எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு பிளாஸ்மா சிகிச்சை…! மருத்துவமனைக்கு நேரில் சென்ற விஜயபாஸ்கர்

15 August 2020, 9:50 pm
Quick Share

சென்னை: எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நலன் குறித்து மருத்துவமனைக்கே நேரில் சென்று சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விசாரித்தார்.

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளார். சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

அவரது உடல்நிலை மோசமடைய மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். எஸ்பிபியின் உடல்நலம் குறித்து நாள்தோறும் மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு வருகிறது.

அவர் குணம்பெற்று மீண்டு வர ஏராளமானோர் கடவுளை வேண்டி வருகின்றனர். தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாகவும், பயப்பட வேண்டாம் என்றும் மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் எஸ்.பி.பி உடல் நலம் குறித்து விசாரிக்க சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவமனைக்கு நேரில் சென்றார். பின்னர்  மருத்துவர்களிடம் சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனாவுக்கு சிகிச்சையில் உள்ள எஸ்.பி.பி. நலம் பெற வேண்டும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார் என்றார்.

இது குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகிகள் கூறியதாவது: எஸ்.பி.பி.க்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படுகிறது. உடல்நிலை சீராக உள்ளது. அவ்வப்போது நினைவு வருகிறது. 48 மணி நேரமாக செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.