‘மொத்தம் ரூ.1250 கோடி’.. ஒரு பிரயோஜனம் இல்ல… மாத்தி யோசிங்க ; திமுக நோட்டீஸ்களுக்கு அண்ணாமலை கொடுத்த பதிலடி

Author: Babu Lakshmanan
21 April 2023, 8:54 am
Annamalai STalin - Updatenews360
Quick Share

தங்கள் மீது அவதூறு பரப்பியதாக திமுக மற்றும் அதன் கட்சி நிர்வாகிகள் அனுப்பிய அவமதிப்பு நோட்டீஸுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 14ம் தேதி அமைச்சர்கள், எம்பிக்கள் உள்ளிட்ட திமுகவின் முக்கிய புள்ளிகளின் சொத்து மதிப்பை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டு தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனிடையே, இந்த சொத்துப்பட்டியல் குறித்து கருத்து தெரிவித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி, அனைத்தும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனக் கூறினார். மேலும், திமுகவின் பல்வேறு தலைவர்கள் இது குறித்து கருத்துக்களை கூறி வந்த நிலையில், திமுக சார்பில் ரூ.500 கோடி இழப்பீடு கேட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

திமுகவின் இந்த நடவடிக்கைக்கு அண்ணாமலையும் பதிலடி கொடுக்கும் விதமாக, 500 கோடியே ஒரு ரூபாய் கேட்டு பதில் நோட்டீஸ் அனுப்பினார். மேலும், மன்னிப்பு கேட்க முடியாது என்றும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால், அதனை சந்திக்க தயார் என்றும் கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.50 கோடி கேட்டும், திமுக எம்பி டிஆர் பாலு ரூ.100 கோடி கேட்டும் அடுத்தடுத்து அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். மேலும், திமுக எம்பி கனிமொழி நோட்டீ அனுப்பப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்து திமுக பிரமுகர்கள் அனுப்பி வரும் நோட்டீஸுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிரடியாக பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது :- திமுகவினரின் சொத்துப் பட்டியல் தொடர்பான கேள்விகளுக்கு திமுக தரப்பில் இருந்து எந்தவித பொருத்தமான பதில்களும் வரவில்லை. அதேவேளையில், ஒரு வருடத்தில் முதல் குடும்பம் 30 ஆயிரம் கோடி வரை சொத்து சேர்த்திருப்பதை மாநில நிதியமைச்சர் ஒப்புக்கொண்ட நிலையிலும், அதுபற்றி யாரும் வாய் திறக்கவில்லை.

ஏனெனில் அவர்கள் எனக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பவே தங்களின் நேரத்தையும், பணத்தையும் செலவிட்டு வருகிறார்கள்.

முன்பு மின்சாரத்துறையால் ரத்து செய்யப்பட்ட ஒப்பந்தத்தை மீண்டும் வழங்க திமுகவின் ஆதரவை அம்பலப்படுத்தியதற்காக BGR எனர்ஜி நிறுவனம் எனக்கு ₹500 கோடிக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பியது. பின்னர், முதலமைச்சர் ஸ்டாலினின் துபாய் பயணம் குறித்த உண்மையை வெளிப்படுத்தியதற்காக திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, 100 கோடி ரூபாய் கேட்டு எனக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

ஏப்ரல் 14ம் தேதி திமுகவினரின் சொத்துப் பட்டியலை வெளியிட்டதற்காக மீண்டும் ஆர்.எஸ்.பாரதி எனக்கு ₹500 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். இதைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் ரூ.50 கோடி கேட்டும், திமுக எம்பி ஆர்எஸ் பாரதி ரூ.100 கோடி கேட்டும் அடுத்தடுத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்த நொடி வரையில் மொத்தம் ரூ.1250 கோடி கேட்டு நோட்டீஸ் வந்துள்ளது.

திமுகவின் தனிப்பட்ட கஜானாவை நிரப்ப வேண்டும் என்ற வெறிக்கு முடிவே இல்லை. இந்த வெற்று அச்சுறுத்தல்கள் மற்றும் அவதூறு அறிவிப்புகள் எதுவும் அவர்களுக்கு உதவப் போவதில்லை. திமுகவுக்கு எதிரான என் குரல் நசுக்கப்பட வேண்டுமானால், இந்த நோட்டீஸ் அனுப்புவதை விட்டு விட்டு, வேறு ஏதாவது சிறந்த வழியை முதலமைச்சர் ஸ்டாலின் தேடலாம், எனக் குறிப்பிட்டுள்ளார்.

சொத்துப்பட்டியலை வெளியிட்ட பிறகு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும், திமுகவுக்கு தொடர்ந்து நேரடி மோதல் ஏற்பட்டு வருவது தமிழக அரசியலில் பரபரப்பு நீடித்து வருகிறது.

Views: - 391

0

0