ஓட்டு கேட்க வராதீங்க…ரவுண்டு கட்டும் பொதுமக்கள்… திக்கு முக்காடும் திமுக அரசு!

Author: Udayachandran RadhaKrishnan
3 April 2024, 9:11 pm
DMK Stalin
Quick Share

ஓட்டு கேட்க வராதீங்க…ரவுண்டு கட்டும் பொதுமக்கள்… திக்கு முக்காடும் திமுக அரசு!

தமிழகத்தில் இதுவரை எந்தத் தேர்தலிலும் காணாத அளவிற்கு சில துணிச்சலான காட்சிகளை பொதுமக்கள் ஆங்காங்கே அரங்கேற்றுவதை பார்க்க முடிகிறது. ஓட்டு கேட்க ஆளும் கட்சி தரப்பில் யார் ஊருக்குள் வந்தாலும் அவர்களை சூழ்ந்து கொண்டு பொதுமக்கள் வாக்குவாதம் செய்வதும், வாக்குறுதியை நிறைவேற்றாத நீங்க எதுக்கு ஓட்டு கேட்டு இங்கே வர்றீங்க?… என்று கிடுக்குப்பிடி கேள்விகளை எழுப்புவதும் சர்வ சாதாரணமாகி விட்டது.

கடந்த ஐந்து நாட்களாக திமுகவுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் இந்த
திடீர் தலைவலி மாநில முழுவதும் உருவாகி இருக்கிறது. ஓரிரு இடங்களில் இதுபோல நடந்தால் தேர்தலின்போது இதெல்லாம் சர்வ சாதாரணம் என்று எடுத்துக்கொண்டு விடலாம். ஆனால் தலைநகர் சென்னை முதல் காரைக்குடி வரை 20க்கும் மேற்பட்ட இடங்களில் இப்படி பொதுமக்கள் திமுக அரசுக்கு எதிராக திடீரென கொந்தளித்ததை பார்க்க முடிந்தது.

மிக அண்மையில், சென்னை நகரில் உள்ள வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை தொகுதிகளில் போட்டியிடும் கலாநிதி வீராசாமி, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன் ஆகிய மூன்று சிட்டிங் எம்பிக்களுக்கும் கடுமையான சோதனை காத்திருந்தது. அதுவும் வாக்கு சேகரிக்க சென்ற தமிழச்சி தங்கபாண்டியனை நிலைகுலையைச் செய்யும் அளவிற்கு பொதுமக்கள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.

தென் சென்னைக்கு உட்பட்ட மயிலாப்பூர் பாரதிதாசன் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்புவாசிகளிடம் அவர் பிரச்சார வாகனத்தில் ஓட்டு கேட்க சென்றபோது இந்த கொந்தளிப்பை காண முடிந்தது.

எங்கள் குடியிருப்பு பலத்த சேதமடைந்து விட்டது. ஒரு வருடமாக முறையிட்டு வருகிறோம். ஆனால் அதை சரி செய்ய யாரும் வரவில்லை. வெள்ளத்தால் நாங்கள் பாதிக்கப்பட்டபோது எங்க தெரு பக்கம் வராம எங்கே போனீங்க?… இப்ப தேர்தல்ன்னா மட்டும் 1500 ஓட்டு இங்க இருக்குன்னு வர்றீங்க. அஞ்சு வருஷமா இந்தபக்கமே எட்டிப் பாக்காத நீங்க இப்ப மட்டும் ஏன் வர்றீங்க. இங்கே இருந்து உடனே போயிடுங்க. நாங்க உயிருடன் இருந்தா வந்து பாருங்க… என்று ஆவேசமாக பொங்கி எழுந்து விட்டனர். இதனால் வேறு வழி இல்லாமல் தமிழச்சி தங்கபாண்டியன், தான் வந்த பிரச்சார வாகனத்தை ரிவர்சிலேயே கிளப்பி அங்கிருந்து சென்று விட்டார்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் ஒரு சில டிவி செய்தி சேனல்களில் மட்டுமே ஒளிபரப்பானது. ஆனால் சோசியல் மீடியாக்களில் இரண்டு நாட்களுக்கும் மேலாக வைரலாகி தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி விட்டது.

