வெடித்த ‘நீட்’ சர்ச்சை : திமுக தெரிந்தே பொய் சொன்னதா?…

Author: Udayachandran RadhaKrishnan
15 August 2023, 9:21 am
Trichy Siva- Updatenews360
Quick Share

நீட் தேர்வு பற்றிய விவாதம் எழும் போதெல்லாம் திமுகவினர் ஆவேசமாக பேசுவது, வழக்கமான ஒன்றாகிவிட்டது. அதேபோல்தான மாநிலங்களவை திமுக எம்பி திருச்சி சிவாவும் அண்மையில் ஒரு கருத்தை தெரிவித்திருக்கிறார்.

அது 2021 திமுக தேர்தலின்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று டாக்டர் கனவுடன் ஆண்டுதோறும் அரசு பள்ளிகளில் படிக்கும் 4 லட்சம் பிளஸ் டூ அறிவியல் பாடப் பிரிவு மாணவர்களுக்கு அளித்த வாக்குறுதியை மடை மாற்றம் செய்வதுபோல அமைந்தும் உள்ளது.

கொளுத்தி போட்ட திருச்சி சிவா

சென்னையில் செய்தியாளர்களிடம் மிக அண்மையில் திருச்சி சிவா எம்பி பேசும்போது, “எதிர்க்கட்சிகள்தான் நாடாளுமன்றத்தை முடக்குவதாக ஆளும் கட்சி கூறுகிறது. திமுக தலைவரின் முயற்சியால் எல்லா கட்சிகளும் ஒன்று திரண்டுள்ளன. தமிழ்நாட்டில் இருக்கும் எங்களுக்கு ஏன் வலி. காலில் அடிபட்டால் கண்ணீர் கசிவது போல, மணிப்பூர் மக்களுக்காக இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்கட்சிகளும் குரல் கொடுத்தன. 

நாடாளுமன்றத்தில் பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர்
ஒரு மாநில கட்சியான திமுகவை விமர்சிக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு அச்சம் திமுகவை பார்த்துதான்.

அம்மையார் நிர்மலா சீதாராமன், 1991ம் ஆண்டுதான் லண்டனில் இருந்து இந்தியாவிற்கு வருகை தந்தார். ஆனால் 1989 ம் ஆண்டு சட்டமன்றத்தில் நடந்ததை நேரில் பார்த்தது போல் பேசியுள்ளார். அமைச்சர் நிர்மலா சீதாராமன் அன்றைய தினம் இந்தியாவிலேயே இல்லாதபோது அதை நேரில் கண்டது போல் பேசி இருப்பது விசித்திரமான ஒன்று.

நீட் தேர்வில் இருந்து விலக்கு

ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வரை, எடப்பாடி பழனிசாமி என்பவரை யாருக்குமே தெரியாது, 1989ல் சட்டப்பேரவையில் என்ன நடந்தது? என்பதை அப்போது ஜெயலலிதா உடன் இருந்த திருநாவுக்கரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோரிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.

நீட் விவகாரத்தில் ஆளுநர் இன்றைக்கு நேற்று மட்டுமல்ல எப்போதும். முன்னுக்கு பின் முரணாக பேசிவருகிறார். இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிச்சயம் விலக்கு அளிக்கப்படும். யார் ஆட்சிக்கு வரவேண்டும் எனபதை விட யார் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதுதான் முக்கியம். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அரசை மக்கள் தூக்கி எறிவார்கள்” என்று காட்டமாக குறிப்பிட்டார்.

இதில் நீட் தேர்வு மற்றும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 1989ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தாக்கப்பட்ட நிகழ்வு பற்றி திருச்சி சிவா எம்பி தெரிவித்த கருத்துகள்தான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக மாறிவிட்டது.

