சபரிமலைக்கு நவ.,16 முதல் பக்தர்களுக்கு அனுமதி : என்னென்ன கட்டுப்பாடுகள் தெரியுமா..?
29 September 2020, 12:49 pmதிருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் நவம்பர் 16ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படுவதாக கேரள அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் வீரியமடைந்து வந்தாலும், மத்திய அரசு சில தளர்வுகளை பல்வேறு கட்டமாக அறிவித்து வருகிறது. அந்த வகையில், வழிபாட்டு தலங்களை திறக்க மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கொரோனா கட்டுப்பாடுகளுடன் சபரிமலை ஐயப்பன் கோவில் திறக்கப்பட்ட நிலையில், தொற்று பரவல் காரணமாக கோவில் அடைக்கப்பட்டது. ஆனால், கோவிலில் நடக்கும் பூஜைகள், அபிஷேகங்களுக்கு தடை விதிக்கப்படவில்லை.
கேரளாவில் முன்னெப்போதும் இல்லாத அளவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், கார்த்திகை மாதமும் நெருங்கி வருகிறது. இந்த மாதத்தில் விரதமிருந்து பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் ஐயப்பனை காண வருவார்கள்.
இந்த நிலையில், பக்தர்களின் வசதிக்காக, சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் நவம்பர் 16ம் தேதி முதல் பக்தர்களை அனுமதிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக, 10 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சபரிமலைக்கு வரும் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ள அரசு, இரவு நேரத்தில் கோவிலில் தங்க பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என அறிவித்துள்ளது.
மேலும், பம்பையில் குளிக்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாகவும், எருமேலி, பம்பை உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் குளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதோடு, நிலக்கல், பம்பா பகுதிகளில் ஆன்டிஜென் பரிசோதனைகளை பக்தர்களுக்கு மேற்கொள்ளவும் கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.