Magic Rice | நம்பமுடியாது…. ஆனால் உண்மை! சமைக்காமலே சாதமாக மாறும் “மேஜிக் ரைஸ்”
19 January 2021, 12:33 pm‘மேஜிக் அரிசி’ பற்றி நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சமைக்காமலே இதை சாப்பிட முடியும் என்றால் உங்களால் இதை நம்ப முடிகிறதா? இந்த அரிசி சாதம் ஆக வெந்நீர் கூட தேவை இல்லை சாதாரண நீர் இருந்தாலே போதும். அட இதெல்லாம் நடக்குற விஷயமா, சும்மா கதை விடுறாங்கனு உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், உண்மையிலேயே இப்படி ஒரு பாரம்பரிய அரிசி வகை இருக்குங்க. அது என்ன? இது எங்க கிடைக்கும்? என்பதையெல்லாம் பற்றித்தான் பார்க்க போறோம்.
நாம் மேஜிக் ரைஸ் என்னும் பட்டபெயருடன் அழைக்கும் இந்த அரிசியின் உண்மையான பெயர் Boka Saul. இது ஒரு சிறப்பு வகை அரிசி. பீகாரில் மேற்கு சம்பாரன் ஹார்பூர் கிராமத்தில் விஜய் கிரி என்ற விவசாயி இந்த மேஜிக் அரிசியைப் பயிரிட்டு அறுவடைச் செய்து வருகிறார்.
64 வயதான விவசாயி விஜய் கிரி இந்த பாரம்பரிய வகை நெற்பயிரையும் மற்றும் கோதுமையையும் பயிரிடுவதாக கூறப்படுகிறது. 10 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த விஜய் கிரி சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் உள்ள தனது நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.
பாரம்பரிய வேளாண்மை குறித்த முக்கியத்துவத்தை அறிந்து, அவரும் அதை ஏற்றுக்கொண்டார். பாரம்பரிய விவசாயம் குறித்து அறிந்துக்கொள்ள விவசாய கண்காட்சிகள் மற்றும் பல்வேறு விவசாய நிகழ்வுகளில் கலந்து கொள்ளத் தொடங்கினார், அதன் மூலம் அவர் நிறைய கற்றுக்கொண்டார். பஞ்சாப் மாநிலத்தின் மொஹாலி பகுதியில் இதுபோன்ற ஒரு விவசாய நிகழ்ச்சியின் போது அவர் கருப்பு கோதுமை பற்றி அறிந்து கொண்டார். இதேபோல், மேற்கு வங்கத்தில் அவர் கருப்பு அரிசி மற்றும் மேஜிக் அரிசி வகைகளைப் பற்றி அறிந்து கொண்டார். விஜய் இந்த மூன்று வகைகளைப் பற்றி விரிவாக அறிந்து அவற்றைத் தன் நிலத்தில் பயிரிட்டார், இது மிகவும் நல்ல பலனைத் தந்தது.
விஜய் கிரி ஒரு ஏக்கரில் மேஜிக் நெல்லையும் (Boka Saul) பயிரிடுகிறார். இந்த அரிசி வகை அசாமில் முன்பிருந்தே நடைமுறையில் உள்ளது, இது புவிசார் குறியீட்டையும் பெற்றுள்ளது. இந்த பாரம்பரிய அரிசியின் சிறப்பு என்னவென்றால், இந்த அரிசியை சேமிக்க அடுப்பில் வேகவைக்க எல்லாம் தேவையில்லை. ஏன் வெந்நீரும் கூட தேவையில்லை. இந்த அரிசியை சாதாரண நீரில் 45-60 நிமிடங்கள் ஊறவைப்பதன் மூலம் தானாகவே சாப்பிட தயாராகிறது. இது சாதாரணமாக நாம் சமைத்து உண்ணும் அரிசி போலவே இருக்கும்.
இந்த பாரம்பரிய நெல் வகை ரசாயன உரங்கள் ஏதும் இல்லாமல் ஆர்கானிக் முறையில் பயிரிடப்படுகிறது, இது சுமார் 150-160 நாட்களில் அறுவடைக்குத் தயாராக இருக்கும். இதன் சந்தை விலை விளைவிக்கப்படும் இடத்தைப் பொறுத்து கிலோவுக்கு ரூ.40 முதல் ரூ.60 வரை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இதன் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால், இந்த அரிசியில் சர்க்கரை கிடையாது மற்றும் இதில் அதிக அளவு கார்போஹைட்ரேட்டுகள், புரத சத்துக்கள் உள்ளது, இது பொதுவான மக்களுக்கு மிகவும் நன்மை தரக்கூடியது.
0
0