திமுக அள்ளி வீசிய வாக்குறுதி

ஏனென்றால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற வாக்குறுதியை 2019 நாடாளுமன்றத் தேர்தலிலேயே திமுக தலைவர் ஸ்டாலின் அளித்திருந்தார். அந்த ஆண்டு மார்ச் மாதம் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “நீட் தேர்வு ரத்து செய்யப்படும், கல்வி மாநில பட்டியலுக்கு கொண்டுவரப்படும், மாணவர்களின் கல்விக்கடன்கள் முழுவதுமாக தள்ளுபடி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று வாக்குறுதிகளை அளித்திருந்தார்.

அப்போது எல்லா எதிர்க்கட்சிகளையும் முந்திக்கொண்டு ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக திமுக அறிவித்தது. அதனால் மத்தியில் காங்கிரஸ் தலைமையில் அமையும் கூட்டணி அமைச்சரவையில் தங்களுக்கும் அதிகாரமிக்க அமைச்சர் பதவிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர் இப்படி கூறியிருக்க வாய்ப்பு உண்டு.

ஆனால் கல்லூரி மாணவர்களின் கல்விக்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு சாத்தியமே இல்லை. ஏனென்றால் தமிழகத்தில் மட்டும் 17 ஆயிரம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்ய வேண்டிய நெருக்கடி மத்திய அரசுக்கு ஏற்படும். இது நாடு முழுமைக்கும் என்றால் இரண்டு லட்சம் கோடி ரூபாய்களை தாண்டி விடும். புதிய அரசு இந்த தொகைக்கு எங்கே போகும்? என்று அப்போது விமர்சனங்களும் எழுந்தன. தவிர 2019 தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறவில்லை என்பதால் இது பற்றிய பேச்சு அதன் பிறகு எழவே இல்லை.

ஆனாலும் 2021 சட்டப்பேரவை தேர்தலில், திமுக மீண்டும் இதே வாக்குறுதிகளை அளித்தது. 160-வது வாக்குறுதியாக திமுக ஆட்சி அமைந்த உடன் முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே நீட் தேர்வை ரத்து செய்யும் சட்டத்தை நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.

இதேபோல கல்லூரி மாணவர்களின் கல்விக்கடனும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தது.

நீட் : குழு அமைப்பு

2021 மே மாதம் திமுக ஆட்சி அமைந்ததும் ஓய்வு பெற்ற நீதிபதி ஏகே ராஜன் தலைமையில் ஒரு குழுவை அமைத்து நீட் தேர்வின் தாக்கங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டது. இந்தக் குழு ஆய்வு நடத்தி நீட் தேர்வு மாணவர்களை பாதிக்கிறது என்ற அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது.

இதன் அடிப்படையில் நீட் தேர்வு விலக்கு மசோதா 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ம்தேதி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதற்கு முதல் நாளே, அதாவது செப்டம்பர் மாதம் 12ம் தேதியே நீட் தேர்வு நடந்து முடிந்துவிட்டது.

இந்த சட்ட மசோதாவை முதலில் ஆளுநருக்கும், பின்னர் குடியரசுத் தலைவருக்கும் அனுப்பியும் பலன் இல்லாமல் போனது. இதற்கிடையே 2022, 2023 ம் ஆண்டுகளிலும் தமிழகத்தில் நீட் தேர்வு நடந்து முடிந்தும் விட்டது.

திமுகவின் ஏமாற்று வேலையா?

இந்த நிலையில்தான் திமுக எம்பி திருச்சி சிவா, தங்களிடம் நீட் தேர்தல் வாக்குறுதி என்னவாயிற்று, எங்களை இன்னும் எத்தனை காலத்திற்கு இதையே சொல்லி ஏமாற்றுவீர்கள் என்று மாணவர்கள் தரப்பில் கேள்வி எழுந்து விடக்கூடாது என்பதற்காக 2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமையும்போது நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு நிச்சயம் விலக்கு கிடைக்கும் என்று அவர் கூறியிருப்பதாகவே தெரிகிறது.

