பத்தல பத்தல…பொங்கல் பரிசு பொருட்கள் பத்தல… கொதிக்கும் கூட்டணி கட்சிகள்.. திமுகவுக்கு புது நெருக்கடி!!!

Author: Babu Lakshmanan
26 December 2022, 8:06 pm
Quick Share

2023-ம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் கொண்டாட 1000 ரூபாய் ரொக்கம் அத்துடன் தலா ஒரு கிலோ சர்க்கரை, பச்சரிசி
ஆகியவை 2 கோடியே 19 லட்சம் அரிசி கார்டு வைத்திருக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்ற உத்தரவை அண்மையில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறப்பித்து இருந்தார்.

திமுக அரசு அறிவித்த இந்த பொங்கல் பரிசு மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளதா?… என்ற கேள்வி விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில் திமுகவின் கூட்டணி கட்சிகளே கூட இதில் திருப்தி அடைந்தது போல தெரியவில்லை.

காங்கிரஸ், விசிக உள்ளிட்ட ஒரு சில கட்சிகள் மட்டுமே இதனை வரவேற்று இருந்தன. அவைகளின் பாராட்டும் கூட பெயர் அளவிற்குதான் இருந்தது.

இதற்கு முக்கிய காரணம் 2022 பொங்கல் பரிசு பொருட்கள் தொகுப்பில் பொங்கல் வைப்பதற்கு தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப் பருப்பு, நெய், செங்கரும்பு ஆகியவற்றுடன் 12 வித மளிகை பொருட்களும் வழங்கப்பட்ட நிலையில் இந்த வருடம் 1000 ரூபாய் சர்க்கரை, பச்சரிசி மட்டும் கொடுக்கப்பட இருப்பதுதான்.

வருகிற பொங்கல் திருநாளுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்குவதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டு இருப்பதாகவும் அதற்காக அவர் அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும் நான்கு மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியான போதே, இந்த பணத்துடன் 2022-ல் வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்களும் சேர்த்தே கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் ஏற்பட்டிருந்தது.

ஆனால் அண்மையில் முதலமைச்சர் ஸ்டாலின் பொங்கல் பரிசை அறிவித்தபோது 19 பொருட்கள் பற்றி எதுவுமே கூறவில்லை. மாறாக பச்சரிசி, சர்க்கரை மட்டுமே வழங்கப்படும் என்று அவர் குறிப்பிடப்பட்டிருந்தார்.

இதனால் அதிமுக அரசு பொங்கல் பரிசுத் தொகையாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கவேண்டும் என்று திமுக எதிர்க்கட்சி ஆக இருந்தபோது எழுப்பிய கொந்தளிப்பு முழக்கத்தை நினைவு படுத்திய அதிமுக, பாஜக கட்சிகள் அதே கோரிக்கையை தற்போது முதலமைச்சர் ஸ்டாலினிடம் எழுப்பியுள்ளன.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன், முன்பு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது 2021ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக அதிமுக அரசு வழங்கிய 2500 ரூபாய் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை நினைவுபடுத்தும் விதமாக “திமுக அரசு ரொக்கமாக அறிவித்திருக்கும் 1,000 ரூபாய் போதுமானதல்ல. குறைந்த பட்சம் 2,500 ரூபாயை பொங்கல் பரிசுத் தொகையாக வழங்க முன்வர வேண்டும். அத்துடன் செங்கரும்பையும் சேர்த்து வழங்க அறிவிப்பு வெளியிட வேண்டும். பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பும் சேர்த்தால், விவசாயிகள் பயன் அடைவர். பொதுமக்களுக்கும் வெளிச்சந்தையில் கரும்பை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படாது” என்று சுட்டிக்காட்டி இருக்கிறார்.

திமுக அரசின் பொங்கல் பரிசு குடும்ப அட்டைதாரர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தவில்லை, பெரிய அளவில் வரவேற்பையும் பெறவில்லை என்பதை உணர்ந்து கொண்டது போல் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தற்போது தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்தி இருக்கின்றன.

இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக அரசு சார்பில், பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 1,000 ரூபாய் ரொக்கம் நியாய விலைக்கடைகள் மூலம் வழங்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறோம்.

அதேநேரம், கடந்த ஆண்டு பச்சரிசி, சர்க்கரை, ஏலக்காய், கரும்பு, நெய் உள்பட 21 பொருட்கள் பரிசுத் தொகுப்பில் இருந்தன. இந்த ஆண்டு பச்சரிசி, சர்க்கரையை மட்டுமே அறிவித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. பொங்கலுக்கு பயன்படுத்தப்படும் அச்சு வெல்லத்தை எதிர்பார்க்கும் நிலையில் “சர்க்கரை” என்பது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.

