பரபரப்பான ஆட்டம்..கடைசி 2 பந்துகளில் சிக்சரை பறக்கவிட்ட ஜடேஜா..!! கொல்கத்தாவையும் கையோடு அழைத்து செல்லும் சென்னை அணி..!!

29 October 2020, 11:27 pm
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னைக்கு எதிரான லீக் போட்டியில் தோல்வியை சந்தித்த கொல்கத்தா அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு கில், ராணா ஜோடி அபார தொடக்கத்தை கொடுத்தது. அணியின் 50 ரன்களை கடந்த போது, 26 ரன்கள் எடுத்திருந்த கில் நடையை கட்டினார். அடுத்து வந்த வீரர்களும் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர். ஆனால், மறுமுனையில் அதிரடியாக ஆடிய ராணா இந்தப் போட்டியிலும் அரைசத்ம் விளாசினார். அவர் 87 ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையில், இறுதியில் தினேஷ் கார்த்திக் (21) அதிரடி காட்ட, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது.

சென்னை அணி தரப்பில் இங்கிடி 2 விக்கெட்டும், சாண்ட்னர், ஜடேஜா, கரன் சர்மா ஆகியோர் ஒரு விக்கட்டையும் கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணிக்கு வாட்சன் (19) ஏமாற்றம் கொடுத்தாலும், கெயிக்வாட், ராயுடு இணை சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தது. ராயுடு (38),கெயிக்வாட் (72) அபாரமாக ஆடினர். இருப்பினும், கடைசி இரு ஓவர்களில் 30 ரன்கள் தேவைப்பட்டது. பெர்கூசன் வீசிய 19வது ஓவரில் ஜடேஜா, சாம் கரன் ஜோடி 20 ரன்களை சேர்த்தது. கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், நாகர்கோடி முதல் 4 பந்துகளில் வெறும் 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். கடைசி இரு பந்துகளில் சென்னை அணியின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்ட போது, அடுத்தடுத்து இரு சிக்சர்களை அடித்து அசத்தினார். இதன்மூலம், சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும், இந்தப் போட்டியில் தோல்வியடைந்த கொல்கத்தா அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.