அப்படியென்றால் மத்தியில் பாஜக அரசு இருக்கும் வரை தமிழகத்தில் மட்டுமல்ல, எந்த மாநிலத்திலும் நீட் தேர்விற்கு விலக்கு பெற முடியாது என்பது தெரிந்தேதான் இந்த வாக்குறுதியை திமுக கொடுத்ததா? என்ற கேள்வியை கடந்த மூன்று ஆண்டுகளில் நடந்து முடிந்த நீட் தேர்வை எழுதிய அரசு பள்ளிகளில் அறிவியல் படிப்பை முடித்த சுமார் 12 லட்சம் மாணவர்களும், அவர்களது பெற்றோரும் கோபம் கொப்பளிக்க இப்போது எழுப்புகின்றனர். அதேபோல் கல்லூரி மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்வோம் என்று கூறியதும் திமுகவின் ஏமாற்று வேலைதானா? என்ற கடுமையான விமர்சனமும் வைக்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தை முடக்கி இருக்கலாமே?

மேலும் நீட் தேர்வை ரத்து செய்வதற்காக எதிர்க்கட்சிகளின் ஆதரவைத் திரட்டி நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் திமுக முடக்கி இருக்க வேண்டாமா? அதை எப்போதாவது செய்து இருக்கிறதா?

மணிப்பூர் பிரச்சனைக்காக எதிர்க்கட்சிகளை திமுகதான் ஒன்று திரட்டியது என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் திருச்சி சிவா எம்பி நீட் தேர்வுக்கு பயந்து தமிழகத்தில் கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் 26 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனரே, இந்த துயர நிகழ்வுகளை எடுத்துக் கூறும் விதமாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை திமுக முடக்கி இருக்கலாமே? ஆனால் திமுக அதை செய்யத் தவறி விட்டதே?… என்ற கேள்விகளும் எழுப்பப்படுகின்றன.

இது ஒருபுறம் இருக்க, “தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா தாக்கப்பட்டதை நேரில் பார்த்தது போன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசி இருப்பதாக திருச்சி சிவா கேலி செய்திருப்பது வேடிக்கையான ஒன்றாக உள்ளது” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

கிண்டலாக பேசினாரா திருச்சி சிவா?

“இலங்கையில் 2009 மே மாதம் 18ம் தேதி விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும், அந்நாட்டின் ராணுவத்திற்கும் இடையே நடந்த உச்சகட்ட போரில் ஒரே நாளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

இந்தக் கொடூரம் குறித்து திமுகவும், காங்கிரசும் தவிர தமிழகத்தில் உள்ள அத்தனை கட்சிகளுமே மனவேதனையுடன் இன்று வரை பேசி வருகின்றன. அது உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் இலங்கை ராணுவம் அந்நாட்டில் கொன்று குவிக்கப்பட்ட தமிழர்கள் தொடர்பான வீடியோ காட்சிகள் எதுவும் இதுவரை முழுமையாக வெளியாகவில்லை.
அப்படியெனில், இலங்கையில் நடந்த உச்சகட்ட போரை நேரிலோ, வீடியோ காட்சியாகவோ தமிழகத்தில் யாரும் பார்க்காத நிலையில் எப்படி உணர்ச்சிகரமாக இதுபற்றி பேசுகிறீர்கள் என்று மதிமுக, விசிக, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகளை பார்த்து திருச்சி சிவா கிண்டலாக கேட்பது போலத்தான் இதுவும் இருக்கிறது.

அரசியல்வாதிகள் எப்போதுமே தாங்கள் படித்த, தொலைக்காட்சிகளில் பார்த்த கொடூர, துயர சம்பவங்கள் பற்றி குறிப்பிடும்போது அதை உணர்வுப் பூர்வமாக பேசுவது வழக்கம். அது போல்தான் தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதாவுக்கு நடந்த கொடுமைகளை பற்றி, தான் படித்த செய்திகளை நிர்மலா சீதாராமன் பேசியிருக்கிறார். இதேபோல டி ஆர் பாலு, திருச்சி சிவா, கனிமொழி,
ஆ ராசா ஆகியோரும் பலமுறை நாடாளுமன்றத்தில் பேசியது உண்டு.

