‘அப்பவே அந்தப் பதவி கொடுத்தாங்க.. எனக்கு விருப்பமில்ல ; இது குஷ்புவுக்கு லேட்’… காயத்ரி ரகுராம் சொன்ன ரகசியம்!!

Author: Babu Lakshmanan
27 February 2023, 8:09 pm
Quick Share

பாஜக பிரமுகர் குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக முன்னாள் பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் கருத்து வெளியிட்டுள்ளார்.

திமுகவில் கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக, நடிகை குஷ்பு கடந்த 2014ஆம் ஆண்டு அக்கட்சியிலிருந்து வெளியேறினார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 2016, 2019 ஆம் ஆண்டு சட்டசபை, நாடாளுமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் செய்திருந்த குஷ்பு, பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை கடுமையாக தாக்கி பேசியிருந்தார். பின்னர் காங்கிரஸ் கட்சியுடனும் ஏதோ மனக்கசப்பு ஏற்பட்டு வெளியேறினார். அவர் திமுகவிலேயே திரும்பவும் இணைவார் என சொல்லப்பட்ட நிலையில் அவர் பாஜகவில் இணைந்தார்.

Kushbu_UpdateNews360

சுமார் 3 ஆண்டுகளாக பாஜகவில் உள்ள குஷ்பு 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பின்னர் அவருக்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டது. தொடர்ந்து தீவிர அரசியலில் கவனம் செலுத்தி வரும் குஷ்பு, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமையை எதிர்த்து தொடர்ந்து போராடிய குஷ்புவுக்கு கிடைத்த அங்கீகாரம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்திருந்தார். இதேபோல, பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு தேர்வு செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக முன்னாள் பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் கருத்து தெரிவித்துள்ளார்.

நான் பாஜகவில் இருந்திருந்தால் பதவி கிடைத்திருக்கும் என்று பலர் கூறி வருகின்றனர். நான் கட்சியில் இருந்தாலும் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று நான் ஓரங்கட்டப்பட்டிருப்பேன். குஷ்பு அவர்கள் 2020 ஆம் ஆண்டு டாக்டர் எல்.முருகன் தலைமைக் காலத்திலேயே இந்த கௌரவப் பதவியைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கட்சியில் 20-30 ஆண்டுகள் பணியாற்றிய பல மூத்த உண்மையான பெண் காரியகர்த்தாக்கள் இருந்தனர். ஆனால் குஷ்பு அவர்கள் புதியவர். அதனால் தான் இந்த தாமதம். நாங்கள் யாரும் பதவிக்காக பாஜகவில் பணியாற்றவில்லை. நான் குறிவைக்கப்பட்டேன், சுதந்திரமாக வேலை செய்ய அனுமதிக்கப்படவில்லை, நான் ஒரு குழுவால் துன்புறுத்தப்பட்டேன், அதனால்தான் நான் வெளியே வந்தேன்.

எனக்கு சென்சார் போர்டு வழங்கப்பட்டாலும், கடந்த ஆண்டு அக்டோபரில் நான் அதை மறுத்தேன். என் பெயர் இருந்தது. எனக்கு ஆர்வம் இல்லை. சினிமா சென்சார் போர்டில் மதிப்புமிக்க நேரத்தை செலவிடக்கூடிய பலரை நான் பரிந்துரைத்தேன். அவர்கள் அதைப் பெறுவார்கள் என்று நம்புகிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 377

0

0