இதேபோல வடசென்னை தொகுதியில் கலாநிதி வீராசாமியும், மத்திய சென்னையில் தயாநிதி மாறனும் வாக்கு சேகரிக்க ஜீப்பில் சென்றபோது பொதுமக்களிடம் வசமாக சிக்கிக் கொண்டனர். அவர்களையும் பொதுமக்கள் கேள்வி கணைகளால் துளைத்தெடுத்து விட்டனர்.

திமுக எம்பிக்களுக்கு நேர்ந்த இது போன்ற சோதனையை மூன்று தினங்களுக்கு முன்பு ஈரோட்டில் திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து பிரச்சாரம் செய்ய சென்ற முதலமைச்சர் ஸ்டாலினும் எதிர்கொள்ள நேர்ந்தது.

மார்ச் 31-ம்தேதி காலையில் ஈரோடு சம்பத்நகர் பகுதியில் ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டபோது அருகில் இருந்த உழவர் சந்தையில் இயங்கி வரும் கடைகளில் வியாபாரிகளிடம் காய்கறி விலையை கேட்டறிந்து, அவர்களிடம் வாக்கும் சேகரித்தார்.

அப்போது காய்கறி விற்கும் பெண்மணி ஒருவர், தான் இரண்டு முறை உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தும் தனது விண்ணப்பம் நிராகரிப்பட்டதாகவும், 1000 ரூபாய் தனக்கு கிடைக்கவில்லை என்றும் முறையிட்டார். ஓட்டுரிமை உள்ள எனக்கு மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியில்லை எனச் சொல்வது எந்த விதத்தில் நியாயம்? எனவும் நேரடியாகவே கேள்வி எழுப்பினார்.

இதனால் அதிர்ந்துபோன முதலமைச்சர் ஸ்டாலின் காரணம் இல்லாமல் நிராகரிக்க வாய்ப்பு இல்லை, ஏதாவது ஒரு காரணம் இருக்கும் என்று கூறினார். அப்போது, தான் மாநகராட்சி ஊழியர் ஒருவரின் மனைவி என அந்த பெண் குறிப்பிட்டார். அதற்கு ஸ்டாலின் அப்போ அது தான் காரணம் என தெரிவித்தார். அந்தப் பெண்மணி விடவில்லை. கணவர் அரசு ஊழியர் என்றால் என் வயிறு நிரம்பி விடுமாங்கய்யா என எதிர் கேள்வி எழுப்பி முதலமைச்சரை திடுக்கிட வைத்தார்.

இதேபோல அமைச்சர்கள் பெரியசாமி, அனிதா ராதாகிருஷ்ணன், கயல்விழி, கரூர் எம்பி ஜோதிமணி போன்றோரும் பொதுமக்களின் பிடியில் சிக்க தவறவில்லை. இது தவிர பல தொகுதிகளில் ஓட்டு கேட்க செல்லும் திமுக எம்எல்ஏக்களையும் பொதுமக்கள் முற்றுகையிட்டு கொடுத்த வாக்குறுதி என்ன ஆச்சு? என்றும் அதிரடியாக கேள்வி எழுப்பியும் வருகின்றனர்.

அதிலும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழியின் பாடுதான் மிகவும் பரிதாபம். அவருக்கு எதிராக தாராபுரம் குண்டடம் பகுதியில் ஏப்ரல் 2-ம் தேதி பொதுமக்கள் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்திலும் குதித்தனர். ஈரோடு திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து கயல்விழி, பிரசாரத்தில் ஈடுபட அங்கு வந்தார்.

இந்த நிலையில்தான் திருமூர்த்தி அணையில் இருந்து உப்பாறு அணைக்கு கடந்த ஓராண்டாக தண்ணீர் திறந்து விடப்படாததை கண்டித்து தேர்பாதை, பனமரத்து பாளையம், நஞ்சியம்பாளையம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடுகள், தோட்டங்கள், வணிக நிறுவனங்களில் மக்கள் கருப்புக் கொடி ஏற்றி உள்ளனர்.