பொங்கல் விழாவை எதிர்நோக்கி செங்கரும்பு விளைவித்த விவசாயிகளும், இந்தாண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் தேங்காயும் இடம் பெற வேண்டும் என தென்னை விவசாயிகளும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், இடம்பெறவில்லை. எனவே, பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரொக்கம் 1000 ரூபாயுடன், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட
21 பொருட்களுடன், செங்கரும்பு, தேங்காய், மஞ்சள் கொத்து ஆகியவற்றையும் சேர்த்து வழங்கவேண்டும்” என்று உரிமையோடு கோரிக்கை வைத்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அரசு அறிவித்துள்ள பொங்கல் தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரையுடன் செங்கரும்பையும் சேர்க்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை தமிழக அரசு கண்டிப்பாக எடுக்கவேண்டும். நாங்கள் பலமுறை தமிழக அரசை வற்புறுத்திக் கொண்டிருக்கிறோம். மின்சார கட்டணம், சொத்து வரி உயர்வு உள்ளிட்டவற்றை மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் முதலமைச்சரை கேட்டுக்கொள்கிறோம்” என்று தோழமையின் சுட்டுதலாக கூறி இருக்கிறார்.

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டுமே
பொங்கல் பரிசு பொருட்களை கூடுதலாக வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முதலமைச்சர் ஸ்டாலினிடம் வைப்பதற்கு அடிப்படை காரணம் ஒன்று உள்ளது என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

“ஏனென்றால் தமிழக மக்கள் எப்போதுமே ஒரு ஆட்சியுடன் இன்னொரு ஆட்சியை ஒப்பிட்டுப் பார்ப்பதில் மிகுந்த கவனம் செலுத்துவார்கள். குறிப்பாக இலவச திட்டங்கள் அறிவிப்பது போன்ற விஷயங்களில் இந்த ஆர்வம் அவர்களிடம் மிக அதிகமாக இருக்கும். அதைத்தான் இப்போது பொங்கல் பரிசுப் பொருட்களிலும் அவர்கள் பார்க்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

2021-ம் ஆண்டு பொங்கல் திருநாளை கொண்டாட தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களும் பயன்பெறும் வகையில் 2,500 ரூபாய் ரொக்கத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, தலா 20 கிராம் முந்திரி, திராட்சை, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழு நீள செங்கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டத்தை அறிவித்து அதை அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தப்படுத்தியும் காட்டினார்.

அதனால்தான் 2021 மே மாதம் ஆட்சியை கைப்பற்றிய திமுக 2022 ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது கூடுதல் ரொக்கத் தொகையுடன் பொங்கல் வைப்பதற்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களையும் சேர்த்து வழங்கி அசத்துவார்கள் என்று மக்கள் எதிர்பார்த்தனர்.

10 வருடங்களுக்கு பிறகு ஆட்சிக்கு வந்திருப்பதால் நிச்சயம் இதை திமுக அரசு நிறைவேற்றும் என்றும் அவர்கள் கருதினர். ஆனால் 21 பொருட்களை மட்டுமே அப்போது அரசு வழங்கியது. அந்தப் பொருட்களும் கூட தரமற்றவையாக இருந்தன, என கடும் விமர்சனத்திற்கும் உள்ளானது.

இதனால்தான் வரும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக 19 தொகுப்பு பொருட்கள் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

என்றபோதிலும் அதிமுக ஆட்சி காலத்தில் 2019, 2020-ம் ஆண்டுகளிலேயே
பொங்கல் பண்டிகைக்காக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது என்பதால், தற்போது திமுக அரசு அறிவித்திருக்கும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் குடும்ப அட்டைதாரர்களிடையே பெரிய அளவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றே கருதத் தோன்றுகிறது.

தவிர, தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மிகக் கடுமையாக உயர்ந்துள்ளதால் பணத்திற்கான மதிப்பும் குறைந்துபோய் விட்டது.

இந்தக் கணக்கின்படி பார்த்தால் ஆயிரம் ரூபாயின் தற்போதைய மதிப்பு 850 ரூபாய் ஆக இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

நாட்டின் பொருளாதார சூழல் பற்றி சமீப காலமாக மிகுந்த கவலையுடன் பேசும் திமுகவின் கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் இரண்டும் இதை நன்றாகவே புரிந்து கொண்டுள்ளன. அதன் எதிரொலியாகத்தான் கடந்த பொங்கலுக்கு வழங்கியது போல் 21 பொருட்களையும் கொடுக்க வேண்டும், அத்துடன் தென்னை விவசாயிகளின் இன்றைய கஷ்டமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு தேங்காயையும் சேர்த்து வழங்கவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்துகிறது.

திமுக அரசை நம்பி 2023ம் ஆண்டு பொங்கலுக்காக, செங்கரும்பை அதிகமாக சாகுபடி செய்த கரும்பு விவசாயிகள் பெரும் இழப்பை சந்திப்பார்கள். அது ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கு கெட்ட பெயரைத்தான் ஏற்படுத்தும் என்பதால் செங்கரும்பையும் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை மார்க்சிஸ்ட் வைத்திருக்கிறது” என்று அந்த அரசியல் ஆர்வலர்கள் எதார்த்த நிலையை போட்டு உடைக்கின்றனர்.

Views: - 272

0

0