விடிவதற்குள் பசும் வயலில் இறங்கிய பொக்லைன் இயந்திரங்கள்.. NLC நிர்வாகம் விடாப்பிடி.. அதிர்ச்சி வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
26 July 2023, 11:37 am
Cuddaloire - Updatenews360
Quick Share

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு நிலக்கரி சுரங்கப் பணிகளுக்காக புதிதாக 25,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளும், பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டங்களில் இறங்கினர்.

என்.எல்.சி விரிவாக்கத்துக்குக் கையகப்படுத்திய நிலங்களுக்கு உரிய இழப்பீடு தர வேண்டும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தரப் பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், நிலம் கையகப்படுத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி சுற்று வட்டார பகுதியில், சுரங்க விரிவாக்கத்திற்காக நிலங்களை சமன்படுத்தும் பணியில் என்.எல்.சி. நிர்வாகம் இறங்கியுள்ளது.

சுமார் 35 ஜே.சி.பி மற்றும் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் நிலங்கள் சமன்படுத்தும் பணி இன்று தொடங்கியுள்ளது. வளையமாதேவி சுற்றுவட்டாரப் பகுதியில் பயிர் பிடிக்கக் காத்திருக்கும் நெற்பயிர்கள் உள்ள விளை நிலங்களில் ஜே.சி.பி இயந்திரங்கள் இறங்கியுள்ளது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெற்பயிர்கள் அழிக்கப்படுவதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், ஜேசிபி பணி செய்யும் பகுதிக்குள் நுழையாத வகையில், கடலூர் மாவட்ட காவல் காண்காணிப்பாளர் ராஜாராமன் தலைமையில் முந்நூறுக்கும் மேற்பட்ட போலீசார் காவல் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

பொதுமக்கள் எதிர்ப்பை மீறி போலீசார் குவிக்கப்பட்டு, விளை நிலங்களை சமன் படுத்தும் பணிகளில் என்.எல்.சி நிர்வாகம் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Views: - 297

0

0