இனி ஆவினையும், அரசையும் நம்பி பலனில்லை : அமுல் நிறுவனத்துக்கு சிவப்பு கம்பளம்.. பால் முகவர்கள் சங்கம் அறிவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
9 May 2024, 9:15 am
aavin
Quick Share

இனி ஆவினையும், அரசையும் நம்பி பலனில்லை : அமுல் நிறுவனத்துக்கு சிவப்பு கம்பளம்.. பால் முகவர்கள் சங்கம் அறிவிப்பு!

தமிழகத்தில் ஆவின் நிறுவனத்திற்கு போட்டியாக, பால் விற்பனையை துவங்குவதற்கு, குஜராத் மாநிலத்தின் பால் கூட்டுறவு நிறுவனமான அமுல் திட்டமிட்டு உள்ளது.

இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், ஆவின் பால் விற்பனை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தி நமது நாளிதழில் நேற்று வெளியானது.

இதையடுத்து, ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பால் மற்றும் பால் பொருட்களை, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உரிய தரத்தில் தயாரித்து, குறைவான விலையில் ஆவின் விற்பனை செய்து வருகிறது.

மேலும் படிக்க: சவுக்கு சங்கருக்கு கிடைத்த முதல் வெற்றி.. இனி அடுத்தக்கட்ட நடவடிக்கை இதுதான் : வழக்கறிஞர் உற்சாகம்!!

இந்நிலையில், சில நிறுவனங்கள் தமிழகத்தில் பால் விற்பனையை தொடங்குவதாக செய்திகள் வெளியிடப்பட்டு உள்ளன.

மற்ற நிறுவனங்களை காட்டிலும், ஆவின் வாயிலாக பொதுமக்களுக்கு மிக குறைந்த விலையில், உயரிய தரத்தில் பால் வினியோகம் செய்யப்படுகிறது.

எனவே, தமிழகத்தில் ஆவின் பால் விற்பனைக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது. பொதுமக்களின் பால் தேவை அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ப ஆவின் நிறுவனம் தன் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, சென்னை மாதவரம், தர்மபுரி, துாத்துக்குடி, கரூர் மாவட்டங்களில், புதிய பால் பண்ணைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. எனவே, அதிகரித்து வரும் பால் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், எளிய முறையில், புதிதாக பால் மொத்த விற்பனையாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப பால் வினியோகம் எளிதாகவும், துரிதமாகவும் செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் அமுல் நிறுவனத்தின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் ஸடாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ பொன்னுசாமி விடுத்துள்ள அறிக்கையில், “கூட்டுறவு பால் நிறுவனங்களுக்கெல்லாம் முன்னோடி நிறுவனமாக திகழ்ந்து இந்தியாவில் தொடர்ந்து முதலிடம் பிடித்து செயல்பட்டுவரும் அமுல் நிறுவனம், அதன் பால் மற்றும் பால் பொருட்களை தமிழகத்தில் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சந்தைப்படுத்த ஏதுவாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில் பால் பண்ணை அமைத்து வருவதாக ஒருசில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி தவறானதாகும்.

அமுல் நிறுவனத்தைப் பொறுத்தவரை பால் பவுடர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு வகையான பால் உபபொருட்களை அண்டை மாநிலங்களில் உற்பத்தி செய்து ஏற்கனவே தமிழ்நாட்டில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக சந்தைப்படுத்தி வரும் சூழலில் அவற்றோடு தற்போது கூடுதலாக 140 கிராம் மற்றும் 450 கிராம் அளவுள்ள தயிர் பாக்கெட்டுகளை ஆந்திராவின் சித்தூர் மாவட்டம், பலமனேரி எனுமிடத்தில் உள்ள பண்ணையிலிருந்து உற்பத்தி செய்து ஆந்திரா, தமிழ்நாடு எல்லையோர மாவட்டங்களில் சந்தைப்படுத்தி வருகிறது.

ஊடகங்களில் வெளியாகியுள்ளதுபோல் தமிழ்நாட்டில் பால் பண்ணை அமைத்து, பால் வணிகத்தில் ஈடுபடும் எண்ணம் அமுல் நிறுவனத்திற்கு இருக்குமானால் அதனை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் வரவேற்க தயாராக இருக்கிறது.

ஏனெனில் தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் தமிழ்நாட்டில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் முகவர்களை காக்கும் கவசமாக இருக்கும் என்கிற நம்பிக்கையில் கடந்த காலங்களில் அமுல், நந்தினி உட்பட மற்ற மாநில கூட்டுறவு பால் நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்குள் பால் கொள்முதல் மற்றும் பால் விற்பனை சந்தைக்கான கட்டமைப்புகளை உருவாக்குவதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடுமையாக எதிர்த்து ஆவின் நிறுவனத்திற்கு அரணாக நின்று செயல்பட்டது.

அதனடிப்படையிலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமுல் நிறுவனத்தின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியதை எவரும் மறந்திருக்க மாட்டார்கள்.

ஆனால், ஆவின் மற்றும் பால்வளத்துறையில் பணியாற்றும் அதிகாரிகளாகட்டும், பால்வளத்துறை அமைச்சர்களாக வருபவர்களாக இருக்கட்டும் ஆவினை சுரண்டுவதிலேயே குறியாக இருப்பதோடு, அதனை தடுக்கத் தவறி, பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் முகவர்களின் உழைப்பை வீணடிக்கும் செயலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை போய் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு செயல்பட்டு பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் முகவர்களின் வாழ்வாதாரம் குறித்து சிறிதும் அக்கறை கொள்ளாமல் வெற்று விளம்பரங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து வருவதால் இனியும் ஆவினையும், தமிழ்நாடு அரசையும் நம்பி பலனில்லை என்கிற முடிவிற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வந்திருக்கிறது.

எனவே தமிழ்நாடு முழுவதும் சேவை சார்ந்த தொழிலான பால் விநியோகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர்களுக்கு தனியார் பால் நிறுவனங்களுக்கு இணையான வருமானத்தையும், பொதுமக்களுக்கு தரமான பால் மற்றும் பால் பொருட்களின் தங்குதடையற்ற விநியோகத்தையும் அளிப்பதோடு, பால் உற்பத்தியாளர்கள் வழங்கும் பாலுக்கு நியாயமான கொள்முதல் விலையும், அதற்கான தொகையை நிலுவையின்றியும் வழங்கிட முன் வர அமுல், நந்தினி உள்ளிட்ட எந்த ஒரு கூட்டுறவு பால் நிறுவனங்கள் தயாராக இருந்தாலும் அவற்றுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்க தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் தயாராக இருக்கிறோம் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஆவின் நிறுவனத்திற்கு போட்டியாக அமுல் நிறுவனம் பால் விற்பனை தொடங்க உள்ளதாக வெளியான தகவலுக்கு பால்வளத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அமுல் நிறுவனம் தற்போது வரை பால் பண்ணையை அமைக்கவில்லை என்றும் அமுல் நிறுவனம் பால் விற்பனையை தற்போது வரை தமிழகத்தில் தொடங்கவில்லை என்றும் பால்வளத்துறை கூறியுள்ளது.

Views: - 194

0

0