இது அமைச்சர் கயல்விழிக்கு தெரியுமா? தெரியாதா? என்பது கேள்விக்குறிதான். ஆனால் தேர்பாதை பகுதிக்கு வந்த போதுதான் சாலையோரம் திரண்டு இருந்த பொதுமக்கள் கைகளில் கருப்பு கொடி ஏந்தி இருப்பதைக் கண்டு அவர் திடுக்கிட்டுப் போனார்.

அப்போது கிராம மக்கள் வராதே, வராதே ஓட்டு கேட்டு ஊருக்குள் வராதே…என்று அமைச்சருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி கருப்பு கொடியை காண்பித்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு நடந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அமைச்சர் கயல்விழி காரில் இருந்து இறங்கி ஓட்டு கேட்காமலேயே அங்கிருந்து வேகமாக சென்று விட்டார். அமைச்சருக்கு பின்னால் பிரசார வாகனத்தில் வந்த வேட்பாளர் பிரகாஷ், பொதுமக்களிடம் ஓரிரு வார்த்தைகள் மட்டும் பேசிவிட்டு, அங்கிருந்து அவசர அவசரமாக பிரசாரத்தை முடித்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

இதேபோல முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் தனது மகன் கார்த்திக்காக காரைக்குடி மித்ரா வயல் பகுதியில் ஏப்ரல் 2-ம் தேதி பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது எங்களது பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையை உடனடியாக இழுத்து மூடவேண்டும். எங்கள் தெருவில் மட்டும் ஒரே வீட்டில் மூவர் டாஸ்மாக்கால் உயிரை இழந்து விட்டனர் என்று பெண்கள் சிதம்பரத்திடம் கண்ணீர் மல்க முறையிட அதற்கு அவர் சரியான பதிலைக் கூற முடியாமல் திணறித்தான் போனார்.

இது மாநில அரசு சம்பந்தப்பட்ட பிரச்சனைதானே என்று அவரால் தப்பிக்கவும் முடியவில்லை. ஏனென்றால் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார். சென்ற முறை போலவே அவரை நீங்கள் வெற்றி பெறச் செய்யவேண்டும் என்று அவர் பிரச்சாரமும் செய்திருந்தார் என்பதுதான் இதற்கு காரணம். இதனால் சிதம்பரம் தனது பிரச்சாரத்தை சுருக்கமாக முடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்ப வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.

அதன் பிறகு சிதம்பரத்திடம் கேள்வி கேட்ட பெண்களை உள்ளூர் திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் சமாதானப்படுத்த முயன்றனர். அப்போதும் அந்தப் பெண்களின் கோபம் தணியவில்லை. இனி ஓட்டு கேட்டு வந்தா கல்லை விட்டுத்தான் எறிவோம். முதல்ல டாஸ்மாக்கை மூடுங்க என்று கொந்தளிக்க அங்கே பதற்றம் தொற்றிக் கொண்டது.
வேறு வழியில்லாமல் திமுக கூட்டணி நிர்வாகிகள் அங்கிருந்து நைசாக நழுவி விட்டனர்.

இதேபோல பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட வி களத்தூர் பகுதியில் இன்று காலை ஓட்டு சேகரிக்க சென்ற திமுக வேட்பாளர் அருண் நேருவிடம் எங்கள் பகுதிக்கு திமுக எம்எல்ஏ அடிப்படை வசதிகள் எதையும் செய்து தரவில்லை. அப்படி இருக்கும்போது நீங்கள் ஏன் அவருடன் ஓட்டு கேட்டு வருகிறீர்கள்? என்று ஏராளமான இளைஞர்கள் சரமாரியாக கேள்விகளை எழுப்பி அதிர்ச்சியில் ஆழ்த்தினர். அமைச்சர் கே என் நேருவின் மகனான அருண் சந்திக்கும் முதல் தேர்தலே இதுதான். இதனால் தன்னுடன் வாக்குவாதம் செய்தவர்களை சமாளிப்பதற்குள் அவருக்கு போதும் போதும் என்றாகி விட்டது.

