‘நீ கொடுக்கும் உழைப்பு என்னை உருக்குகிறது..’ அடுத்த 5 நாட்கள் ரொம்ப முக்கியம் ; தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்!!

Author: Babu Lakshmanan
13 April 2024, 1:11 pm
Ramadoss - Updatenews360
Quick Share

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பாமக தொண்டர்களுக்கு அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதி உள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், “என் உயிரினும் மேலான பாட்டாளி இளஞ்சிங்கங்களே! கொண்ட இலக்கை வென்று முடிக்கும் வரை ஓயாத உயிரினம் ஒன்று இந்த உலகில் உண்டென்றால், அதற்கு பாட்டாளி இளஞ்சிங்கங்கள் என்று தான் பெயர். மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக நீ உழைக்கும் உழைப்பைப் பார்க்கும் போது என் மனதில் இப்படித் தான் தோன்றியது.

மேலும் படிக்க: பொய்யும், பித்தலாட்டமும் தான் பாஜக… அராஜகத்தின் உச்சத்திற்கு முடிவு வந்திடுச்சு : செல்வப்பெருந்தகை!!

தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்ட நாளிலேயே உனது உழைப்பு தொடங்கி விட்டது. வேட்பாளர்கள் பட்டியல் எப்போது அறிவிக்கப்படும் என்று காத்திருந்து உடனடியாக சுவர் விளம்பரங்களை எழுதினாய். மக்களவைத் தேர்தல்களின் போது பரந்து விரிந்து கிடக்கும் தொகுதி முழுவதும் வேட்பாளர்கள் பயனித்து வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்பது சாத்திமில்லை என்பதை உணர்ந்து வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறாய். ஒவ்வொரு தொகுதியின் வேட்பாளர், அவரைப் பற்றிய விவரங்கள், எதற்காக அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் ஆகியவற்றைப் பற்றி சமூக ஊடகங்களில் எழுதி மக்களிடம் கொண்டு செல்கிறாய், இப்படியாக நீ செய்யும் பணிகளை பட்டியலிட வேண்டும் என்று நினைத்தால் பக்கங்கள் போதவில்லை.

பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகளிலும் அதன் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும், மீதமுள்ள 30 தொகுதிகளிலும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை மக்களவை உறுப்பினர்களாக மாற்ற வேண்டும் என்பதற்காக நீ கொடுக்கும் உழைப்பு என்னை உருக்குகிறது. அய்யோ, நமது வீட்டுப் பிள்ளைகள் இப்படி உழைக்கிறார்களே, அவர்களை கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளச் சொல்லலாமா? என்று என மனம் என்னை கேட்டுக் கொண்டே இருக்கிறது.

ஆனால், இது தேர்தல் பணியாயிற்றே, கொஞ்சம் ஓய்வெடுத்தால் நாம் பின்தங்கி விட வேண்டி இருக்குமே? என்ற எண்ணமும், நாமே கூறினால் கூட நமது சிங்கக் குட்டிகள் வெற்றிக் கோட்டைத் தொடும் வரை ஓய்வெடுக்க மாட்டார்களே என்ற உண்மையும் அப்படி சொல்லவிடாமல் தடுக்கின்றன.

மேலும் படிக்க: திமுகவும், அதிமுகவும் வேறு வேறு இல்ல… தேனியில் அண்ணாமலை வாக்குசேகரிப்பு..!!!

தமிழ்நாட்டில் வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டும் தான் இருக்கின்றன. தேர்தல் ஓட்டத்தில் நாம் தான் முன்னணியில் இருக்கிறோம். அதை நாம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், இனிவரும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும் மிகவும் முக்கியம் ஆகும். அதை மனதில் கொண்டு அடுத்து வரும் 5 நாட்களும் மிகக்கடுமையாக உழைக்க வேண்டும். வெற்றிக்கனியைப் பறித்து என்னிடம் ஒப்படைக்க வேண்டும். அதுவரை உங்கள் ஓட்டத்தைத் தொடருங்கள் பாட்டாளி இளஞ்சிங்கங்களே” என்று குறிப்பிட்டுள்ளார்.

Views: - 113

0

0