இந்த கேள்வி பலரது மனதில் இருக்கலாம்.

இந்த கேள்விக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நாடாளுமன்றத்தில் பதிலளித்தார்.

ஒருவர் இறந்த பிறகு, அவரின் ஆதார் செயலிழக்கப்படுவதில்லை. ஏனெனில் அத்தகைய ஏற்பாடு இன்னும் கொண்டு வரப்பட இல்லை என்று அமைச்சர் தெரிவித்தார். சந்திரசேகர் கூறுகையில், தற்போது இறந்தவரின் ஆதார் எண்ணை ரத்து செய்யும் முறை எதுவும் இல்லை. இருப்பினும், இறப்புச் சான்றிதழை வழங்கும்போது இறந்தவர்களின் ஆதார் எண்ணை எடுத்துக்கொள்வதற்காக, பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டம், 1969-க்கான வரைவு திருத்தங்கள் குறித்து, இந்தியப் பதிவாளர் ஜெனரல், UIDAI-யிடம் பரிந்துரைகளைக் கோரியுள்ளதாக அவர் மக்களவையில் தெரிவித்தார்.

நாட்டில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் (Registrar) பிறப்பு மற்றும் இறப்பு தரவுகளின் பாதுகாவலராக உள்ளார். தற்போது, ​​ஆதாரை செயலிழக்கச் செய்வதற்காக பதிவாளரிடம் இருந்து இறந்தவர்களின் ஆதார் எண்ணைப் பெறுவதற்கான வழிமுறை எதுவும் இல்லை. ஆனால் இந்த நிறுவனங்களில் ஆதார் எண் பகிர்வு கட்டமைப்பு நடைமுறைக்கு வந்தவுடன், பதிவாளர்கள் இறந்தவரின் ஆதார் எண்ணை செயலிழக்க UIDAI உடன் பகிர்ந்து கொள்வார்கள். ஆதாரை செயலிழக்கச் செய்வது அல்லது இறப்புச் சான்றிதழுடன் இணைப்பது ஆதார் அட்டைதாரரின் மரணத்திற்குப் பிறகு தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும்.

Views: - 410

0

0