வழக்கமாக இதுபோன்று ஆளுங்கட்சியினர் ஓட்டுக் கேட்க செல்லும்போது பொதுமக்கள் முற்றுகையிட்டு கேள்விகளை எழுப்பினால் அது எதிர்க்கட்சிகளின் சதி என்று முத்திரை குத்தப்படுவது வழக்கம்.

ஆனால் தமிழகத்தில் கடந்த ஐந்து நாட்களாக பொதுமக்கள் எழுப்பும் கேள்விகள் அனைத்தும் திமுக அளித்த வாக்குறுதிகளை பின்னணியாக கொண்டதாகத்தான் இருக்கிறது. அதுவும் பெண்கள் அதிக அளவில் திரண்டு கேள்விக்கணைகளை வீசுவதால் திமுகவினராலோ, அதன் கூட்டணி கட்சியினராலோ அதை சமாளிக்க முடியவில்லை. திணறுகிறார்கள்.

2021 தமிழக தேர்தலின்போது 520 வாக்குறுதிகளை திமுக தலைவர் ஸ்டாலின் அளித்தார். ஆனால் அதில் ஒரு சில பணப் பயன் வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது.

கேஸ் சிலிண்டர் மானியம் மாதம் 100 ரூபாய், கல்லூரி மாணவ, மாணவிகளின் கல்விக் கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து என்பன போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. தவிர கூட்டுறவு சங்கங்களில் ஐந்து பவுன் நகைகளுக்கு கீழாக அடமானம் வைத்து கடன் வாங்குபவர்கள் அனைவரின் நகைக்கடனையும் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் தள்ளுபடி செய்வோம் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஒவ்வொரு ஊரிலும் மேடைதோறும் பிரச்சாரம் செய்தார்.

அதன்படி 49 லட்சம் பேர் கூட்டுறவு சங்கங்களில் நகைகளை அடமானம் வைத்து கடனும் பெற்றனர். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 13 லட்சம் பேரின் கடன் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டது. எஞ்சிய 36 லட்சம் பேரின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படாததால் அவர்கள் அனைவரும் வட்டியுடன் சேர்த்து அசலையும் செலுத்தி நகைகளை மீட்க வேண்டிய நெருக்கடியான நிலைக்கும் தள்ளப்பட்டனர்.

அதேபோல்தான் 2021 தமிழக தேர்தலுக்கு முன்பாக அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்று கூறிவிட்டு ஆட்சி அமைந்தபிறகு இரண்டு வருடங்களுக்கு பின்பு அந்தத் தொகையை வழங்க முடிவு செய்தபோது தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகை கிடைக்கவில்லை. அந்த ஆவேசமும் தற்போது பெண்களிடம் அதிகமாக வெளிப்படுகிறது.

அதேபோல டாஸ்மாக் மதுபான கடைகளால் கிராமங்களில் பாதிக்கப்படும் பெண்களும் அரசுக்கு எதிரான கோபத்தை காட்டுகின்றனர். படிப்படியாக டாஸ்மாக் கடைகளை குறைப்போம் என்று திமுக அரசு கூறி மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை எத்தனை கடைகளை மூடினார்கள் என்பதே கேள்விக்குறிதான்.

இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகளுக்காக ஆளும் கட்சியினரை பொதுமக்கள் மடக்கி கேள்வி கேட்பது வரவேற்கக் கூடிய விஷயம்தான். ஏனென்றால் மாநிலத்தில் இனி ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை தங்கள் இஷ்டத்துக்கு அள்ளி விட மாட்டார்கள். தவிர, நிறைவேற்றாவிட்டால் மக்கள் தங்களை சுற்றி வளைத்து கேள்வி மேல் கேள்வி கேட்டு அவமானப் படுத்தி விடுவார்கள் என்ற பயமும் அவர்களுக்கு இயல்பாகவே வந்துவிடும் என்பது உறுதி.

Views: - 105

0

0