அதிமுக உட்கட்சி விவகாரம்… முக்கிய முடிவை எடுக்கும் பிரதமர் மோடி.. குஷியில் தமிழக பாஜக..!!

Author: Babu Lakshmanan
29 July 2022, 11:10 am
Quick Share

அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதிமுக உட்கட்சி விவகாரங்களை பிரதமர் மோடியிடும் தமிழக பாஜக நிர்வாகிகள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக ஓபிஎஸ்-இபிஎஸ் என இரு அணிகளாக பிளவுபட்டது. நிலையான தலைமை இல்லாததால், நாடாளுமன்றம், சட்டப்பேரவை மற்றும் இடைத்தேர்தல்களில் அதிமுகவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அதிமுகவில் நிலவி வரும் குழப்பத்தால்தான் தேர்தல்களில் தோல்வி அடைந்ததாக அதன் கூட்டணி கட்சிகளாக பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் நம்புகின்றன.

சட்டப்பேரவை தேர்தலின் போதே அதிமுக கூட்டணியில் அமமுகவை சேர்க்க வேண்டும் என பாஜக விரும்பியது. அப்போது தான், மீண்டும் ஆட்சியை தக்க வைக்கமுடியும் என கூறியது. ஆனால் இதனை ஏற்க எடப்பாடி பழனிசாமி தரப்பு மறுத்துவிட்டது.

இதனையடுத்து, அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தை கையில் எடுத்த எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராகவும் தேர்வானார். அதே வேளையில் அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டார். இதன் காரணமாக அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளது. ஓபிஎஸ்- இபிஎஸ் என இருவரும் மாறி மாறி அதிமுக நிர்வாகிகளை நீக்கி வருகின்றனர்.

இதனிடையே, அதிமுக மீண்டும் இரண்டாக பிளவுபட்டதை பாஜக விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் கட்சியான பாஜக, தனது கூட்டணி கட்சியான அதிமுக வலுவாக இருந்தால்தான், திமுகவை வீழ்த்த முடியும் என்று நம்புகிறது. எனவே, ஓபிஎஸ் – இபிஎஸ் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறது. ஓபிஎஸ்-ம் மீண்டும் இபிஎஸ் உடன் சேரத்தான் நினைக்கிறார் என்றும், இதற்காக அவர் பாஜகவின் தயவை நாடுவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்தநிலையில் குடியரசு தலைவர் பதவியேற்பு விழாவிற்காக டெல்லி சென்ற இபிஎஸ், மோடி மற்றும் அமித்ஷாவை சந்திக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் இதற்க்கு நேரம் ஒதுக்காத காரணத்தால் குடியரசு தலைவர் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ளாமல் எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்பிவிட்டார். இதனையடுத்து, செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது ஓபிஎஸ்-இபிஎஸ் என இரு தரப்பையும் மோடி சந்தித்து பேசுவார் என கூறப்பட்டது.ஆனால் அதிமுக மோடி இருதரப்பையும் தனியாக சந்திக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

நேற்று சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி வரவேற்றுள்ளார். அப்போது, மரியாதை ரீதியாக மட்டும் சந்தித்தாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி இரவு ஆளுநர் மாளிகையில் தங்கினார். அவரை தனியாக சந்தித்த தமிழக பாஜக நிர்வாகிகளிடம் தனியாக சந்தித்து தமிழக அரசியல் நிலவரங்கள் தொடர்பாக கேட்டுள்ளார்.

இதற்கு பாஜக நிர்வாகிகள் ஓபிஎஸ் – இபிஎஸ் பிரிவின் காரணமாக தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கான ஓட்டு பிரியும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, 2024ல் நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குளை இழக்க வாய்ப்பு இருப்பதாகவும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

அதே வேளையில், அதிமுக பிளவுபட்டதால் தமிழகத்தில் எதிர்கட்சியாக பாஜக வளர்வதற்கு நல்ல வாய்ப்பு என்றும் தமிழக பாஜக நிர்வாகிகள் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எனவே, அதிமுகவை ஒன்றிணைத்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கலாமா..? பாஜகவின் வளர்ச்சிக்காக இப்படியே விட்டுவிடலாமா..? என்பதை காலம் தான் பதில் சொல்லும்.

Views: - 446

0

0