‘உட்காரு டா’-ன்னு அமைச்சர் சொல்லலாமா..? மவுனம் காத்த முதலமைச்சர் ஸ்டாலின்… அதிமுக பரபரப்பு குற்றச்சாட்டு…!!

Author: Babu Lakshmanan
25 April 2022, 2:52 pm
Quick Share

சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப திமுக இரட்டை வேடம் போடுவதாக எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வழிவகை செய்யும் சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் ஆதரவு தெரிவித்தன. அதேவேளையில், இந்த மசோதாவை ஆரம்ப நிலையிலேயே அதிமுக, பாஜக எதிர்த்தன.

இதனிடையே சட்டப்பேரவையில் எம்எல்ஏ கோவிந்தசாமியை தரக்குறைவாக பேசிய அமைச்சர் பெரியகருப்பனின் பேச்சைக் கண்டித்து பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். முன்னதாக, அமைச்சரே எழுந்து மரியாதைக்குறைவான வார்த்தைகளை பேசினால் அது அவை மரபுக்கு உரியது தானா..? என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப திமுக இரட்டை வேடம் போடுகிறது. பல்வேறு கட்டங்களில் பேசப்பட்ட சட்ட மசோதாக்கள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநருக்கென தனி அதிகாரம் உள்ளதால், அதற்குட்பட்டுதான் அவரால் செயல்பட முடியும்.

மேலும், அதிமுக உறுப்பினரை கடுமையாக பேசிய அமைச்சரை, முதலமைச்சர் கண்டிக்காததால் வெளிநடப்பு செய்தோம், எனக் கூறினார்.

Views: - 785

0

0