ரூ.1560 கோடி சும்மாவா…? சமூக நீதிக்கு பெரும் பிழை இழைத்துள்ள திமுக அரசு… பட்டியல் இன மக்களுக்கு மாபெரும் துரோகம்.. கொந்தளிக்கும் இபிஎஸ்…!!

Author: Babu Lakshmanan
31 July 2023, 7:32 pm
Quick Share

பட்டியல் இனத்தவர்களுக்கு வழங்கக்கூடிய SCSP நிதியில் இருந்து ரூ.1,560 கோடியை பொது மகளிர் மாதாந்திர திட்டத்திற்கு மாற்றுவதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து திமுக வெற்றி பெற்றது. அதில், முக்கியமான வாக்குறுதி பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.1,000 உரிமைத் தொகையாகும். தேர்தல் முடிந்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை நிறைவேற்றாததால் திமுக அரசு மீது பெண்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது.

இதனிடையே, வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஒரு கோடி மகளிருக்கு வழங்குவதற்காக முதற்கட்டமாக ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்தும் உத்தரவிட்டிருந்தார்.

மத்திய அரசால் பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் இருந்து ரூ.1,560 கோடியை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு தமிழக அரசு மாற்றியுள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. குறிப்பாக, பட்டியலின மக்களுக்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதியை முறைகேடாக பயன்படுத்துவதாக இந்திய குடியரசு கட்சியின் சார்பில் தேசிய பட்டியலின ஆணையத்திற்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 15 நாட்களுக்கு விளக்கம் அளிக்கக் கோரி தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பட்டியல் இனத்தவர்களுக்கு வழங்கக்கூடிய SCSP நிதியில் இருந்து ரூ.1,560 கோடியை பொது மகளிர் மாதாந்திர திட்டத்திற்கு மாற்றுவதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- பட்டியல் இனத்தவர்களுக்கு வழங்கக்கூடிய SCSP நிதியில் இருந்து 1560 கோடியை பொது மகளிர் மாதாந்திர திட்டத்திற்காக மாற்றி சமூக நீதிக்கு பெரும் பிழை இழைத்துள்ள இந்த விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்.

மேடைகளிலும் படங்களிலும் மட்டும் போலி சமூகநீதி பேசி வரும் இந்த அரசு உண்மையில் பட்டியல் இன மக்களுக்கு இத்தகைய துரோகம்‌ இழைத்திருப்பது, இவர்களின் உண்மை முகத்தை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது.

பின்தங்கிய நிலையில் இருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும் நிதியை வேற்று பணிகளுக்கு மாற்றுவது பெரும் அநீதி, இந்த அரசு உடனடியாக SCSP நிதியை உரிய துறையில் ஒப்படைக்க வேண்டும் என கண்டிப்புடன் வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.

Views: - 247

0

0