மக்களவையில் அத்துமீறி நுழைந்த விவகாரம்… உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகனும்.. திருமாவளவன் வலியுறுத்தல்

Author: Babu Lakshmanan
14 December 2023, 8:35 am
Quick Share

நாடாளுமன்றத்திற்குள் இளைஞர்கள் அத்துமீறி நுழைந்த விவகாரத்திற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தின் 22ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டு வந்த நிலையில், இரு இளைஞர்கள் மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறைபாடே இதற்கு காரணம் என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும், இதற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது :- மக்களவையில் நண்பகல் ஒரு மணியளவில் பார்வையாளர் மாடத்திலிருந்து அவைக்குள்ளே 10-12 அடி உயரத்திலிருந்து தாவி குதித்த இளைஞர்கள், ‘தானா சாஹி நைச் சலேகா’ என்று ஆவேசமாகக் கூச்சலிட்டனர். ‘சர்வாதிகாரத்தை ஏற்க இயலாது’ என்பதே அவர்களின் முழக்கம்.

அவர்கள் வீசியடித்தது கண்ணீர்ப்புகை அல்ல; ஏதோவெரு நெடி மிகுந்த வேதிப்பொருளின் புகை. அதனைப் பரவச் செய்யும் குப்பியைத் தமது காலணி (ஷூ) களில் மறைத்துக் கொண்டு வந்து அவையில் வீசியுள்ளனர். உடனே மஞ்சள் வண்ணப்புகை அவையெங்கும் பரவ, அங்கிருந்த உறுப்பினர்கள் அது நச்சுப்புகையோவென அஞ்சி பதறியடித்துக் கொண்டு வெளியேறினர்.

நாட்டையாளும் உயர்மன்றத்தில் உள்ளவர்களின் பாதுகாப்பே கேள்விக்குறியாகி உள்ளது. இதற்கு உள்துறை அமைச்சர் #அமித்_ஷா அவர்கள் பொறுப்பேற்று பதவி விலகுவதே அறஞ்சார்ந்த நேர்மைத் திறமாகும்.
மக்களவைக்குள்ளே வரும் அனுமதிக்காக அந்தப் பார்வையாளருக்குப் பரிந்துரைத்த பாஜக உறுப்பினரை உடனே பதவிநீக்கம் செய்ய வேண்டும்.

பாதுகாப்புச் சோதனக்குப் பொறுப்பான அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Views: - 197

0

0