இந்த விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் திருச்சி சிவா நக்கலடித்து உள்ளார்.

1989-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக ஜெ அணி சார்பில் போட்டியிட்டு எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்றவர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமியும் அன்று சபையில் இருந்துள்ளார். அதனால்தான் அவர் தன் கண்முன்னே, தனது கட்சியின் தலைவருக்கு இழைக்ப்பட்ட கொடுமைகளை கூறியிருக்கிறார்.

இபிஎஸ்சை வம்புக்கு இழுத்த சிவா

ஆனால் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வரை, எடப்பாடி பழனிசாமி என்பவரை யாருக்குமே தெரியாது திருச்சி சிவா கூறுகிறார்.

ஒரு விதத்தில் இது பொறாமையின் காரணமாக கூறப்பட்ட ஒன்று போலவே உள்ளது. ஏனென்றால் 1989ம் ஆண்டில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின் முதல் முறையாக வெற்றி பெற்றார். அதேபோல எடப்பாடி பழனிசாமியும் முதல் முறையாக அப்போதுதான் சட்டப்பேரவைக்கு ஜெ அணி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஸ்டாலின் ஒரு பிரதான கட்சி தலைவரின் மகனாக இருந்தும் கூட அவருக்கு முன்பாக ஒரு எளிய, விவசாய குடும்பத்தை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக ஆகிவிட்டாரே என்ற பொறாமைத் தீ திருச்சி சிவா எம்பியின் மனதில் கடந்த 7 ஆண்டுகளாக கனன்று கொண்டிருக்கவேண்டும்.

அதனால் கூட எடப்பாடி பழனிசாமியை அப்போலோவில் அனுமதிக்கும் வரை யாருக்கும் தெரியாது என்று அவர் கூறியிருக்கலாம்.

அதேநேரம் எடப்பாடி பழனிசாமியாவது 1989ம் ஆண்டு எம்எல்ஏவாக இருந்திருக்கிறார். ஆனால் அப்போது திருச்சி சிவா திமுக இளைஞரணியில் சாதாரண பேச்சாளராகத்தானே, இருந்தார்?… அது அவருக்கு மறந்து போய்விட்டதா என்ன? இதை ஒப்பீடு செய்து பார்த்தால் எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்கும் தகுதி அவருக்கு இருக்கிறதா? என்ற கேள்வியும் எழும்.

அந்த 2 பேர் பதில் சொல்வார்களா?

மேலும் அன்று ஜெயலலிதா அருகில் இருந்த திருநாவுக்கரசரையும், சாத்தூர் ராமச்சந்திரனையும் கேட்டுப்பாருங்கள் தெரியும் என்றும் திருச்சி சிவா கூறுகிறார்.
சாத்தூர் ராமச்சந்திரன் இப்போது திமுகவில் அமைச்சராக இருக்கிறார். அதேபோல திருநாவுக்கரசர் காங்கிரஸ் கட்சியில் எம்பியாக உள்ளார்.

இருவருமே ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்தான் அதிமுகவிலிருந்து வெளியேறினர். அந்தநேரத்தில் கூட அவர்கள் இருவரும் சட்டப்பேரவையில் ஜெயலலிதாவுக்கு நிகழ்த்தப்பட்ட கொடூரம் குறித்து எதுவும் சொல்லவில்லை என்பதை இங்கே குறிப்பிடவேண்டும். ஆனால் இப்போது தாங்கள் இருக்கும் கட்சிகள் போல வேறு எதுவுமே இல்லை, இதுதான் உலகின் சொர்க்க பூமி என்று மகிழ்ச்சியுடன் பதவி சுகங்களை அனுபவித்து வரும் நிலையில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அவர்கள் இருவரும் எப்படி கருத்து சொல்வார்கள் என்று எதிர்பார்க்க முடியும்?” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கேட்கின்றனர். இதுவும் யோசிக்க வேண்டிய ஒன்றுதான்!

Views: - 281

0

0